இந்தியாவிலிருந்து வெளியேற இங்கிலாந்து முடிவெடுத்தப் பிறகு அதையொட்டியப் பணிகளுக்காக கடைசி வைஸ்ராயாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்ப்பட்டவர் மவுண்ட் பேட்டன். அதற்கும் முன் அவர் தென்கிழக்காசிய படைத் தளபதியாக செயல்பட்டு இரண்டாம் உலகப்போரில் வெற்றிக்கான தளபதியாகவும் இருந்தவர். ஒருவகையில் இங்கிலாந்து மஹாராணிக்கு உறவினரும் கூட. அவர் இந்திய தலைவர்களை சந்தித்து விவாதங்களை நடத்திக்கொண்டிருந்த 1947 இல் இந்தியாவின் விடுதலைக்குறித்து உலகமே பரபரப்பாக கவனித்துக்கொண்டிருந்தது. மதக்கலவரங்கள், தனி நாட்டுப் பிரச்சனைகள் சமூக மோதல்கள் என பரபரப்பாகத்தான் அந்தக் காலக்கட்டம் இருந்தது. எல்லா தலைவர்களையும், மன்னர்களையும் சந்தித்துக்கொண்டிருந்தார் பேட்டன்.
அச்சமயத்தில் முன்னூறுக்கும் அதிகமான நிருபர்கள் பல நாடுகளிலிருந்து வந்து மவுண்ட் பேட்டனிடம் நின்றார்கள். உள்ளூர் நிருபர்கள் பலரும் உண்டு. அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் திடீரென "இந்தியாவிலிருந்து பிரிட்டன் வெளியேறும் நாள் எது?" என்ற கேள்வியைக் கேட்டார் ஒரு இந்திய நிருபர். எல்லா பத்திரிக்கையாளரும் ஆவலாக பேட்டனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் உண்மையில் அப்படியொரு நாளை இதுவரை யாரும் தேர்வு செய்யவில்லை. காந்தி,ஜின்னா உள்ளிட்டவர்களும் கூட அப்படியெந்த நாளையும் குறிப்பிடவில்லை. ஆனால் மவுண்ட் பேட்டன் நிருபரின் கேள்விக்கு பதிலளிக்க முடிவெடுத்தார். அதற்கும் முன் அந்த நாளை அவர் யோசித்ததும் கிடையாது, ஆலோசித்ததும் கிடையாது. ஆனால் சட்டென மனதில் வந்தது "அந்த நாள் ஆகஸ்ட் 15".
வானொலியில் செய்தியைக்கேட்ட தலைவர்கள், தொண்டர்கள், மக்கள் என எல்லோருக்குமே ஆச்சர்யம். அதைவிட முக்கியமானது, ஜோதிடர்கள் காலண்டரை எடுத்து அது என்ன நாள் என்று பார்க்கத்துவங்கியதுதான். சனி சுக்கிரன் கிரகங்கள் பகையாளி வீட்டில் ராகு ஆட்சி செய்யும் நாளாக ஆகஸ்ட் 15 இருக்கிறது என்று அந்த ஜோதிட சிகாமணிகள் கண்டனம் செய்தார்கள். மவுண்ட் பேட்டன் ஏன் இந்த தேதியை தேர்ந்தெடுத்தார் என்று எல்லோரும் குழப்பமாகவே இருந்தனர். இந்தியாவில் மட்டுமல்ல மவுண்ட் பேட்டனை இந்தியாவுக்கு அனுப்பிவைத்த பிரிட்டனும் குழம்பித்தான் போனது? யார் இந்த தேதியை தேர்வு செய்தது? என்ன முக்கியத்துவம் வாய்ந்தது ஆகஸ்ட் 15?
இரண்டாம் உலகப் போரின் போது. மவுண்ட் பேட்டன் தென்கிழக்காசிய யுத்த தளபதியாக செயல்பட்டு பர்மியக்காடுகளில் கடுமையாகப் போரிட்டவர். தென்கிழக்காசிய வெற்றிகளுக்கு அவர் முக்கியக்காரணம். பர்மியக் காடுகளின் வழியே அவர் மேற்கொண்ட யுத்தத்தை தாக்குப் பிடிக்கமுடியாமல் திணறிய ஜப்பான் அரசு எந்த நிபந்தனையுமின்றி சரணடைந்தது. எனவே, அவர் வாழ்வில் மறக்கமுடியாதது இந்த வெற்றி. ஜப்பான் சரணடைந்த நாள்தான் ஆகஸ்ட் 15. அதைத்தான் தேர்வு செய்தார் மவுண்ட்பேட்டன்.
சோதிடர்களுக்கு அது ராகு கால நாள். ஆனால் மவுண்ட்பேட்டன், இந்திய வரலாற்றின் முக்கியமான தேதியான ஆகஸ்ட் 15 என்பதை தம் முந்தைய வெற்றியின் நினைவுப்பரிசாகத்தான் அளித்துச் சென்றார்.
No comments:
Post a Comment