Monday, August 5, 2019

தேரை எல்லோரும் இழுக்க வேண்டும்.

பெரும் செல்வந்தரும், அரசியல் செல்வாக்குமுள்ள தொழிலதிபருமான ஒருவர், திடீரென தற்கொலை செய்து கொண்டதும்; அந்த சம்பவம் நடக்க காரணமான முன் நிகழ்வுகளும், தொழில் மற்றும் முதலீட்டு உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.


பல தரப்புகளிலும் கோபம் வெளிப்படுகிறது. அரசு முன்னெடுக்கும் வரி மாற்றங்கள், சீர்திருத்தங்கள், நிதி நிறுவன மேலாண்மை சார்ந்த முடிவுகள் ஆகியவை, பல தொழில்களை முடக்கி வருவதாக, பல தரப்புகள், அரசை குற்றம் சாட்டுகின்றன.


பொருளாதாரம் மிகக் கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது என்பதை, அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டாலும், அரசு ஏதாவது அதிரடியான முடிவுகள் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே, அனைவரும் நினைக்கின்றனர்.அடிப்படையில், தொழில்கள், சீர்திருத்த மாற்றங்களை எதிர்கொள்ளத் தேவையான வல்லமையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு அரசு என்ன செய்ய வேண்டும் என்பதில் எந்த வித கருத்து ஒற்றுமையும் இல்லை.


அதேசமயம், தொழில் முனைவோரின் பொறுப்பு பற்றியும் எந்த வித விவாதமும் இல்லை. அனைத்து தரப்பிலும், ஒருவித தேக்க நிலை தான். தேரைக் கொண்டு வந்து, நடு வீதியில் விட்டுவிட்டு, யார் இழுப்பது என்ற பஞ்சாயத்து தான் இப்போது நடக்கிறது.சீர்திருத்தங்கள் நடக்க போகும் திசை யாரும் அறியாததோ, எதிர்பாராததோ இல்லை. நடக்க வேண்டிய பல மாற்றங்கள் அரசியல் காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டு வந்தன.


இந்நிலை, 2014ல் ஓரளவு விலக, தனிப் பெரும்பான்மை அரசு அமைந்ததே காரணம். அப்போதும், அவற்றை பார்லிமென்டில் தடுக்க முடிந்ததால், அவை நடைமுறைக்கு வராது என்று அனைத்து தரப்பும் மெத்தனம் காட்டின.ஆனால், 2017ல் இருந்து சீர்திருத்த வேகம் அதிகரிக்க, அது பலரை நிலைகுலையச் செய்துவிட்டது. 


இருதரப்பிலும், அதாவது, அரசு மற்றும் தொழில் தரப்பில், முன்னேற்பாடு இல்லாதது இதற்கு முக்கிய காரணம்.பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., நடவடிக்கைகள் ஆகியவை வரி ஏய்ப்பு செய்தவர்களையும், ரொக்கப் பரிவர்த்தனை செய்பவர்களையும் பாதித்தது.இதனைத் தொடர்ந்து, கடன் வழங்கும் தொழில்களில் பிரச்னைகள் விஸ்வரூபம் எடுக்கத் துவங்கி, செழிப்பான, வங்கி சாரா நிதி நிறுவன தொழில்களையும் முடக்கி விட்டன. 


இதில் பல நிறுவனங்கள் நெறி தவறி நடந்தன என்பதும், அவற்றின் சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்தது.இப்போது, அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்பது, சமூகத்தின் பெரும் எதிர்ப்பார்ப்பு. அதிலிருந்து அரசால் தப்ப முடியாது என்பதும், இன்றைய யதார்த்த நிலை.வட்டி குறைப்பு, பணப்புழக்க அதிகரிப்பு, கடன் வளர்ச்சி, வரி குறைப்பு ஆகிய நான்கும் அரசு செய்ய வேண்டியவை. 


ஆனால், அதைவிட சமூகம் செய்ய வேண்டியவை மிக முக்கியமானவை. நேர்மையான தொழில்முறைகளைப் பின்பற்றுவது, வரி ஏய்ப்பை தவிர்ப்பது, தொழிலுக்குத் தேவையான முதலீடுகளை முறையான வகையில் அமைத்துக்கொள்வது ஆகியவை தொழில் முனைவோரின் பொறுப்புகள்.எல்லோரும் தேரை இழுத்தால் தான், அது சேர வேண்டிய இடத்தை சேரும். நம் பொருளாதார தேரின் வடம், இப்போது நம் அனைவரின் கையிலும் இருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...