பட்டீஸ்வரம் துர்க்கை வழிபட வாழ்வில் துன்பங்கள் ஓடும் !! இன்பங்கள்கூடும் நல்லதே நடக்கும்
பட்டீஸ்வரம் என்பது கும்பகோணத்துக்கு தெற்கே பழையாறை என்கிற ஊருக்கு நடுவே இருக்கிறது. பழையாறை யாருடைய ஊர் தெரியுமா?
அது இராஜராஜசோழன் வாழ்ந்த ஊர். பிறந்த மண். வளர்ந்த பூமி.
பட்டீஸ்வரம் மிக அழகிய ஒரு கிராமம். மிகமிகத் தொன்மையான ஒரு கிராமம்.
இப்போதும் அங்கு இராஜராஜசோழன் வாழ்ந்த மாளிகை ஒரு மேடு போல இருக்கிறது.
அங்கு சூலங்கள் நட்டு வழிபடுகிறார்கள். மிகப் பெரிய ஒரு ஆலமரம் அங்கு விழுதுவிட்டு படர்ந்திருக்கிறது. அந்த இடத்திற்கு போகும்போதே பழமையான, மிகத் தொன்மையான, பலர் வாழ்ந்து மறைந்த ஒரு இடத்திற்கு போகிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது.
அந்த சோழன் மாளிகை மேட்டுக்கு அருகேதான் இந்த பட்டீஸ்வரம் துர்க்கை கோயில் இருக்கிறது.
பொன்னியின் செல்வனில் வரும் ஆதித்த கரிகாலன் மிகவும் நேசித்த துர்க்கை அந்த பட்டீஸ்வரம் துர்க்கை.. இது சோழர்களின் குலதெய்வம்.
வேறு எங்கோ தனியாக கோயில்கொண்டிருந்த இந்த துர்க்கையை எடுத்து, பட்டீஸ்வரம் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு முன்பாக பிற்காலத்தில் நிறுத்தி வைத்தார்கள். அந்த தனி சந்நிதி இப்பொழுது மிகப்பெரிய தனிக் கோயிலாக மாடங்களுடனும், அழகிய தரையுடனும், சிற்ப வேலைப்பாடுமிக்க தூண்களோடும் திகழ்கிறது. ஆறுகால பூஜையும் அற்புதமாக நடக்கிறது.
இந்த துர்க்கை பார்ப்பதற்கு மிக வனப்போடு இருக்கிறாள். கீழே உள்ள மிகப் பெரிய எருமை தலையில் கால்வைத்து ஊன்றி, எட்டு கைகளோடும் புன்னகை தவழும் முகத்தோடும் சாந்த சொரூபியாக காட்சியளிக்கிறாள்.
ஜெயஜெய தேவி !!
துர்கா தேவி சரணம் !!

No comments:
Post a Comment