Wednesday, April 15, 2020

20 முதல் மூச்சு விடலாம்! ஊரடங்கில் சில துறைகளுக்கு வந்தது தளர்வு.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட, 21 நாள் ஊரடங்கு மேலும், 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊரடங்கில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலகையே பீதிக்குள்ளாக்கியுள்ளது. வைரஸ் பரவலை தடுக்க, பிரதமர், மோடி கடந்த மாதம், 25ல், முதற்கட்டமாக, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். அது, நேற்று முன்தினத்துடன் முடிந்த நிலையில், நாட்டில், வைரஸ் பரவல், தினமும் அதிகரித்து வருகிறது. இதுவரை, 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 300-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

இதையடுத்து, ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, கடந்தவாரம், பிரதமர், மோடி,'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், 'ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்' என, பெரும்பாலான முதல்வர்கள், மோடியிடம் வலியுறுத்தினர்.

இதையடுத்து, நேற்று முன்தினம், 'டிவி' யில் பேசிய பிரதமர், மோடி, மே, 3ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். 'வரும், 20-ம் தேதிக்கு பின், வைரஸ் பாதிப்பு குறைந்த இடங்களில், விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும்; அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படும்' என, தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், நேற்று வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் வரும், 20-ம் தேதிக்கு பின், எந்தெந்த தொழில்கள் செயல்படலாம்; யாருக்கெல்லாம் விலக்கு; மே 3ம் தேதிவரை எந்தெந்த தொழில்கள், இடங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என, அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன் விபரம் வருமாறு:
அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு பயணியர் விமானப் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது
அனைத்து பயணியர் ரயில் போக்குவரத்தும் தடை செய்யப்படுகிறது.
ராணுவ வீரர்கள் பயணிக்கவும், முக்கிய பயணிகளுக்காக மட்டும், ரயில்கள் இயக்கப்படும்.
பஸ் போக்குவரத்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது
தனி மனிதர்கள், மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையே, வாகனங்களில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. மருத்துவக் காரணங்களுக்காக மட்டும் பயணிக்க, அனுமதி வழங்கப்படும்.

மே, 3-ம் தேதி வரை, பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.
மத்திய அரசு அளித்துள்ள விதிவிலக்கு பட்டியலில் இருக்கும் தொழில்களைத் தவிர, மற்ற தொழில்கள், வர்த்தகச் செயல்பாடுகளும், தடை செய்யப்படுகிறது.
மத்திய அரசு அறிவித்துள்ள விதிவிலக்கு பட்டியலில் இருக்கும் சேவைத்துறையைத் தவிர, மற்ற சேவைத்துறை நிறுவனங்கள் செயல்பட, தடை விதிக்கப்படுகிறது.
வாடகைக் கார்கள், ஆட்டோ உட்பட அனைத்து வாகனங்களும் இயக்க தடை. திரையரங்குகள், வணிக வளாகங்கள். உடற்பயிற்சிக்கூடம், விளையாட்டு அரங்குகள், நீச்சல் குளம், பொழுது போக்கு பூங்கா, மதுபான பார்கள், மிகப்பெரிய அரங்கம், மக்கள் கூடுமிடங்கள் ஆகியவற்றுக்கும், 3-ம் தேதி வரை தடை.

அனைத்து சமூக, அரசியல், மதம், விளையாட்டு, கல்வி, கலாச்சார விழாக்கள், கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
அனைத்து விதமான மத வழிபாட்டு தலங்களும் மூடப்படும். துக்க வீடுகளில், இறுதிச்சடங்குகள் நடக்கும் போது, 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது.
ஊரடங்கு காலத்தில், பொது இடங்களில் எச்சில் துப்புவது, கடும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். எச்சில் துப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊரடங்கு முடியும் வரை, புகையிலை பொருட்கள், குட்கா, மது விற்க தடை. தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில், தற்போதைய நிலையே தொடரும்.
மக்கள் வெளியில் செல்லும் போது, முகக்கவசம் அணிவது கட்டாயம்.
வேலை செய்யும் இடங்களிலும், பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது இடங்களில், ஐந்து பேருக்கு மேல் கூடக்கூடாது.


மருத்துவம்:
மருத்துவமனைகள், நர்ஸிங் ஹோம், கிளினிக்குகள், டெலிமெடிசன் அனுமதிக்கப்படும்.
டிஸ்பென்சரி, அனைத்து விதமான மருந்துக் கடைகள், மருத்துவ உபகரணங்கள் விற்கும் கடை, மத்திய அரசின் மக்கள் மருந்தக கடைகள் திறந்திருக்கலாம்.
மருத்துவ சோதனைக் கூடங்கள், மருத்துவ ஆய்வு மாதிரி சேகரிப்பு மையங்கள், கொரோனா பரிசோதனைக் கூடங்கள், ஆய்வு நிறுவனங்களுக்கு அனுமதி.
கால்நடை மருத்துவமனைகள், கிளினிக், கால்நடைகளுக்கான மருந்துகள், தடுப்பூசிகள் விற்பனை செய்யும் கடைகள், சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு அனுமதி.

வைரஸைக் கட்டுப்படுத்த உதவும் சேவையில் இருக்கும் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு, தேவையான பொருட்களை வழங்குவோருக்கு அனுமதி.
மருந்துகள், மாத்திரைகள், தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்கள், 'பேக்கேஜ்' செய்யப்படும் பொருட்கள் தயாரிப்போர், மூலப்பொருட்கள் வழங்கும் நிறுவனங்களுக்கு அனுமதி.

வேளாண் அனைத்து வேளாண் மற்றும் தோட்டக்கலை தொடர்பான பணிகளும் செயல்படலாம். விவசாயிகள், விவசாயக்கூலிகள், வயல்களில் வேளாண் பணிகளில் ஈடுபடலாம்.
விவசாயிகளிடம் இருந்து வேளாண் பொருட்களைக் கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு அனுமதி.
மத்திய, மாநில அரசுகளால் அனுமதி வழங்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட வேளாண் சந்தைகள், கூட்டுறவுச் சந்தைகள் செயல்படலாம்.
வேளாண் தொழிலுக்குத் தேவைப்படும் உபகரணங்களை விற்பனை செய்யும் கடைகள், வேளாண் உபகரணங்களை பழுது நீக்கும் கூடங்களுக்கு அனுமதி.
வேளாண் செயல்பாடுகளுக்கு, வாடகைக்கு இயந்திரங்கள் வழங்கும் நிறுவனங்களுக்கு அனுமதி.
விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி.
மாநிலங்களுக்கு இடையே, மாநிலத்துக்குள், வேளாண் தொடர்பான இயந்திரங்கள், அறுவடைக் கருவிகள் கொண்டு செல்ல அனுமதி.


மீன்பிடித் தொழில்:
மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், மீன் உணவு, படகுகளைச் சரிசெய்தல், மீன்களை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு அனுமதி.
வர்த்தரீதியாக அனைத்து விதமான மீன்கள், மீன் பொருட்கள், மீன் உணவுகளைக் கொண்டு செல்ல அனுமதி.

தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்களில், 50 சதவீதப் பணியாளர்களை வைத்துப் பணியாற்ற அனுமதி.
தேயிலை, காபி, ரப்பர் போன்றவற்றை,'பேக்கிங்' செய்தல், பதப்படுத்துதல், விற்பனை ஆகியவற்றில், 50 சதவீத பணியாளர்களை பயன்படுத்த அனுமதி.

பால் கொள்முதல், பால் பொருட்களைக் கொண்டு செல்லுதல், பால் பதப்படுத்துதல், பால் விற்பனை ஆகியவற்றுக்கு அனுமதி.
கோழிப்பண்ணை, கால்நடை பராமரிப்புப் பண்ணைகளை இயக்க அனுமதி.
கால்நடைகளுக்கு, தீவனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுமதி, அந்த நிறுவனங்களுக்கு சோயா, மக்காச்சோளம் போன்றவற்றைக் கொண்டு செல்லும் நிறுவனங்களுக்கு அனுமதி.
கால்நடை பாதுகாப்பு மையங்கள், குறிப்பாக கோசாலைகளுக்கு அனுமதி.

இந்தப் பணிகளில் ஈடுபடும் அனைவரும், மத்திய அரசு கூறிய வழிகாட்டி நெறிமுறைகளை, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். முககவசம் அணிதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல் அவசியம். இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரும்போது, மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள், நடைமுறையில் இருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை, நீர்த்துப்போகும் வகையில் செயல்படக்கூடாது. இவ்வாறு, உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


அனுமதி:
*விவசாயம் மற்றும் அவை தொடர்பான பணிகள்
*குறிப்பிட்ட தொழிற்சாலை பணிகள்
*டிஜிட்டல் வர்த்தகம்
*சரக்கு போக்குவரத்து
*விவசாய பொருட்கள் விற்பனை
* உரம், பூச்சி மருந்துகள், விதைகள் தயாரிப்பு வினியோகம், விற்பனை
* மீன்கள், பால், பால் பொருட்கள் வினியோகம், விற்பனை
* தேயிலை, காபி, ரப்பர் தொடர்பான பணிகள்
* கிராமப்பகுதிகளில் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல்
* கட்டுமானப் பணிகள்
* நிலக்கரி, எண்ணெய் உற்பத்தி
* ரிசர்வ் வங்கி, வங்கிகள், ஏ.டி.எம்.,கள்,. காப்பீடு நிறுவனங்கள்
* ஆன்லைன் வாயிலாக கற்பித்தல், தொலைதுாரக் கல்வி
* மத்திய, மாநில, உள்ளாட்சி அலுவலகங்கள்


அனுமதியில்லை
* சாலை, விமான, ரயில் போக்குவரத்து
* கல்வி நிறுவனங்கள்
* சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காங்கள்
* அரசியல், சமூக, மத நிகழ்ச்சிகள்
* வழிபாட்டு தலங்கள், கூட்டு வழிபாடு


அலுவலங்களுக்கான விதிகள்:
ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளில், 50 சதவீத ஊழியர்களுடன், குறிப்பிட்ட அலுவலகங்கள் இயங்கலாம் என, குறிப்பிடப்பட்டுள்ளது. அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம், சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.


அதன் விபரம்:
* அலுவலகத்தின் நுழைவாயில், அலுவலக உணவகம், அலுவலகக் கூட்டம் நடக்கும் இடங்கள், கட்டடத்தின் முன் வாயில்கள், லிப்ட்கள்,, கழிவுநீர்க் குழாய்கள் இருக்கும் இடங்கள், கழிவறைகள் உள்ளிட்ட இடங்கள், தொற்று பரவாத நிலையில், சுத்தமாக இருக்க வேண்டும்

* ஊழியர்கள், அலுவலகம் வருவதற்கு, நிறுவனம் சார்பில், தேவையான போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்

* அலுவலகம், தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களில், கிருமிநாசினியை தொடர்ந்து தெளிக்க வேண்டும்

* பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கியிருக்க வேண்டும்

*அலுவலகத்தில் பணியாளர்கள் முககவசம் அணிவதோடு, அலுவலகத்தின் அனைத்து இடங்களிலும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்

* லிப்ட்களிலும், சமூக இடைவெளியை பின்பற்றி, இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே செல்ல வேண்டும்

* அலுவலகக் கூட்டங்களில், 10 நபர்களுக்கு மேல் கலந்துகொள்ளக் கூடாது. கூட்டங்களில் ஒவ்வொருவருக்கும் இடையே, ஆறு அடி இடைவெளி இருக்க வேண்டும்

* ஒவ்வொரு ஷிப்ட்டுக்கும் இடையே, ஒரு மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்

* அலுவலகத்தில், மது பானங்கள், குட்கா, புகையிலை பயன்படுத்தக்கூடாது. வெளி ஆட்களை, அலுவலகத்தினுள் அனுமதிக்கக் கூடாது

* அருகில் உள்ள மருத்துவமனைகள், கிளினிக்குகள் இருக்கும் இடங்கள் குறித்த பட்டியல், அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்

* 65 வயதுக்கு மேற்பட்டவர்களை, வீட்டில் இருந்து வேலை செய்ய, நிறுவனம் அறிவுறுத்த வேண்டும்

* அனைத்து ஊழியர்களும், அரசின், 'ஆரோக்ய சேது' செயலியை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


மாநில அரசுகளுக்கு உத்தரவு:
'ஊரடங்கு காலத்தில், உள்துறை அமைச்சகம் விதித்துள்ள விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்' என, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலர்களுக்கு, மத்திய உள்துறை செயலர், அஜய் பல்லா, எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஊரடங்கு காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், அளிக்கப்பட்டுள்ள விலக்குகள் பற்றி, உள்துறை அமைச்சகம் தெளிவாக அறிவித்துள்ளது. இதை, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதில், அலட்சியம் காட்டுவது தெரிந்தால், அளிக்கப்பட்டுள்ள விலக்குகள் ரத்து செய்யப்படும்.

ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள விலக்குகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு பொருந்தாது. புதிதாக ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டால், அங்கு உடனடியாக விலக்குகளை ரத்து செய்ய வேண்டும். கொரோனா பரவலை தடுப்பதில், மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


20ம் தேதிக்கு பின் அனுமதி:
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவங்கள், மெக்கானிக் கடைகள் இயங்க அனுமதி. கட்டுமான பணிகளுக்கு அனுமதி.

சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி. ஆனால், சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும்.

சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். முககவசம் அணிந்து, தொழிலாளர்கள், சமூக இடைவெளியுடன் பணியாற்ற அனுமதி.

ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்குச் செல்லலாம். முககவசம் அணிவது கட்டாயம்.

மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் நிலையங்கள், இறைச்சிக்கடைகள் செயல்பட அனுமதி.

விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி.

கட்டுமானப் பணி, அது சார்ந்த நிறுவனங்கள், 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.

மக்கள் நெருக்கம் குறைவான பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்கலாம்.

ஊரக பகுதிகளில், தொழில் நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் இயங்கலாம்.

'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்கள் செயல்படலாம். கொரியர், கேபிள், டி,டி.எச்., சேவைகள் இயங்கலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...