Tuesday, April 14, 2020

கட்டுப்பாடுகள் தொடரும்! வரும் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவு.

தமிழகத்தில், வரும், 30ம் தேதி வரை, ஊரடங்கை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், ஏற்கனவே அமலில் உள்ள, அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும். அதேபோல, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சலுகைகளும், மக்களுக்கு மீண்டும் வழங்கப்படும். பிற மாநில தொழிலாளர்களுக்கும், இலவசங்கள் உண்டு என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
TN_Together_AgainstCorona,Corona,TNAgainstCorona,TNGovt,coronavirus,TamilNadu,Covid19,StayHome, Quarantine,lockdown,

'கொரோனா' வைரஸ் தொற்றை தடுக்க, மத்திய அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு, இன்று மாலையுடன் நிறைவடைகிறது. ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பில், மக்கள் இருந்தனர். ஆனால், தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, தினமும் அதிகரித்தபடி உள்ளது. எனவே, நோய் பரவலை தடுக்க, ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என, மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்தது. எனினும், மத்திய அரசின் முடிவை அறிந்து, அதற்கேற்ப முடிவு செய்யலாம் என, தமிழக அரசு விரும்பியது.

ஆலோசனை:

இந்நிலையில், தமிழகத்தில், வரும், 30ம் தேதி வரை, ஊரடங்கை நீட்டிப்பதாக, நேற்று மாலை, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார். அவரது அறிக்கை: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, தமிழகத்தில், மார்ச், 24 மாலை, 6:00 மணி முதல், 31 வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை, மத்திய அரசு, ஏப்., 15 காலை வரை நீட்டித்தது. ஊரடங்கு தீவிரமாக கடைப்பிடிக்கப்படுவதால், தமிழகத்தில், நோய் தொற்று பெரிய அளவில் பரவாது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

கடந்த, 11ம் தேதி, ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, பிரதமர், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, ஆலோசனை நடத்தினார். அப்போது, 'வரும், 30 வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்' என, கூறினேன்; மற்ற முதல்வர்களும், அதே கருத்தை வலியுறுத்தினர். மருத்துவ நிபுணர் குழு, பொது சுகாதார வல்லுனர் குழு பரிந்துரையின்படி, மாநிலத்தில் ஊரடங்கை தளர்த்தினால், நோய் தொற்று அதிகரிக்கக் கூடும்.


இலவசம்:

எனவே, 11ம் தேதி, அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும், 30ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. தற்போது, நடைமுறையில் உள்ள, அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும். ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதால், தமிழகத்தில் உள்ள, ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு, மே மாத பொருட்களான, 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய், எப்போதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை, இலவசமாக வழங்கப்படும்.

கட்டட தொழிலாளர்கள் உட்பட, பதிவு பெற்ற, அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், இரண்டாவது முறையாக, தலா, 1,000 ரூபாய் வழங்கப்படும். பிற மாநில தொழிலாளர்களுக்கு, மே மாதத்திற்காக, 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய், இலவசமாக வழங்கப்படும்.

தமிழகத்தில், காலை, 6:00 மணியில் இருந்து, பகல், 1:00 மணி வரை, 'பேக்கரி'கள் இயங்க தடை இல்லை; அங்கு, 'பார்சல்' விற்பனை மட்டும் அனுமதிக்கப்படும். சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள், கொரோனா நோய் தொடர்பான, சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி:

'டெலி மெடிசன் சொசைட்டி ஆப் இந்தியா' நிறுவனத்தில் பதிவு பெற்ற, சிறந்த மருத்துவர்கள், தொலைமருத்துவ முறை வழியே, சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பர். தமிழகத்தில், ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக இருப்பது தான், அரசுக்கு முக்கியமானது. எனவே, தமிழக அரசால் அறிவிக்கப்படுகிற, அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்றவும்.

'விழித்திருங்கள், விலகி இருங்கள், வீட்டில் இருங்கள்' என்ற, கோட்பாட்டின் அடிப்படையில், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த, அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...