Thursday, December 10, 2020

நம் சமுதாயத்தின் தற்போதய நிலை ! அந்தோ பரிதாபம் !

 (1)அவ வயித்துல வளர்ற குழந்தையை அழிக்கணும்,

(2)இந்த கல்யாணம் நடக்கக்கூடாது,
(3)அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேரவே கூடாது,
(4)அவளை நிம்மதியா வாழ விடமாட்டேன்... இதுபோன்ற வசனங்கள் இல்லாத டிவி சீரியலைக் காட்டினால் லைஃப் டைம் செட்டில்மென்ட் தரலாம்.....
வெறும் அழுது வடியும் குடும்ப சீரியல்களில் முழுகியிருந்த டிவி சேனல்களை விஜய் டிவியின் வருகை மாற்றியது. அதன் நிகழ்ச்சிகள் எல்லாம் ரியாலிட்டி ஷோக்களாக மக்களுடன் நேரடியாக உரையாடும் பாணியை தமிழ்ச் சமுகத்தில் பரவலாக்கியது.
கேபிள் கனெக்ஷன் கொடுப்பதை "வீட்டுல சன் டிவி கனெக்ஷன் இருக்கா" என்றே கேட்டுப்பழகிய ஒரு ஜனக்கூட்டத்தைத் தன் பக்கம் விரைவாக இழுத்து சாதனை புரிந்தது. ஸ்டார் குழுமத்தின் CONTENT MAKING அணியை பாராட்டியே தீரவேண்டும். வளரும் கலைஞர்கள் அனைவரும் விஜய் டிவியை நோக்கிப் படை திரண்டனர். ஜனரஞ்சகமான சேனல் எனப் பெயர் பெற்றது ஸ்டார் விஜய்.
இதுவரை எல்லாம் சுபம்...
பின் மெல்ல ஆரம்பித்தது அந்த விபரீதம்.
"ரியாலிட்டி ஷோ" க்களின் தாக்கம் மக்களிடையே மாற்றத்தை உண்டாக்கத் தொடங்கியது. கலக்கப்போவது யாரில் சிரித்தால் ஒரு பெருங்கூட்டமே மகிழ்ச்சியானது. நீயா நானாவில் சுய வாழ்வின் கொடூரத்தைச் சொல்லி அழுதால் ஒரு திரளான மக்கள் அழுதனர்.
சூப்பர் சிங்கரில் ரிஜெக்ட் ஆகும்போது கண்ணீர் பெருக்கெடுத்தது... குழந்தைகளை குழந்தையாய்ப் பார்க்காமல் போட்டியாளராக மட்டுமே பார்த்து, "நிராகரிப்பு" என்கிற வார்த்தைக்கு அர்த்தம் புரியும் முன்னரே அவர்களை நிராகரித்து, சோக கீதம் இசைத்துக் கண்ணீர் சிந்த விட்டு, வளரும் பிஞ்சை முளையிலேயே உளவியல் பூர்வமாக தாக்கினர்.
சீரியல் திருமணங்களை நிஜத் திருமணம் போல உறவினர்களைக் கூட்டிவைத்துத் திருவிழாவாக்கி உண்மையில் தாலி கட்டி கிறுக்கன் ஆக்கினார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் கிசுகிசுவாகவும் பேசுபொருளாகவும் விஜய் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமே உருவானது. வேறு எந்த சேனலுக்கும் இல்லாத வரவேற்பு அது.
படிப்படியாக முன்னேறி, கலைஞர்களின் தனி மனித வாழ்வின் சம்பவங்களையும் போராட்டங்களையும் சேனலுக்குள் கொண்டு வந்தார்கள். இயல்பிலேயே அடுத்தவர் படுக்கையறைக்குள் எட்டிப்பார்த்து புளகாங்கிதம் அடையும் வக்கிர சமூகம் இந்த போக்கை இருகரம் கூப்பி வரவேற்றது.
ஆர்ட்டிஸ்டுகளின் குடும்பங்களை, குடும்ப விஷயங்களை, அவர்களது மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, சோகம், அழுகை என அனைத்தும் TRP க்கான மூலக்கூறு ஆனது. உச்சமாக கலைஞர்களின் இல்ல இறப்புகளை வியாபாரமாக்கினார்கள். அதனையும் அஞ்சலி நிகழ்ச்சிகளாக்கி TRP ஏற்றினார்கள்.
இதன் நீட்சிதான் விருது விழாக்களில் ஹீரோவான பிறகும் சிவகார்த்திகேயனை அழைத்து மேடையிலேயே அவரது தந்தையின் இழப்பை மீண்டும் மீண்டும் பேசவைத்து அழவிட்டது. கலைஞர்கள் பலரும் இதற்கு தெரிந்தே உடன்படுகிறார்கள்.
கலைஞர்கள் மற்றும் மக்களின் உணர்வுகளை அழுந்தப் பிசைந்து வியாபாரமாக்குகிறது நிர்வாகம். ரியாலிட்டி ஷோக்களில் நிஜ வாழ்வையும் புனைவையும் இணைத்து மனதை பலவீனப்படுத்தி மனநோயாளி ஆக்குகிறார்கள்.
இளகிய மனம் கொண்டவர்கள் தங்களது சொந்த பிரச்சினைக்கும் ரியாலிட்டி ஷோக்களில் வருவது போன்று சினிமாத்தனமான தீர்வு காண முயல்கின்றனர். விளைவு இக்கட்டான சூழலில் ஒழுங்கான முடிவெடுக்க முடியாத நிலை, மன அழுத்தம், போதை, விவாகரத்து முதல் தற்கொலை வரை வந்து முடிகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த உளவியல் விளையாட்டில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. புனைவுதான் எனத்தெரிந்தே நடிக்கும் நடிகர்களும் ஒரு கட்டத்தில் புனைவு எது நிஜம் எது எனப்புரியாமல் குழம்பி இரண்டிலும் சிக்கிச் சின்னாபின்னமாகின்றனர்.
நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி அருவருக்கத்தக்க உதாரணம். அர்ச்சனா தந்தையின் மரணத்தைப்பற்றி நிஷா தன்னிச்சையாக யோசித்து அதை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நோண்டியிருக்க வாய்ப்புகள் குறைவு. எந்தவொரு குரூர மனிதனும் அதனை ஒரு மணி நேரம் செய்யவே மாட்டான். நிர்வாகம் ஏன் அதனைச் செய்யச்சொல்கிறது? TRP எனும் ஒற்றை விஷயத்தைத் தவிர வேறென்ன?
இதில் பாதிக்கப்பட்டது அர்ச்சனா மட்டுமல்ல, நிஷாவின் உளவியலும் சேர்ந்தே. நடிப்பு என்றே வைத்தாலும், இது போன்ற சொந்த வாழ்வு மரணங்களை இணைத்து செய்யப்படும் நிகழ்ச்சியிலிருந்து உளவியல் பூர்வமாக நடிகர்களால் உடனே வெளிவந்துவிட முடியுமா?
நடிகர்களை விடுங்கள், இந்த நிகழ்ச்சியை விரும்பி ஊன்றிப்பார்க்கும் சமூகம் தமது வாழ்வில் குடும்பத்தில் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை டிவி சீரியல்களில் ஏற்படும் நிகழ்ச்சிகளுடன் இணைத்துப் பார்த்து, சுயமாகத் தீர்வு காண முயலாமல் நிகழ்ச்சியில் வருவதைப்போலவே முடிவு எடுத்தால் அதன் விபரீதங்கள் என்ன?
பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோவில் முல்லை பாத்திரம் சார்ந்த நிகழ்ச்சிகள் ஒரு மூன்றாந்தர சினிமாவின் சிற்றின்பக் காட்சிகளுக்கு இணையாக இருந்தது. பின்னூட்டத்தில் ஒருவன் இப்படிக் குறிப்பிட்டிருந்தான், "இப்பதான் அந்த புள்ளைக்கு நிச்சயதார்த்தம் ஆகிருக்கு, இந்த மாதிரி ஸீன் எல்லாம் வெச்சு டைவர்ஸ் வாங்கிக் கொடுத்துடாதீங்கடா" என..
நேற்று தற்கொலை செய்துகொண்ட "முல்லை" சித்ரா, ஹோட்டல் அறையில் தனக்கு நிச்சயமாகியிருந்த வருடன்தான் இருந்ததாக செய்திகள் வருகின்றன. இந்த அனைத்துப் புள்ளிகளையும் இணைத்துப் பார்த்தால் ஒரு சமூக உளவியல் சீரழிவு நடந்துகொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.
நூறு வருடத்திற்கு முன்பு MENTAL STRESS நிலையை மக்கள் கேள்விப்பட்டிருந்தார்களா எனத்தெரியவில்லை. கலைஞர்கள் இதிலிருந்து வெளிவர ஒரே வழி, உளவியல் தாக்குதல் நிகழ்த்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருக்க வேண்டும். மக்களுக்கு இருக்கும் ஒரே வழி இந்நிகழ்ச்சிகளை முழு முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்.
90களில் கூட இது போன்ற நிகழ்ச்சிகள் ஊக்குவிக்கப்படவில்லை. பாலச்சந்தர் பாலுமகேந்திரா போன்றோரின் மக்கள் மனநிலையை மேம்படுத்தும் "வாரம் ஒரு கதை" சொல்லும் சீரியல், ரமணி Vs ரமணி, கிருஷ்ணா காட்டேஜ், சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற நகைச்சுவை சீரியல்கள் தற்போது வருவதே இல்லை. மர்ம தேசம், கணேஷ்-வசந்த் துப்பறியும் கதைகள் என வெரைட்டி காட்டிய டிவி நிகழ்ச்சிகள் தற்போது இல்லை.
ஆனால் இப்போது இருக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஏதோவொரு வகையில் DOMESTIC VIOLENCE நடத்திக்கொண்டு இருக்கின்றன. அவைகள் நடத்துவது ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளை அல்ல, சமூகத்தின் மீதான உளவியல் தாக்குதலை...
நன்றி...!
சிந்தியுங்கள் நண்பர்களே.....
Image may contain: text that says 'TV விஜய் கலைஞர் MEGATV வேந்தர் CAPTAIN புது யுகம் என்றென்றும் புதுமை ZEEதமிழ் தமிழ் Raj The People's Channel Rolimen Polimer MK KTV மக்கள் ம6ண யழுற வண்டும் NEWS AEL sahana Discovery WANNEL தமிழ்'

Comments

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...