பெருமாளின் அவதாரங்களில் இது 4வது அவதாரமாகும்:
தன் தம்பி இரண்யாட்சன் வராகமூர்த்தியால் கொல்லப்பட்டான் என்பதை அறிந்த இரண்யகசிபு கொதித்தெழுந்தான். தேவர்களுக்கு மகாவிஷ்ணு துணையாக இருப்பதால், அவரைக் கொன்று விட்டால், தேவர்களை இலகுவாக வெல்ல முடியும் என்று தீர்மானித்தான்.
தேவர்களுக்கும், விஷ்ணுவுக்கும் பலத்தை அளிப்பது பூலோகத்தில் நடத்தப்படும் யாகங்கள்தான் என்பதை அறிந்த இரண்யகசிபு, எங்கெங்கு யாகங்கள் நடத்தப்படுகின்றனவோ, அந்த இடங்களை எல்லாம் நாசமாக்கினான். முனிவர்களை அடித்து வதைத்தான்.
இதனால், தேவர்கள் அனைவரும் அவதியுற்று, பூலோகத்தில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்கள்.
இரண்யகசிபு பிரம்மனை நோக்கி நீண்டகாலம் தவமிருந்து, எவராலும், எந்த ஆயுதத்தாலும், பகலிலும், இரவிலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் கேட்டான். பிரம்மனும் வரம் அளித்தார்.
இரண்யன், ஆணவம் மிகுந்து, தேவர்களையெல்லாம் அடிமைகளாக்கி, மூன்று லோகங்களையும் ஆட்சி செய்து வந்தான்.
தேவாதி தேவர்கள் எல்லாம் அவனுக்கு அடிபணிந்து வாழ்ந்தார்கள். துன்பத்தைத் தாங்க முடியாமல், தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவர் வெகு விரைவில் இரண்யனைக் கொன்று, அவர்களைக் காப்பாற்றுவதாக அருளினார்.
தேவேந்திரன் இரண்யனைப் பழிவாங்க நினைத்து, இரண்யனின் மனைவி கருவுற்றிருந்தபோது அவளைச் சிலகாலம் ஆசிரமத்தில் வைத்து, நாரதர் மூலம் மகாவிஷ்ணுவின் மகிமைகளை அறிய வைத்தான். இதை அவள் வயிற்றிலிருந்த குழந்தையும் கேட்டு, மகாவிஷ்ணுவின் பக்தனாகியது. அந்தக் குழந்தைதான் பிரகலாதன்.
அனைவரும் இரண்யனையே கடவுளாக வணங்கினார்கள். ஆனால், இரண்யனின் மகன் பிரகலாதன் மகாவிஷ்ணுவையே எப்போதும் போற்றி வணங்கினான். அதைப் பொறுக்க முடியாத இரண்யன், தன் மகன் என்றும் பார்க்காமல் ஆயுதங்களைக் கொண்டு கொல்ல முயன்றான்; தீ மூட்டி அதனுள் தள்ளி விட்டான்; ஆழமான கடலுக்குள் தள்ளினான்; நச்சுப் பாம்புகளை விட்டுக் கடிக்கச் செய்தான். இப்படி எத்தனையோ கொடுமைகளைச் செய்தான்.
ஆனால், எல்லா ஆபத்துகளிலிருந்தும் மகாவிஷ்ணு பிரகலாதனைக் காப்பாற்றினார். "தன்னை எல்லாத் துன்பங்களிலிருந்தும் காப்பவர் ஹரி என்று அழைக்கப்படுகின்ற மகாவிஷ்ணுவேதான்" என்று பிரகலாதன் கூறினான். அதைக் கேட்ட இரண்யன், " அந்த ஹரி எங்கே இருக்கிறான் ? " என்று கேட்டான். அதற்கு பிரகலாதன், " எங்கும் நிறைந்துள்ள இறைவன் இந்தத் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறான் "
இறைவன் எல்லோர் இருதயத்திலும் இருக்கிறான் என்பதற்கு இது மிகச்சிறந்த சான்று. இரண்யனின் இருதயத்திலும் இறைவன் இருக்கிறான்.
இரண்யன் “இந்த தூணில் இருக்கிறனா” என்று கை நீட்டி ஒரு தூணைக் காட்டினான். அப்போது இரண்யன் இருதயத்திலிருந்து அவன் கை வழியாகவே இறைவன் அந்த தூணிற்குள் சென்றார்
இரண்யன் ஆவேசத்துடன், தன் கையிலிருந்த கதாயுதத்தால் அந்தத் தூணை அடித்தான். அப்போது அண்டமே பிளந்து விட்டது போன்ற ஓர் பேரரவம் அந்தத் தூணில் எழுந்தது. அவ்வோசை கேட்டு பிரம்ம தேவாதியர், அண்டங்களே அழிந்தது போல அஞ்சி நடுங்கினர். தன்னிடம் அளவிலா பக்திகொண்ட பாலகன் பிரகலாதனின் சொல்லை மெய்யாக்க பரந்தாமன் அந்தத் தூணைப் பிளந்து வெளிவந்தார்.
அவரது தோற்றத்தைக் கண்ட இரண்யகசிபு அதிர்ந்தான். இது என்ன தோற்றம்? இது மனித உருவிலுமில்லை, மிருக உருவிலுமில்லை. மனித சிங்கம் போல் தெரிகிறதே என நினைத்து திகைத்தான். நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்த ஸ்ரீமந் நாராயணன் தோற்றத்தைக் கண்ட இரண்யன் அச்சமுற்றான். அந்த நரசிம்ம மூர்த்தியின் தோற்றத்தை உற்று கவனித்தான். விண்ணை தொடுவது போன்ற நீண்டு வளர்ந்த நெடுமேனி, பிடறித் தலை மயிர்களால் தடித்த முகம், வீங்கிய கழுத்து, முகத்தில் உருக்கி வார்த்த பொன் போன்ற கண்கள், பெருமலைக் குகை போல திறந்திருக்கும் வாய், அதில் கோரைப் பற்கள், கூர்ந்த வாள் போல் தொங்கும் நாக்கு, தூக்கி நின்ற காதுகள், விரிந்த மார்பு, குறுகிய இடை, கூரிய ஆயுதம் போன்ற நீண்ட நகங்களுடன் கூடிய கைகள். யாரும் அருகே போகப் பயப்படும்படியான தோற்றம்.
ஸ்ரீஹரியின் தோற்றத்தைக் கண்ட அசுரர்கள் நாலாபுறமும் ஓடினர். இதைக் கண்ட இரண்யன் தன்னைக் கொல்ல ஸ்ரீஹரி எடுத்த அவதாரமே இது என உணர்ந்தான். தன் கதையை கையில் ஏந்தி நரசிம்மரை எதிர்கொண்டு மோதினான். எனினும் கதையால் தன்னைப் புடைக்க வந்த கசிபுவை கைகளால் நரசிம்மர் பற்றினார். அவனைத் தன் தொடை மீது வைத்துக் கொண்டு கூர்ந்த தன் நீண்ட நகங்களால் இரண்யகசிபு உடலைக் கீறிக் கிழித்தார். ரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. இரண்யனின் ஆசைப்படியே அவனுடைய மரணத்தை பகவான் நிறைவேற்றினார். மனிதனும் இல்லை மிருகமும் இல்லை இரவும் இல்லை பகலும் இல்லை விட்டிற்கு உள்ளும் இல்லை வெளியேயும் இல்லை பூமியலும் இல்லாமல் ஆகாயமும் இல்லாமல் கையில் எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல் அவனை வதைத்தார். நரசிம்மருடைய முகம் அக்னி பிளம்பாக காணப்பட்டது. அவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாலும் அவரது உக்கிரமான கோபம் தணியவில்லை.
மகாவிஷ்ணுவின் பயங்கரமான நரசிம்ம உருவத்தைக் கண்டு, தேவாதி தேவர்கள் எல்லாரும் அருகில் வரப் பயந்து, தூரத்திலிருந்தபடியே வணங்கினார்கள். பக்த பிரகலாதன் அவர் அருகில் சென்று இனிய பாடல்களைப் பாடி வணங்கினான். அப்போது, ஸ்ரீ நரசிம்மர் தமது கோபம் தணிந்து, அனைவருக்கும் அருள் புரிந்து மறைந்தார்.
நரசிம்ம மூர்த்தியை தியானம் செய்பவர்கள் தம் பகைவர்களை எளிதில் வெல்ல முடியும். ஸ்ரீஹரியை பக்தியோடு அனுகுபவர்கள் வாழ்வில் மேன்மை அடையலாம்.
No comments:
Post a Comment