மூடப்பட்ட மதுக் கடைகளை அரசாங்கம் எதற்காக திறந்திருக்கிறது என்பதற்கான காரணம் எல்லோருமே அறிந்ததுதான்! மக்களின் உயிரை விட, வாழ்வாதாரத்தை விட, குடும்ப நலனை விட அரசாங்கத்தின் வருமானம் மட்டுமே முக்கியமானது எனும் நிலைக்கு தமிழ்நாட்டை திராவிட கட்சிகள் உருவாக்கி வைத்து விட்டன.
குடியினால் எத்தனை குடும்பங்கள் அழிந்தாலும்,எத்தனை உயிர்கள் பலியானாலும்,எத்தனைப் பெண்கள் கணவனை இழந்தாலும்,எத்தனைக்குழந்தைகள் தந்தையை இழந்தாலும் பரவாயில்லை!அரசாங்கத்துக்கு வருமானம் மட்டுமே முக்கியம் என காவல் துறையினரின் கண்காணிப்பில் மது விற்பனையை தொடங்கி விட்டனர். இவ்வாறான செயல்களை இந்தப் புதிய அரசும் செய்யத்துணிந்துள்ளதை காணும் போது எதிர்காலம் கவலைக்குரியதாக மாறுகிறது.
மதுக்கடைகளை அரசு திறக்கவில்லை என்றால் போலி மது, கள்ளச்சாராயம் நுழைந்துவிடும் என கூறும் காரணங்களால் முதலமைச்சர் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை குறையத்தொடங்கிவிட்டன.
பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள மாற்று வழிகளை கையாண்டு மதுக்கடைகளை தமிழ்நாட்டில் இருந்து நிரந்தரமாக மூடிவிட்டால் முதலமைச்சர் அவர்களின் அரசியல் வாழ்வில் இதுவே மணிமகுடமாகத்திகழும்! அவரை மக்கள் என்றென்றும் போற்றுவார்கள்!!
மக்கள் உயிரோடு இருந்தால்தான் வருமானம் கிடைக்கும் என்பதையும் முதல்வர் உணர வேண்டும்!

No comments:
Post a Comment