Wednesday, July 28, 2021

அ.தி.மு.க.,வை யாராலும் கைப்பற்ற முடியாது: ஓ.பி.எஸ்.,

 ''அ.தி.மு.க.,வை யாராலும் கைப்பற்ற முடியாது,'' என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., தெரிவித்தார்.

சட்டசபை தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் போடி எம்.எல்.ஏ., அலுவலகம் முன் ஓ.பி.எஸ்., தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அ.தி.மு.க., ,கைப்பற்ற முடியாது; ஓ.பி.எஸ்.,


பின் அவர் கூறியதாவது:

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மூத்த தலைவர்கள் 500க்கும் மேற்பட்ட பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் தந்து ஆட்சியை பிடித்துள்ளனர். மூன்று மாதங்களாகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தி.மு.க.,வின் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் துவங்கப்பட்டுள்ளது.


பிரதமர் பாராட்டு



தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி சிறப்பான ஆட்சியாக செயல்பட்டு பிரதமர் மோடியால் பாராட்டப்பட்டது. தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
மேகதாது அணை கட்டுவதை அ.தி.மு.க., அனுமதிக்காது. கர்நாடகா அரசு அணை கட்டுவதை கைவிட வேண்டும் என பிரதமரிடம் தெரிவித்துள்ளோம்.இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் விரட்டியடிக்கப்படுவது, படகு சேதப்படுத்தப்படுவது தொடர்பாகவும், கொரோனா தடுப்பூசி தமிழகத்திற்கு கூடுதலாக வழங்கவும், மதுரை எய்ம்ஸ் குறித்தும் பிரதமரிடம் நானும், எதிர்க்கட்சி தலைவரும் பேசியுள்ளோம்.

தி.மு.க., தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் மக்களிடம் குறைகளை கேட்டு அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது.
இந்த அதிகார துஷ்பிரயோகம் தமிழகத்தில் தலைதுாக்க ஆரம்பிப்பதை தடுக்க சட்டசபையில் குரல் கொடுப்போம்.

இரண்டு முறை முக்கியமான வேலை இருந்ததால் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஆஜராக முடியவில்லை. அதன் பின் இரண்டு முறை தள்ளி வைத்து விட்டனர். தற்போது மருத்துவமனை, உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளது. அது நீங்கி விசாரணை துவங்கியதும் முதல் ஆளாக ஆஜராவேன்.அ.தி.மு.க.,வை பொறுத்தவரை தனிப்பட்ட நபரோ, தனிப்பட்ட குடும்பமோ அதிகாரம் செலுத்த முடியாத நிலையில், நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளோம். அ.தி.மு.க.,வை யாராலும் கைப்பற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.


அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு: இ.பி.எஸ்.



''வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்போடு உள்ளனர்,'' என, முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., கூறினார். தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து செயல்படுத்தக் கோரி, தமிழகம் முழுதும் அ.தி.மு.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள தன் வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., நிருபர்களிடம் கூறியதாவது:

சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த 505 அறிவிப்புகளில், 'நீட்' தேர்வு, கல்வி கடன் ரத்து, குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாதந்தோறும் மின் கணக்கீடு உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் தி.மு.க., அரசு இதுவரை நடைமுறைப் படுத்தவில்லை.

பொய் வாக்குறுதிகளை அளித்து, தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களாகியும், தி.மு.க., அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதால் தான் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்னைக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம். தமிழகத்தில் அனைத்து ஜாதியினருக்கும் உரிய முறையில் இடஒதுக்கீடு கிடைக்க, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை நடத்த அரசு முன்வர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


போடியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்



சட்டசபை தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் போடி எம்.எல்.ஏ., அலுவலகம் முன் பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 100 க்கும் மேற்பட்ட பொய்யான வாக்குறுதிகள் அளித்து, அதற்கான திட்டங்கள் செயல்படுத்தாத தி.மு.க., அரசை கண்டித்தும், மேகதாது காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை கர்நாடகா அரசு கை விட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...