Friday, June 17, 2022

" உதவி ".

உதவி செய்பவர், உதவி பெற்றுக் கொண்டவர், உதவி என்ற மூன்று இருக்கிறது.

இதில், உதவியின் அளவை எப்படி மதிப்பிடுவது? உதவி செய்தவரை வைத்தா, உதவி பெற்றுக் கொண்டவரை வைத்தா?
உதவியின் அளவு பெற்றுக் கொண்டவரின் தன்மையைப் பொறுத்து என்கிறார்.
சிலர் இருக்கிறார்கள்...என்ன உதவி செய்தாலும், "என்ன சார் பெரிய உதவி செஞ்சிட்டார்...அவருக்கு இருக்கிற பணத்துக்கு இதெல்லாம் ஒரு உதவியே கிடையாது...இன்னும் எவ்வளவோ செய்யலாம், சரியான கஞ்சன்" என்று உதவியைப் பெற்றுக் கொண்டு, உதவி செய்தவரை ஏளனம் செய்பவர்களும் இருக்கிறார்கள். அஃது அவரின் தன்மை.
இன்னும் சிலர், கொஞ்சம் உதவி செய்தாலும், "மகராசன், சரியான நேரத்தில் உதவி செய்தான். அவனுக்கு ஒரு கோவில் கட்டிக் கும்பிடணும்" என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அஃது அவன் இயல்பு.
நாம் ஒருவரிடம் ஒரு உதவியைப் பெற்றுக் கொண்டால், அதனால் நமக்கு என்ன நன்மை, பயன், என்று பார்க்க வேண்டுமே தவிர, உதவி செய்தவனுக்கு அது பெருசா, சிறுசா என்று ஆராயக் கூடாது.
இன்றும் சில மாணவர்கள் சொல்வதைக் கேட்டு வருந்துகிறேன் "என்ன பெரிய ஆசிரியர். சும்மாவா சொல்லிக் கொடுக்கிறார்.சம்பளம் வாங்கிக் கொண்டு தானே சொல்லிக் கொடுக்கிறார். அந்த சம்பளம் யார் கொடுத்தது ? நான் கட்டிய fees இல் இருந்து அவருக்கு சம்பளம் கிடைக்கிறது" என்று பேசுகிறார்கள். "இவர் இல்லாட்டி, இன்னொரு ஆசிரியர்" என்றும் பேசுகிறார்கள்.
ஆசிரியரைப் பொறுத்தவரை அஃது என்னவோ சின்ன விஷயம்தான். அதே பாடத்தைத்தான் அவர் வருடா வருடம் சொல்லிக் கொடுக்கிறார். அஃது அவருக்குப் பெரிய விஷயம் அல்லதான். ஆனால், மாணவனுக்கு அஃது எவ்வளவு பெரிய உபகாரம்? அந்த அறிவின் பயனைப் பெற்றுக் கொண்ட மாணவன் சிந்திக்க வேண்டும்.
"எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்" என்று தமிழ் பேசுகிறது.
அறிவித்தவன் என்றால் ஆரம்பப் பள்ளி ஆசிரியர். அ ஆ சொல்லித் தந்தவர். ABCD சொல்லித் தந்தவர். அவர் இறைவனுக்கு சமம் என்கிறது தமிழ்.
ஒரு பாட்டில் இரத்தம் ஒன்றும் பெரிய விலை கிடையாது. சாதாரண நேரத்தில் வாங்கி விடலாம். ஆனால், நாம் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது, யாராவது ஒரு பாட்டில் இரத்தம் கொடுத்தால், அதைப் பணத்தைக் கொண்டு மதிப்பிடக் கூடாது.
பெற்றுக் கொண்டவரின் சால்பு என்கிறார். சால்பு என்றால் பெருந்தன்மை, உயரிய மனம் என்று கொள்ளலாம்.
முட்டாளுக்கு என்ன செய்தாலும் பெரிதாகத் தெரியாது.
அறிவு உள்ளவர்களுக்கு திணைத் துணை செய்யினும் அதை பனைத் துணையாகக் கொள்வர்.
பாடல்
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து
பொருள்
உதவி வரைத்தன்று உதவி = ஒரு உதவியின் அளவு அந்த உதவியைப் பொறுத்து அல்ல
உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து = உதவி செய்யப்பட்டார் சால்பின் தன்மையைப் பொறுத்தது.
பத்து மில்லுக்கு முதலாளியாக இருக்கும் ஒருவருக்கு ஒரு வேட்டி தானம் தந்தால் அது பெரிய விஷயம் இல்லை.
உடுத்தவே துணி இல்லாமல், கிழிந்த வேட்டியைக் கட்டிக் கொண்டு, மானத்தை மறைக்கப் போராடும் ஒரு ஏழைக்கு ஒரு வேட்டி கொடுத்தால் அஃது எவ்வளவு உயர்ந்தது?
கொடுத்தது என்னவோ ஒரு வேட்டிதான். அதன் மதிப்பு பெற்றுக் கொண்டவரின் தன்மையைப் பொறுத்தது.
நாம், எப்போது ஓர் உதவியைப் பெற்றுக் கொண்டாலும், அஃதை உயர்வாக நினைத்துப் பழக வேண்டும். எவ்வளவு உயர்வாக நினைகிறோமோ அவ்வளவு நம் நிலை உயர்ந்து நிற்கிறது என்று பொருள்.
எவ்வளவு சிந்தித்து இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...