'தேர்தலில் நடுநிலை வகிப்பேன்' எனக் கூறிய சோனியா, கட்சியை தன் முழு கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து வைத்திருப்பதற்காக, கடைசி நேரத்தில் தன் ஆதரவாளர் மல்லிகார்ஜுன கார்கேவை, சசி தரூருக்கு எதிராக களம் இறக்கி, நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இதனால், காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்வலை ஏற்பட்டுள்ளது.
காங்., தலைவர் தேர்தலில், ராகுல் போட்டியிடவில்லை என்பது உறுதியானதும், களத்தில் குதிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறி, பல தலைவர்கள் பெயர்களும், ஊடகங்களில் அடிபடத் துவங்கின. முதல் ஆளாக கேரள மாநிலம், திருவனந்தபுரம் எம்.பி.,யான சசி தரூர், தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்து, சோனியாவை நேரடியாக சந்தித்து பேசினார்.அப்போது, 'யார் பக்கமும் நிற்க மாட்டேன்; புதிய தலைவருக்கான தேர்தலில் நடுநிலை வகிப்பேன்' என, சோனியா வாக்குறுதி அளித்தார். இருந்தாலும், சோனியாவின் குடும்பம் மற்றும் அவரது விசுவாசிகள் உஷாராகத் துவங்கினர்.ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிடம் பேசி, அவரை சோனியாவின் ஆசி பெற்ற மேலிட வேட்பாளராக நிறுத்த ஏற்பாடானது. அவரோ, கட்சித் தலைவராக, சோனியா - ராகுலின் அடிமையாகச் செயல்படுவதை விட, மாநிலத்தில் உள்ள அதிகாரமே சிறந்தது எனக் கருதி, தன் ஆதரவாளர்களை வைத்து அரங்கேற்றிய நாடகத்தால், அனைத்து ஏற்பாடுகளும் தவிடுபொடியாகின.
இதையடுத்து, வேறொரு நபரை தேடத் துவங்கிய சோனியா தரப்பு, கமல்நாத்தில் துவங்கி, முகுல் வாஸ்னிக், திக்விஜய் சிங் என பலரது பெயர்களையும் பரிசீலித்தும், ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்தது.சோனியா குடும்பத்தைத் தாண்டி, வேறொரு நபரின் கட்டுப்பாட்டுக்கு கட்சி போனால், நிர்வாகம் கைமீறி விடும் எனக் கருதி, நேற்று முன்தினம் நள்ளிரவையும் தாண்டி நடந்த ஆலோசனையின் முடிவில், மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து, சசி தரூரை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்து இருந்த திக்விஜய் சிங் அவசரமாக அழைக்கப்பட்டு, தன் முடிவை வாபஸ் வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.
பின், ஏற்கனவே அறிவித்திருந்தபடி, வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, சசி தரூர் காலை 11:00 மணிக்கு தன் ஆதரவாளர்களுடன், மேளதாளங்கள் முழங்க, கழுத்தில் மாலைகளை அணிந்தபடி தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.தேர்தல் பணிக்குழு தலைவர் மதுசூதன் மிஸ்த்ரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக வந்தபோது, அவரது பேனா கை நழுவி கீழே விழுந்தது. அவரது ஆதரவாளர் கீழே குனிந்து அதை எடுத்துக் கொடுத்தார். அதை மற்றவர்கள் அபசகுனமாகக் கருதினாலும், சசி தரூர் அதைப் பொருட்படுத்தாமல் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முக்கிய தலைவர்கள், அறிமுகமான முகங்கள் என யாருமே சசி தரூர் உடன் இல்லை. கட்சி அலுவலக வளாகத்தில், அனைத்து தலைவர்களும் இருந்தனர்.அதே நேரத்தில் சில மணி நேரம் கழித்து மல்லிகார்ஜுன கார்கே வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது, அசோக் கெலாட், திக்விஜய் சிங், பவன்குமார் பன்சல் என, மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். வேட்பு மனுவில் ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட, 30 தலைவர்கள் முன்மொழிந்தனர்.
இப்படி கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் உடன் வர வேண்டுமென்றும், அவ்வாறு செய்வதன் வாயிலாக, இவர் தான் தலைமையின் வேட்பாளர், சோனியா - ராகுல் ஆதரவு இவருக்குத் தான் என்பதை மறைமுகமாக உணர்த்த வேண்டுமென, கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்திருந்தது. வேட்பு மனு தாக்கல் சம்பவங்களில் இது அப்பட்டமாக தெரிந்தது. வேடிக்கை என்னவெனில், 'ஜி 23' குழுவின் முக்கிய உறுப்பினர்களாக இருந்து, சோனியாவுக்கு எதிராக கையெழுத்து போட்ட ஆனந்த் சர்மா, பூபிந்தர் சிங் ஹூடா, மணீஷ் திவாரி, பிரித்விராஜ் சவுகான் என எல்லாருமே, மல்லிகார்ஜுன கார்கே பின் அணிவகுத்தனர்.
சசி தரூர் தற்போது தனித்து விடப்பட்டுள்ளதால், சமமான போட்டி இருக்காது என்றே தெரிகிறது. 'தேர்தலில் நடுநிலை வகிப்பேன்' என்று வாக்குறுதி அளித்த சோனியாவின் தந்திரம், தற்போது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.தலைவராக இருந்த சீதாராம் கேசரியை, நியாயத்திற்கு புறம்பாக அதிரடியாக வெளியேற்றி, கட்சியை சோனியா கைப்பற்றியது முந்தைய வரலாறு.அதே பாணியில், கட்சியை தன் முழு கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து வைத்திருக்க, சோனியா தன் தீவிர விசுவாசியான மல்லிகார்ஜுன கார்கேவை வேட்பாளராக களம் இறக்கியுள்ளது, காங்., வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்த பின், மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:காந்தி, நேரு ஆகியோரின் கோட்பாடுகளை உள்வாங்கி, காங்., கொள்கைகளை சிறு வயது முதல் கடைப்பிடித்து, அவற்றை பிரசாரம் செய்தவன் என்ற அடிப்படையில் களத்திற்கு வந்துள்ளேன்.தேர்தலில் போட்டியிடும்படி என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி. வரும் 17ல் முடிவு தெரியும். நான் வெற்றி பெறுவேன் என உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ஜார்க்கண்டை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.திரிபாயும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.இதனால் காங். தலைவருக்கான தேர்தலில் மும்முனைப்போட்டி நிலவுகிறது.
நான் தேர்வானால் மட்டுமே
மாற்றங்கள் நிகழும்!சசி தரூர் கூறியதாவது:பீஷ்மரைப் போன்றவர் மல்லிகார்ஜுன கார்கே. அவர் மீது பெரிதும் மதிப்பு வைத்துள்ளேன். இதற்காக போட்டியிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலில் போட்டியிடும்படி, நாடு முழுதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் என்னை வற்புறுத்தி உள்ளனர். தலைமையின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யாரும் நிறுத்தப்பட மாட்டார்கள் என சோனியா வாக்குறுதி அளித்துள்ளார். அவரது குடும்பம், இந்த தேர்தலில் நடுநிலை வகிக்கும் என நம்புகிறேன்.கட்சியின் எதிர்கால நலனுக்காக, என் யோசனை மற்றும் எதிர்கால கனவுகளை முன்வைப்பேன். மல்லிகார்ஜுன கார்கே தேர்வானால், அது தற்போதைய தலைமையின் தொடர்ச்சி தான்; நான் தேர்வானால் மட்டுமே புதிய மாற்றங்கள் நிகழும்.இவ்வாறு அவர் கூறினார்.
நீடிக்கிறது குழப்பம்
'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற அடிப்படையில் தான் அசோக் கெலாட், முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. அதனால் தான் குழப்பமே நடந்தது. ஆனால், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே, அப்பதவியை ராஜினாமா செய்தாரா, இல்லையா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. 'அசோக் கெலாட்டிற்கு ஒரு நியாயம், இவருக்கு ஒரு நியாயமா?' என்ற குரல்களும் எழுகின்றன.
மன்னிப்பு கோரினார் தரூர்!
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் அக்கட்சி எம்.பி., சசி தரூர், தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதில், இந்திய வரை
படம் வெளியிடப்பட்டு இருந்தது. அந்த படத்தில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இடம்பெறவில்லை.இது சர்ச்சையானது. சமூக வலைதள பயனாளர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். இதை தொடர்ந்து திருத்தப்பட்ட வரைபடத்தை வெளியிட்ட சசி தரூர், 'யாரும் வேண்டுமென்றே இதுபோல செய்யமாட்டார்கள். தேர்தல் அறிக்கையை வடிவமைத்த குழுவினர் தவறு செய்துவிட்டனர். தவறு உடனடியாக திருத்தப்பட்டுவிட்டது. அதற்காக மன்னிப்பு கோருகிறேன்' என, தன் சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.