Wednesday, September 28, 2022

ஈ.வெ.ரா., போட்ட பிச்சையா? அமைச்சர் பொன்முடிக்கு பதிலடி!

'பட்டியலின மக்கள் சாலையில் சுதந்திரமாக நடக்க, ஈ.வெ.ரா., தான் காரணம்; அது, அவர் போட்ட பிச்சை என, நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.
எனவே, அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நீக்க வேண்டும்.''இல்லையெனில், தி.மு.க.,வும், தமிழக அரசும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்,'' என, தலித் இன விடுதலை போராளி இரட்டை மலை சீனிவாசனின் பேத்தி நிர்மலா அருள் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

ஈ.வெ.ரா., போட்ட பிச்சையா? அமைச்சர் பொன்முடிக்கு பதிலடி!

அவர் அளித்த பேட்டி:சமீப காலமாக, பட்டியல் இன மக்களை, தமிழக அமைச்சர்கள் கேவலப்படுத்தி பேசுவதை வாடிக்கையாக வைத்துஉள்ளனர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த தி.மு.க.,வின் தென்காசி தொகுதி எம்.பி., தனுஷ்குமாரை, நிற்க வைத்தே பேசி அவமானப்படுத்தி உள்ளார் வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன். ஈ.வெ.ரா.,வை பெருமைப்படுத்துவதாக நினைத்து, 'பட்டியல் இன மக்கள் சுதந்திரமாக சாலையில் நடமாடுவது, ஈ.வெ.ரா., போட்ட பிச்சை' என, அமைச்சர் பொன்முடி அநாகரிகமாக பேசி, ஒட்டுமொத்த பட்டியல் இன சமூகத்தையும் அவமானப்படுத்தி உள்ளார்.
உண்மையில் என்ன நடந்தது என்பதை பார்க்க வேண்டும். கடந்த 1924ம் ஆண்டு ஜூன் 25ல், என் தாத்தா இரட்டை மலை சீனிவாசன், சட்டசபையில் தீண்டாமை ஒழிப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் தான் 1925ம் ஆண்டு ஏப்., 25ல் சட்டமானது. இதனால், பட்டியல் இன மக்கள் பொது சாலைகளில் நடக்கவும், பொது கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், சத்திரங்கள் மற்றும் பொது கட்டடங்களை உபயோகிக்கவும் முடிந்தது.
இந்த வரலாற்றை மறைத்து, அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். ஜாதி காழ்ப்புணர்வுடன் அவர் பேசியது கண்டிக்கத்தக்கது. சமூக நீதியுடன் கூடிய 'திராவிட மாடல்' ஆட்சி நடத்துவதாக கூறும் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, ராமச்சந்திரன் மீது கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மோசமான எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
கடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில், பட்டியல் இன மக்கள் பெரும்பாலானோர், தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளித்தனர். அதனால், அக்கூட்டணி வெற்றி பெற்றது. அந்த மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை; கேவலப்படுத்தாமல் இருக்கலாம் அல்லவா? எனவே, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்கும் வரை ஓய மாட்டேன்.
ஒருவேளை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் தக்க பாடம் புகட்டப்படும். ஈ.வெ.ரா.,வுக்கு முன்னோடி தலைவர்களான அயோத்திதாச பண்டிதர் மற்றும் இரட்டை மலை சீனிவாசன் ஆகியோரின் பட்டியல் இன மக்கள் உரிமை, பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை, தி.மு.க., தலைவர்கள் மறைக்க முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...