Wednesday, September 28, 2022

இணைய வழி பட்டா மாற்றம் ஏமாற்றமே!

 இணைய வழி சேவை வாயிலாக, பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் துவக்கி வைத்தார். இந்த சேவையின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதற்கு, என் அனுபவத்தை, 'தினமலர்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...நான், அரியலுார் மாவட்டம், தேவமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவன். தகப்பனார் சுயமாக சம்பாதித்த நிலங்களை, உயில் சாசனம் வாயிலாக எனக்கு வழங்கி உள்ளார். தந்தை இறந்த பின், அவர் எழுதி வைத்த உயிலின் அடிப்படையில், எனக்கான நிலங்களுக்கு தனிப்பட்டா வழங்க கோரி, உடையார்பாளையம் வட்டாட்சியருக்கு, 2020ல் மனு அளித்தேன்; ஆனால், எனக்கு பட்டா வழங்கவில்லை. பட்டா கிடைக்காததால், உயர் அதிகாரிகளிடம் தபால் வாயிலாகவும், நேரடியாகவும், ஜமாபந்தி எனப்படும், வருவாய் தீர்ப்பாயத்திலும் பல முறை முறையீடு செய்தேன்; பலனில்லை. இணைய வழி சேவை மையம் வாயிலாகவும் விண்ணப்பித்திருந்தேன். இணைய வழியாக மனு செய்தாலும், வேண்டுமென்றே நிராகரித்து விடுகின்றனர்; அதற்கான காரணத்தையும் தெரிவிப்பதில்லை. இதனால், பட்டா வாங்க முடியாத நிலைக்கு, இன்று வரை தள்ளப்பட்டு உள்ளேன்.காவல் துறையில் கண்ணியமான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நான், ஓய்வூதியத்தில் வாழ்க்கை நடத்துவதால், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க பணமும் இல்லை; மனமும் இல்லை. லஞ்சம் கொடுக்காத காரணத்தாலும், பட்டா மாற்றம் செய்து தராமல், வருவாய்த் துறையினர் இழுத்தடிக்கின்றனர். இணைய வழி சேவை என்ன, எந்த வகையான சேவையை ஏற்படுத்தி தந்தாலும், லஞ்ச பேர்வழிகள் நிர்வாகத்தில் இருக்கும் வரை, ஒரு ஆணியை கூட அகற்ற முடியாது என்பது தான் நிதர்சனம். வருவாய்த் துறையில் பட்டா மாறுதல், ஜாதி சான்று, வருமான சான்று போன்றவற்றை, 'லஞ்சம் கொடுக்காமல் பெற்றேன்' என்று, யாராவது ஒருவரால் கூறமுடியுமா? லஞ்சம் வாங்கி பிடிபடும் வருவாய்த் துறை அதிகாரிகள் பற்றி, 'அடங்க மாட்றாங்கய்யா' என்ற தலைப்பில், நம் நாளிதழில், செய்திகள் வராத நாளே இல்லை என்ற நிலைமை உள்ளது.

அரசின் திட்டங்கள் எளிதாகவும், விரைவாகவும் மக்களை சென்றடையவும், லஞ்சத்தை ஒழிக்கவும், அரசு பணிகளில் முறைகேடுகளை தவிர்க்கவுமே, அரசு மக்களுக்கு இணையதள சேவை வசதிகளை ஏற்படுத்தி தருகிறது. என்ன தான் இணைய வழி சேவையை அரசு ஏற்படுத்தி தந்தாலும், லஞ்சம் வாங்குவது நின்று விடவில்லை; குறைந்து விடவுமில்லை. 'அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒழுங்காக பணி செய்யவில்லை என்றால், சர்வாதிகாரியாக மாறுவேன்; சாட்டையை கையிலெடுப்பேன்' என்றெல்லாம், முதல்வர் ஸ்டாலின் மேடைகள் தோறும் 'பீலா' விட்டு வருகிறார். அந்த முதல்வர், வருவாய்த் துறை பக்கமும் சாட்டையை சுழற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு. இல்லையெனில், இணைய வழி பட்டா மாற்றம் என்பது, எல்லாருக்கும் ஏமாற்றமாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...