Tuesday, September 27, 2022

ஜெய்சங்கர். சில நினைவுகள்.

 ஜெய்சங்கர் நடித்த ஒரு நாடகத்தைப் பார்க்க அப்போதைய சூப்பர் ஸ்டாராக இருந்த எம்ஜிஆர் வந்திருந்தார்...

அவரை எப்படியும் கவர்ந்து விட வேண்டும் என்று ஜெய்சங்கர் ஆவலுடன் நினைத்திருந்தார்...
அன்று நடித்துக் கொண்டிருந்த ஜெய்சங்கருக்கு ராஜா வேஷம்... ஒரு வசனத்தை பேசிவிட்டு சிம்மாசனத்தில் அமர வேண்டும் ஆனால் அந்த சிம்மாசனத்தில் ஒரு கால் உடைந்து இருந்தது..
இதை கவனிக்காமல் ஜெய்சங்கர் அதில் சென்று அமர , நிலை தடுமாறி கீழே விழுந்தார்..
அரங்கமே சிரித்தது....
சட்டென்று சுதாரித்துக்கொண்ட ஜெய்சங்கர் சமயோசிதமாக அவையை பார்த்து இப்படி சொன்னார்,
என்னை எப்படியாவது வீழ்த்திவிட எதிரிகள் செய்யும் சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று...
நான் அஞ்சமாட்டேன்.. என்றார்..
அரங்கம் அதிர கைதட்டுகள் கேட்டன..
அதில் முதல் கைதட்டு எம்ஜிஆர் உடையது..
பின்னர் பல முயற்சிகளுக்குப் பின் சினிமாவில் முதல் பட வாய்ப்பு பகலும் இரவும் மூலம் இவருக்கு கிடைத்தது...
வெறும் சங்கர் ஆன இவரை அந்த பெயருக்கு முன் ஜெய் என்று சேர்த்து ஜெய்சங்கர் ஆக அறிமுகப்படுத்தியவர் அந்த படத்தின் இயக்குனர் ஜோசப் அவர்கள்...
சரி.. முதல் மூன்று படங்களும் வெற்றி....
அப்போதைய சூப்பர் ஸ்டார்களான எம்ஜிஆர் மற்றும் சிவாஜியின் வயது கிட்டத்தட்ட 50...
ஜெய்சங்கருக்கு அதில் பாதி வயதே ஆகியிருந்தது..
மிக இளம் வயது நாயகனாக களத்தில் இருந்தார்...
அவர் சரியாக. தன் வளர்ச்சி குறித்து மட்டும் சிந்தித்து இருந்தால்... அதை திட்டமிட்டு,
அதனை செயல்படுத்தி இருந்தால் அடுத்த ஏழு எட்டு ஆண்டுகளில் ஒரு சூப்பர் ஸ்டாருக்கு இணையான இடத்தில் இருந்திருப்பார் ....
அதற்குரிய அழகும், திறமையும், வசீகரமும் அவரிடத்தில் இருந்தது...
ஆனால் அவரது பார்வையை வேறு பக்கம் இருந்தது.
பொதுவாக சினிமா துறை உட்பட எந்த துறையாக இருந்தாலும் அதில் மூன்று அடுக்குகள் இருக்கும்..
ஒன்று மேல்தட்டு இன்னொன்று நடுத்தட்டு
இன்னொன்று கீழ்தட்டு
சினிமாவில், எம்ஜிஆர் , சிவாஜி , ஜெமினி ஆகிய மூவரும் மேல்தட்டு மற்றும் நடுத்தட்டு களில் மட்டுமே புழங்கி கொண்டிருந்தார்கள்..(இதில் எம் ஜி ஆர் விதிவிலக்கு).
கீழ்தட்டு என்ற ஒரு பெரும் கூட்டம் அனாதையாக நின்று கொண்டிருந்தது..
தனது ஆசையான சினிமாவை விட முடியாமல் , அதே சமயம் அதில் பிழைக்கவும் வழிதெரியாமல் , நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர்கள், கதாசிரியர்கள், தயாரிப்பாளர்கள் என அனைத்து வகையிலும் மூன்றாம் பிரிவைசேர்ந்த பெரும் கூட்டம் வறட்சியோடு இருந்தது..
பணக்காரனுக்கு, வசதி படைத்தவனுக்கு ஏழையை பற்றி எந்த கவலையும் இல்லை என்ற ஒரு பொது சித்தாந்தம் இருக்கிறது..
ஜெய்சங்கர் அதற்கு நேர்மாறாக இருந்தார்.. சிந்தித்தார்..
அந்தப் பெரும் கூட்டத்தோடு தன்னை இணைத்துக் கொண்டார்..
அந்தக் கூட்டமும் தங்களுக்கு கிடைத்த ஒரே பிடிமானமாக ஜெய்சங்கரை எண்ணி இறுகப் பற்றிக் கொண்டது...
அன்றைய தேதியில் தமிழ் சினிமா கதாநாயகனின் அதிகாரம் என்னவெனில்..,
அவரை காலை மாலை இருவேளை வணங்கவேண்டும் அவருக்கு முன் நாற்காலியில் அமரக்கூடாது சத்தமாக பேசக்கூடாது உரக்க சிரிக்க கூடாது என இந்த லிஸ்ட் பெரிதாக இருந்தது...
அதை முதல் முறையாக ஜெய்சங்கர் உடைத்தார் ..
அரங்கத்திற்குள் நுழையும் பொழுதே அவர் எல்லோருக்கும் ஹாய் , ஹாய், என்று ஆங்கில பாணியில் வணக்கம் வைத்தார்..
சிறியவன் பெரியவன் பேதமின்றி எல்லோரிடமும் நண்பனைப் போல் பழகினார் அன்போடு அணைத்துக் கொண்டார் அவர்கள் தோள்களில் கைபோட்டு பேசினார்.... அவர்கள் குடும்பங்களைப் பற்றி விசாரித்தார் ...
தனக்கென்று எந்த மரியாதையையும் எதிர்பார்க்கவே இல்லை...
இதனால் அவருடன் பணியாற்றிய எளிய கலைஞர்கள் பூரித்துப் போனார்கள்..
மெல்ல மெல்ல தமிழ் சினிமாவிற்குள் இவரது புகழ் பரவத் தொடங்கியது..
இரண்டாவது ஆண்டிலேயே அவருக்கு தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்டு என்ற பெயர் கிடைக்கும் அளவுக்கு அவர் புகழ் வளர்ந்தது
அந்தப் பெயரை மேலும் வளர்த்துக் கொள்ளவோ, தனது சம்பளத்தைக் கூட்டிக் கொள்ளவோ, அந்தக் கலைஞன் சிறிதும் முயற்சிக்கவில்லை...
மாறாக, தனது சம்பளத்தை, தனது படத்தின் பட்ஜெட்டை அந்த எளியவர்களுக்காக இன்னும் சுருக்கிக் கொண்டார் குறைத்துக்கொண்டார்..
தனது படங்கள் தோல்வி அடைந்தால் அதன் சம்பளத்தை தயாரிப்பாளரிடம் திருப்பிக் கொடுக்கும் முறையை தமிழ் சினிமாவில் தொடங்கி வைத்தவர் ஜெய்சங்கர் தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..
அந்தப் பெரும் கூட்டத்திற்கு தீனி போட இவர் பெரும் உழைப்பை தர வேண்டியிருந்தது அவர் சிறிதும் சளைக்காமல் அதை செய்தார்..
எந்த அளவிற்கு எனில் வருடத்திற்கு 15 முதல் 20 படங்கள் படங்களில் நடித்தார்..
பலசமயங்களில் வாரத்திற்கு ஒரு படம் வெளியாகும் என்றால் நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்..
அவருக்கு வெள்ளிக்கிழமை நாயகன் என்ற ஒரு பட்டமும் உண்டு...
ஜெய்சங்கர் பத்தி ஒருத்தர் ரொம்ப எளிமையா ஒரு கதை சொன்னார் அதை சொல்றேன்..
உதாரணத்துக்கு நீங்க அவருடைய ஷூட்டிங்ல ஒரு லைட்மேனா வேலை செய்கிறீங்கன்னு வச்சுப்போம்...
இப்ப நீங்க போயி அவர்கிட்ட ,
சார் உங்கள வச்சு நான் ஒரு படம் எடுக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு..
அவர், அப்படியா தராளமா எடுத்திடலாம் எவ்வளவு பணம் வச்சிருக்க..?
நீங்க தலையைச்சொறிவீங்க ..
அவர் புரிந்து கொண்டு..
சரி பணம் இல்ல கதையாவது இருக்க...?
நீங்கள் மீண்டும் தலையை சொறிய..
சரி விடு கம்மி பட்ஜெட்டில் காமெடி கலந்த ஒரு குடும்ப படம் ஓகேவா..
நீங்கள் வேகமாக சரி என்று தலையாட்ட..
அவர் தன் மேனேஜரிடம் திரும்பி கதாசிரியர் கிட்ட
இவருக்கு ஏத்த மாதிரி ஒரு சின்ன பட்ஜெட்டில் கதை எழுதச் சொல்லுங்கள் என்பார்..
கதை ரெடியானதும் அதில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரிடமும் சம்பளம் வாங்காமல் வேலை செய்யச் கேட்டுக்கொள்வார்...
அவர் மீதிருக்கும் அன்பால் , நம்பிக்கையால் மறுபேச்சின்றி அனைவரும் உடன் படுவார்கள்..
படம் தயாராகி பிசினஸ் ஆனவுடன் அதில் பணிபுரிந்த அனைவருக்கும் சம்பளம் முறையாக செட்டில் செய்யப்படும்...
இப்போது நீங்கள் சாதாரண நிலையிலிருந்து தயாரிப்பாளர் என்ற அந்தஸ்திற்கு உயர்ந்து விட்டீர்கள்...
உங்களிடம் இப்போது கணிசமான தொகையும் இருக்கும்..
இதைத்தான் ஜெய்சங்கர் பல படங்களில் செய்து கொண்டிருந்தார்...
இவருக்கு முன்னும் சரி, இவருக்கு பின்னும் சரி ,
யாரிடத்திலும் இப்படி ஒரு நிகழ்வை உங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது....
ஆரம்பத்தில் எம்ஜிஆரின் மீது இருந்த ஈர்ப்பால் அவரின் ஏதேனும் ஒரு படத்தில் அவருடன் நடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டார் ..
அதற்காக நீண்டகாலம் காத்திருந்தார்..
பின் இவர் படு பிஸியாக இருந்த நேரத்தில் அதற்கான வாய்ப்பு கிடைத்தது...
ஆசையோடு நடிக்கப் போனார்..
ஆனால் அந்த படத்தின் முதல்நாள் ஷூட்டிங்கே மூன்று மணி நேரம் தாமதமாக தொடங்கியது.. ஜெய்சங்கர் மனம் கலங்கினார்..
காரணம் அப்போது கிட்டத்தட்ட 20 படங்களில் அவர் ஒப்பந்தமாகியிருந்தார் ..
அனைத்தும் சிறு தயாரிப்பு... அவருடைய ஒவ்வொரு மணிநேரமும் விலைமதிப்பு மிக்கது..
தன் விருப்பத்திற்காக அவர்கள் பலிஆவதை அவர் விரும்பவில்லை....
அந்த எளிய மனிதர்களுக்காக மிக கடினமான ஒரு முடிவை அவர் எடுத்தார் முதல் நாளிலேயே இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்..
தமிழ் சினிமாவையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த எம்ஜிஆரின் கோபத்தை இதன்மூலம் சம்பாதித்தார்..
பின்னாளில் ஜெயலலிதாவுடன் பல படங்களில் நடித்ததன் மூலமும், அதனால் பத்திரிக்கைகளிலும் பொது வெளியிலும் உருவான வதந்திகளாளும் இன்னும் கூடுதலாக எம்ஜிஆரின் கோபத்திற்கு ஆளானார் என்பது செவிவழி செய்தி...
அவருக்கு இதைப் பற்றிய கவலையோ அச்சமோ சிறிதும் இருந்ததாக தெரியவில்லை... தன்னைப்பற்றி சுயநலமாக சிந்திக்கும் ஒருவனுக்குத் தான் இதுவெல்லாம் தோன்றும்..
அவர் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருந்தார்..
கிட்டத்தட்ட 150 படங்களுக்கும் மேல் கதாநாயகனாக நடித்தார்..
அவர் நடிக்க வந்தபோதே கலர் திரைப்படங்கள் வரத் தொடங்கிவிட்டன ...
ஆனால் இவர் நடித்த 95 சதவீத படங்கள் கருப்பு வெள்ளை படங்களாகவே இருந்தன...
காரணம் அனைத்தும் சிறு தயாரிப்புகள்..
இவர்களுக்காக தொடர்ந்து தன்னை பலி கேட்டுக்கொண்டே இருந்தார் ஜெய்சங்கர்..
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் மட்டும் வள்ளல் அல்ல.. ஜெய்சங்கரும் தான் ...
இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம்,
எம்ஜிஆர் அவர்கள் எல்லோராலும் எளிதில் நெருங்க முடியாத ஒரு உயரத்தில் இருந்தார்...
ஆனால் ஜெய்சங்கர் எல்லோராலும் எளிதில் நெருங்கக் கூடிய ஒரு இடத்தில் இருந்தார்..
அதேபோல் தமிழ்சினிமாவில் எத்தனை பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவர்களால் நஷ்டமடைந்து
நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள் உண்டு..
ஆனால் ஜெய்சங்கரால் நஷ்டமடைந்த ஒரு தயாரிப்பாளர் கூட இருக்க முடியாது..
மாறாக நடுத்தெருவில் இருந்த பல தயாரிப்பாளர்களை தூக்கி நிறுத்திய சான்றுகள் இங்கு ஏராளம்...
அவர் வீட்டில் இருந்த ஒரு பீரோ முழுவதும் திரும்பி வந்த காசோலைகள் இருந்ததாம்..
அதுகுறித்து அவர் எந்த தயாரிப்பாளரிடம் சண்டை போடவும் இல்லை.. நீதிமன்றத்திற்கு போகவும் இல்லை.... பிழைக்கத் தெரியாத பெரிய மனுஷன் இவர்...
இன்று ஒரு காசோலை திரும்பி வந்தால் அந்த படத்தையே நிறுத்துகிறார்கள்..
இன்றும் கோடம்பாக்கத்தின் வீதிகளில் ஏதேனும் ஒரு பழைய கலைஞரிடம் ஒரு அரை மணி நேரம் நீங்கள் பேசிப்பாருங்கள்..
அந்த அரைமணி நேரத்திற்குள் அந்த வயதானவர் ஜெய்சங்கர் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்வார்..
அதுவே ஜெய்சங்கர் அவர்கள் சினிமாவில் நிகழ்த்திய மாபெரும் சாதனையாகும்...
மக்கள் கலைஞர் என்ற பெயர்தான் இவருக்கு எத்தனை பொருத்தமானது..
May be an image of 1 person and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...