Friday, April 1, 2011

அ.தி.மு.க., அணிக்கு 105, தி.மு.க., அணிக்கு 70; கடும் போட்டி 59: "லயோலா' கணிப்பு

தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அணிக்கு 105 தொகுதிகளும், தி.மு.க., அணிக்கு 70 தொகுதிகளும் சாதகமாக இருப்பதாக, "லயோலா' கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள 59 தொகுதிகளில், இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாக தெரிய வந்துள்ளது.
"லயோலா' கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான குழுவினர், சட்டசபை தேர்தல் குறித்து, 117 தொகுதிகளில் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினர். இதன் முடிவுகளை, ராஜநாயகம் நேற்று வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்: மார்ச் 21 முதல் 29ம் தேதி வரை, அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் 117 சட்டசபை தொகுதிகளில், 3,171 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலும், தொகுதி பிரச்னைகள் அடிப்படையிலேயே, மக்கள் கருத்துக்களை தெரிவித்தனர். பொதுவான சில கேள்விகளுக்கும் பதிலளித்தனர். தேர்தல் அறிக்கையைப் பொறுத்தவரை, தி.மு.க., அறிக்கையை 49.4 சதவீதம் பேரும், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை 43.5 சதவீதம் பேரும் ஆதரித்துள்ளனர். சுமூகமான தொகுதிப் பங்கீட்டில் தி.மு.க.,வுக்கு 44.7 சதவீதமும், அ.தி.மு.க.,வுக்கு 32.4 சதவீதமும் கிடைத்துள்ளது. வேட்பாளர்கள் தேர்வில், இரு கட்சிகளுமே சம நிலையைப் பெறுகின்றன. தி.மு.க., அணி 42.5 சதவீதமும், அ.தி.மு.க., அணி 42.2 சதவீதமும் பெற்றுள்ளன.

உட்கட்சிப் பூசல்: உட்கட்சிப் பூசல் இல்லாத கட்சி என்ற வகையில், தி.மு.க., அணிக்கு 35.6 சதவீதமும், அ.தி.மு.க., அணிக்கு 44.5 சதவீதமும் கிடைத்துள்ளது. சிறுபான்மையினரின் ஆதரவு, தி.மு.க.,வை விட, அ.தி.மு.க.,வுக்கு ஒரு சதவீதம் குறைவாக 46 சதவீதம் கிடைக்கும் என்றும், கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. விளம்பரம், தெருமுனை, பிரசார கூட்டங்கள், தலைவர்களின் பிரசாரம் ஆகியவற்றில், தி.மு.க., அணி முன்னிலை வகிக்கிறது.

அ.தி.மு.க., அணி முன்னிலை: தற்போதுள்ள சூழலில் மக்கள் ஓட்டு போடுவதாக இருந்தால், அ.தி.மு.க., அணிக்கு 48.6 சதவீதம் பேரும், தி.மு.க., அணிக்கு 41.7 சதவீதம் பேரும் ஓட்டு போடுவர் என, தெரிய வந்துள்ளது. பிற கட்சிகளுக்கு 1.5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 8.2 சதவீதம் பேர், எந்த முடிவும் எடுக்கவில்லை. மாநிலம் தழுவிய அளவில், அ.தி.மு.க., அணிக்கு 105 தொகுதிகளும், தி.மு.க., அணிக்கு 70 தொகுதிகளும் சாதகமாக இருக்கின்றன. மீதமுள்ள 59 தொகுதிகளில், இரு அணிகளுக்குமிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இத்தொகுதிகள், எந்த அணிக்குச் செல்லும் என்பது, மூன்று நிகழ்வுகளைப் பொறுத்தே அமையும். ஒன்று, ஓட்டுப்பதிவிற்கு முன் ம.தி.மு.க., எடுக்கும் நிலைப்பாடு. இரண்டாவது, மும்முனைப்போட்டி, பணம் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் வாக்காளர்கள், எப்படியாவது பண பட்டுவாடா செய்துவிட வேண்டும் என்று துடிக்கும் அரசியல் கட்சிகள், இதை தடுக்கத் துடிக்கும் தேர்தல் கமிஷன், மூன்றாவதாக அ.தி.மு.க.,வை விட சிறப்பான வியூகத்தை அமைத்துள்ள தி.மு.க., அணியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில், 59 தொகுதிகளின் முடிவுகள் அமையும். இவ்வாறு கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பு சரியா? கருத்து தெரிவித்தவர்களில் 86.6 சதவீதம் பேர் ஆண்கள். ஆண், பெண் இரு தரப்பினரிடமும் சரிசமமாக கருத்துக்கள் கேட்கப்படவில்லை. எனவே, இந்தக் கருத்துக் கணிப்பு சரியாக இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஐந்து ஆண்டு கால தி.மு.க., ஆட்சியின் செயல்பாடுகள், எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தில் முக்கிய இடம் பிடித்துள்ள, "ஸ்பெக்ட்ரம்' விவகாரம், தி.மு.க., அரசின் ஊழல், குடும்ப அரசியல், போன்றவை குறித்து, மக்களிடம் கருத்து கேட்கப்படவில்லை. பெரும்பாலானவர்கள், தொகுதியில் உள்ள பிரச்னைகளை மட்டுமே தெரிவித்துள்ளனர்.

வேட்டு வைக்கும் மின்வெட்டு: கருத்து தெரிவித்துள்ளவர்களில், சில முக்கிய பிரச்னைகளை தெரிவித்துள்ளனர். மின்வெட்டு அதிகம் இருப்பதாக 25.2 சதவீதம் பேரும், விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளதாக 14.2 சதவீதம் பேரும், குடிநீர் வசதியில்லை என,12.6 சதவீதம் பேரும், ரேஷன் பொருட்கள் வினியோகம் சரியில்லை என, 8.5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும், தங்களின் பிரச்னை தீரப்போவதில்லை என, 42.5 சதவீதம் பேர் கவலையுடன் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், தி.மு.க.,வை விட (21.9 சதவீதம்), அ.தி.மு.க., வேட்பாளர்கள், தொகுதி பிரச்னையை சரி செய்வார்கள் என 33.7 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...