Sunday, April 10, 2011

கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சர்க்காரியா கமிஷன் விசாரித்த வழக்குகளில் மதுபான ஆலைக்கு அனுமதி கொடுத்த விவகாரம் சுவாரஸ்யமானது.

முதலில் வருபவர்க்கு முன்னுரிமை கொடு்தததால் ஊழலில் சிக்கி சிறையில் இருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா. முதலில் வராதவருக்குக்கூட முன்னுரிமை உண்டு தெரியுமா..? சொல்லாததையும், செய்யக் கூடிய தி.மு.க.வினருக்கு இதெல்லாம் ரொம்ப சாதாரணம்.. இதைத்தான் சர்க்காரியா கமிஷன் விசாரித்தது..


இன்றைக்குத் தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் கடைகள்தான். தமிழகமே இன்று போதையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. டாஸ்மாக் கடை நடத்துகிறீர்களே.. கள் இறக்க மட்டும் அனுமதி இல்லையா என்று போராடி வருபவர்களும் இருக்கிறார்கள்.

முன்பொரு காலத்தில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு இருந்தது என்று சொன்னால் நம்புவீர்களா..? தமிழகத்தில் பூரண மதுவிலக்கு 1971-ம் ஆண்டு வரையிலும் இருந்தது. அதன் பின்னர்தான் மதுவிலக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.

மதுவிலக்கை நீக்கினால் மட்டும் போதுமா? தங்குத் தடையில்லாமல் மதுபானங்கள் கிடைக்க வேண்டுமல்லவா? அதற்கு அதிகப்படியான மது உற்பத்தி மாநிலத்தில் இருக்க வேண்டுமல்லவா? உற்பத்திக்காக தொழிற்சாலை வேண்டுமே..? இதனை மனதில் வைத்து தமிழக அரசு மதுபானங்கள் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுமதி கொடுக்க முன் வந்தது.

லைசென்ஸ் கேட்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவரின் நிதி நிலைமை நன்றாக இருக்க வேண்டும். நிர்வாகத் திறமை, மாநில அரசின் மதிப்பீட்டுச் சான்றிதழ்.. இவைகள்தான் ஆலை ஆரம்பிக்க விண்ணப்பிக்க தேவையானத் தகுதிகள்.

அரசு நிர்ணயித்த தகுதி திறமைகள் கொண்ட பல கம்பெனிகள் ஆர்வமுடன் அரசு குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்தார்கள். விண்ணப்பங்களை ஆய்வு செய்த தொழில் துறைச் செயலாளர் எட்டு நிறுவனங்களின் விண்ணப்பங்கள் தகுதியானவை என்று குறிப்பு எழுதுகிறார்.

இவ்வாறு அவர் குறிப்பு எழுதிய பிறகு நடந்த கூட்டத்தில் அப்போதைய முதல்வரான கருணாநிதி புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்கிறார். பீர் தொழிற்சாலையை நிறுவுவதற்காக இன்னொரு விண்ணப்பதாரரைத் தேர்வு செய்யலாம் என்று சொல்கிறார் கருணாநிதி. இதைத் தொடர்ந்து ஏ.எல்.சீனிவாசன் என்பவர் புதிய விண்ணப்பத்தை அளிக்கிறார். 

இப்போது ஒன்பது விண்ணப்பங்களில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? இதிலென்ன சந்தேகம்? கடைசியாக வந்த ஏ.எல்.சீனிவாசனுக்குத்தான் முதல் அனுமதி கிடைத்தது. அவரோடு சுல்தான் மரைக்காயர் அண்ட் சன்ஸ் லிமிடெட், கோத்தாரி அண்ட் சன்ஸ் ஆகிய நிறுவனங்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

சரி.. ஏ.எல்.சீனிவாசன் மட்டும்தான் பின் வாசல் வழியாக நுழைந்தார். மற்ற இரு நிறுவனங்களும் ஒழுங்காக ஆணை பெற்றிருக்கும் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து போய்விடுவீர்கள். சுல்தான் மரைக்காயர் மற்றும் கோத்தாரி நிறுவனங்களின் மீது சர்க்காரியா விசாரணை ஆணையத்திலேயே இரண்டு தனி விசாரணைகள் இது தொடர்பாக நடைபெற்றன.

1973-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஏ.எல்.சீனிவாசனுக்கு பீர் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதிக் கடிதத்தில் சில கண்டிஷன்கள் போடப்படுகின்றன. 6 மாதங்களுக்குள் தொழிற்சாலையை நிறுவ வேண்டும் என்பது அதிலிருக்கும் முக்கியமான கண்டிஷன். அது அந்த அனுமதிக் கடிதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏ.எல்.சீனிவாசன் என்ன செய்கிறார் தெரியுமா..? 6 மாதங்களுக்குள் என்னால் தொழிற்சாலையை நிறுவ முடியாது. அதனால் 18 மாத கால அவகாசத்தை எனக்குக் கொடுங்கள் என்று அரசைக் கேட்கிறார். அவகாசம் கேட்டதை வைத்தே அவருக்குக் கொடுக்கப்பட்ட லைசென்ஸை ரத்து செய்யலாம். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே இவர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் விதிமுறை மீறல்கள் இருந்ததால், இப்போதும் இவரது இந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.

அப்போதாவது அவர் தொழிற்சாலையைத் தொடங்கினாரா என்றால் இல்லை.. மீண்டும் 12 மாதங்கள் அவகாசம் கேட்கிறார். அதற்குள் செப்டம்பர் 1974 முதல் மீண்டும் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. ஏ.எல்.சீனிவாசனுக்குக் கொடுத்திருந்த அனுமதி தானாகவே ரத்தாகிறது.

இந்த வழக்கு சர்க்காரியா கமிஷனில் ஏன் விசாரணைக்கு வந்தது..?

நீதிபதி சர்க்காரியா, “யார் இந்த ஏ.எல்.சீனிவாசன்?” என்று ஆர்வமாக விசாரித்தார். அவருக்காக ஏன் அரசின் சட்டங்கள் இந்த அளவுக்கு வளைந்து கொடுத்துள்ளன என்பது அவரின் ஆதங்கம். சீனிவாசனின் பலத்தை அறிய எண்ணி விசாரணை நடத்துகிறார்.

அப்போதைய முதல்வர் கருணாநிதியின் மிக நெருங்கிய நண்பர் ஏ.எல்.சீனிவாசன். கவியரசு கண்ணதாசனின் உடன் பிறந்த அண்ணன். 'ஏ.எல்.எஸ். புரொடெக்ஷன்' என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு கம்பெனி வைத்திருந்தார். இதன் மூலம் சில திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டவர். இவர் 'சாரதா' என்ற திரைப்படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் தயாரித்து வெளியிட்டார். படம் சூப்பர் ஹிட். இத்திரைப்படத்தின் மூலம் தனக்குக் கிடைத்த லாபத்தில்தான் அப்போது இயங்கிக் கொண்டிருந்த 'மெஜஸ்டிக் ஸ்டூடியோ'வை விலைக்கு வாங்கி தன்னை பணக்காரனாக்கிய 'சாரதா' படத்தின் பெயரையே அந்த ஸ்டூடியோவுக்கு வைத்து அதனை 'சாரதா ஸ்டூடியோ'வாக உருமாற்றினார்.

'சாரதா ஸ்டூடியோ'வில் இருந்து தனக்கு வர வேண்டிய பாக்கியை கருணாநிதியின் வேண்டுகோளின் பேரில் தள்ளுபடி செய்ய வேண்டி வந்தது என்று பக்தவச்சலம் என்பவர் சர்க்காரியா கமிஷனில் சீனிவாசனுக்கு எதிராகச் சாட்சியம் அளித்தார்.

அப்போது அரசு செய்தி நிறுவனம் தயாரிக்கும் படங்கள் தொடர்பான பெரும்பாலான பணிகள் ஏ.எல்.சீனிவாசனின் 'சாரதா ஸ்டூடியோ'வுக்கே வழங்கப்பட்டிருந்தது. இது மட்டுமில்லாமல், தொழிலாளர்களுக்குக் கட்ட வேண்டிய வருங்கால வைப்பு நிதியை 'சாரதா ஸ்டூடியோ' கட்டவேயில்லை.

இது தவிரவும், பல்வேறு காரணங்களுக்காக 'சாரதா ஸ்டூடியோ'வில் அப்போதைய காலக்கட்டத்தில் நடந்த வேலை நிறுத்தத்தை முறியடிக்கவேண்டி, அப்போது இருந்த தொழிலாளர் நலத் துறை அமைச்சர் என்.வி.நடராசன் மூலமாக தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தொழிலாளர் அமைப்புகள் வற்புறுத்தப்பட்டன. வேறு வழியில்லாமல் அவர்களும் ஒப்புக் கொண்டு கையெழுத்து போட்டதும் சர்க்காரியா கமிஷன் விசாரணையில் தெரிய வந்தது.

மதுபான ஆலை அமைக்க அரசு நியமித்த நிபந்தனைகளில் முக்கியமான ஒன்று.. நிதி நிலைமை நன்றாக இருக்க வேண்டும் என்பது. தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமான விதிப்படி கட்ட வேண்டிய தொழிலாளர் வைப்பு நிதியையே செலுத்தத் தவறிய ஒரு நபர் எப்படி நல்ல நிதி நிலைமையில் இருந்திருப்பார்? ஆனால் இதைப் பற்றியெல்லாம் யாருக்குக் கவலை?  அவர்தான் முதலமைச்சர், கருணாநிதியின் நண்பர் அல்லவா? இந்த ஒரு தகுதியே போதாதா..?

விசாரணையின் இறுதியில் மதுபானத் தொழிற்சாலை அமைப்பதற்காக ஏ.எல்.சீனிவாசன் கடைசிவரையில் ஒரு துண்டு நிலத்தைக்கூட வாங்கவில்லை என்பது தெரிய வந்தது. சீனிவாசனின் உண்மையான நோக்கம், சென்னை புறநகரில் மதுபானத் தொழிற்சாலைக்கு கிடைத்த லைசென்ஸை வைத்து 100 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதனை ஸ்வாஹா பண்ண வேண்டும் என்பதுதான்..! நல்லவேளையாக அது காலத்தின் கோலத்தில் கரைந்து போனது..!

1971-ம் ஆண்டு காலத்திலேயே ஒரு மதுபானத் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்குவதில் இத்தனை தகிடுதத்தங்களைச் செய்தவர்கள், அதே வழியில் ஸ்வான் டெலிகாம், டி.பி.ரியாலிட்டீஸ் போன்ற நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வழங்கியிருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்..?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...