6 தொகுதி ரவுண்ட் - அப்
முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்து, தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம் லீக்கும், அ.தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியும் வரிந்து கட்டிக் களத்தில் நிற்கின்றன. இரண்டு கழகங்களும், இந்தக் கட்சிகளுக்கு தலா மூன்று தொகுதிகளை ஒதுக்கி இருக்கின்றன. இரண்டு முஸ்லிம் கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளை அறிந்துகொள்ள ஒரு ரவுண்டு வந்தோம்!
மனிதநேய மக்கள் கட்சி
மனிதநேய மக்கள் கட்சி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவுதான் மனிதநேய மக்கள் கட்சி. இரண்டாவது முறையாக தேர்தலை சந்திக்கும் இந்தக் கட்சிக்கு அ.தி.மு.க. அணியில், 'புதியதமிழகம்,’ சரத்குமாரின் 'சமத்துவ மக்கள் கட்சி’களைவிடக் கூடுதல் இடம். இந்தக் கட்சியின் சின்னம்... மெழுகுவத்தி.
ராமநாதபுரம்
ம.ம.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லாவை எதிர்த்து, தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான அசன் அலி களத்தில் இருக்கிறார். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நண்பரான அசன் அலியும், கடந்த தேர்தலுக்குப் பிறகு இப்போதுதான் தொகுதியில் தலை காட்டுவதால், மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். மேலும் இலங்கைக் கடற்படையால் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் இவருக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் ஓட்டுகள் கணிசமாக ஜவாஹிருல்லாவுக்குத்தான்.
சில மாதங்களுக்கு முன்பு பெரிய பட்டணத்தில் நடந்த படகு விபத்தில் சிலர் இறந்தனர். ''இது என் தொகுதிக்குள் இல்லை!'' என்று அசன் அலி ஒதுங்கிக்கொண்டார். அந்த சம்பவம் குறித்து அங்கே நேரடியாகச் சென்று ஆறுதல் கூறி, ''பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அதிகமாகத் தர வேண்டும்!'' என்று கோரிக்கை வைத்து, ஆம்புலன்ஸ் சேவையிலும் ஈடுபட்டார் ஜவாஹிருல்லா. ''ரத்த தானம் செய்வதிலும் முன்னிலையில் இருக்கிறோம். சுனாமி சமயத்தில் நாங்கள் ஆற்றிய மீட்புப் பணிகளை மக்கள் மறக்க மாட்டார்கள்!'' என்று ம.ம.க. நிர்வாகிகள் பிரசாரம் செய்கிறார்கள்.
பிரசாரத்தில் பேசும் ஜவாஹிருல்லா, ''பம்மன் வைப்பாறு திட்டம், கடலில் கலக்கும் நீரைத் தடுத்து தடுப்பு அணைகள் கட்டுதல், ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையை மேம்படுத்துதல், பாதாள சாக்கடைத் திட்டம், ராமேஸ்வரம் புனிதத் தலத்துக்கு அடிப்படை வசதிகள் செய்தல், கச்சத் தீவு மீட்பு, மீனவர் உயிருக்குப் பாதுகாப்பு ஆகியவற்றை நிச்சயம் செய்து காட்டுவோம்...'' என்கிறார். மொத்தத்தில் மெழுகுவத்தி... பிரகாசமாக ஒளிர்கிறது!
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
ம.ம.க-வின் துணைப் பொதுச் செயலாளரான தமிமுன் அன்சாரி வேட்பாளர். பத்திரிகையாளர், கவிஞர், சமூக சிந்தனையாளர் என்று பன்முகம்கொண்டவர். துடிப்புமிக்க இளைஞர்கள், மாணவர்கள் படை அவருக்குப் பின்னால் தோள் கொடுக்கிறது. ''கடந்த மூன்று தேர்தல்களில் இங்கே போட்டியிட்ட முதல்வர் கருணாநிதி, இப்போது உங்களைக் கை கழுவிவிட்டு திருவாரூக்கு ஓடிவிட்டார். அங்கே போட்டியிட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர் முடிவு செய்துவிட்டதால், சேப்பாக்கம் தொகுதியில் செய்ய வேண்டிய பணிகளை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டார்கள். தி.மு.க-வின் ஜெ.அன்பழகன், சினிமா விநியோகஸ்தர். அவர் எம்.எல்.ஏ-வாகி என்ன சாதிப்பார்? மக்களைப்பற்றிக் கவலைப்படுவாரா?'' என்று முழங்கும் தமிமுன் அன்சாரியின் பிரசாரம் படுவேகத்தில் இருக்கிறது. இந்தத் தொகுதியில் சுமார் 50 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். 'ஜெயலலிதாவின் பிரசாரத்துக்குப் பிறகு அன்சாரியின் வெற்றி உறுதியாகிவிடும்’ என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்!
ஆம்பூர்
புதிதாக உருவாக்கப்பட்ட ஆம்பூர் தொகுதியில் நிற்கும் ம.ம.க. வேட்பாளர் அஸ்லம் பாஷாவுக்கு எதிராக, காங்கிரஸின் விஜய் இளஞ்செழியன் நிற்கிறார். 'இந்தத் தொகுதியில் எப்படியாவது ஸீட் வாங்கிவிட வேண்டும்!’ என்று காங்கிரஸ் பிரமுகர் பாலூர் சம்பத் கடைசி வரை போராடியும் ஸீட் கிடைக்கவில்லை. ஆகவே, இப்போது அவர் போட்டி வேட்பாளர். சம்பத்துக்குத் தொகுதிக்குள் ஓரளவுக்கு செல்வாக்கு இருப்பதால், இளஞ்செழியனுக்குக் கொஞ்சம் கஷ்டம்தான். கதர் சட்டைகளுக்குள் நடக்கும் மோதல் காரணமாக அஸ்லம் பாஷா முன்னேறிக்கொண்டு இருக்கிறார். இந்தத் தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கு அதிகம். அதனால், இப்போ¬தய நிலவரப்படி அஸ்லம் பாஷாவின் வெற்றி, கனிந்தே இருக்கிறது!
முஸ்லிம் லீக்
தி.மு.க. கூட்டணியில் இருக்கும் முஸ்லிம் லீக், இந்த முறையும் உதயசூரியன் சின்னத்தில்தான் களத்தில் குதித்து இருக்கிறது. தொகுதிப் பங்கீடு நேரத்தில் முதலில் மூன்று தொகுதிகள் கிடைத்தன. அதன் பிறகு இரண்டாகக் குறைக்கப்பட்டு, கடைசியில் மீண்டும் மூன்று தொகுதிகளே வழங்கப்பட்டன.
துறைமுகம்
திருப்பூர் அல்தாப் உசேன், இங்கே வேட்பாளர். பல ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த 'தமிழ் மாநில தேசிய லீக் கட்சி’யின் தலைவராக இருந்தவர். ஆனால், ஒரு முறைகூட இவருக்குத் தேர்தலில் போட்டியிட தி.மு.க. வாய்ப்புத் தரவில்லை. அதன் பிறகு தன் கட்சியை, முஸ்லிம் லீக்கோடு இணைத்தார். இப்போது வேட்பாளராக நிற்கிறார். இதனால், முஸ்லிம் லீக் கட்சியில் அதிருப்தி நிலவுகிறது. அல்தாப் வெற்றி பெற்றால், முஸ்லிம் லீக் கட்சியைக் கைப்பற்றிவிடுவார் என்று அவரைத் தோற்கடிக்க, கட்சிக்குள்ளேயே உள்ளடி வேலைகள் நடக்கின்றனவாம்.
முழுக்க முழுக்க தி.மு.க-வின் ஓட்டுகளை நம்பியே ஓடிக்கொண்டு இருக்கிறார் அல்தாப். ஏற்கெனவே, பூங்கா நகர் தொகுதியில் இருந்த சௌகார்பேட்டை போன்ற பகுதிகள், தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, துறைமுகம் தொகுதியில் சேர்க்கப்பட்டன. மார்வாடி இன மக்கள் சௌகார்பேட்டையில் கணிசமாக வசிப்பவர்கள். அவர்களின் ஓட்டுகள் எப்போதுமே தி.மு.க-வுக்கு விழுந்தது கிடையாது. மேலும் எதிர் அணியில் அ.தி.மு.க. வேட்பாளரான பழ.கருப்பையாவின் பிரசாரத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கிறார். சுமார் 30 ஆயிரம் முஸ்லிம் ஓட்டுகள் துறைமுகம் தொகுதியில் இருக்கின்றன. அதை அல்தாப் நம்பிக்கொண்டு இருந்தாலும், பழகருப்பையாதான் ரேஸில் முந்துகிறார்!
நாகப்பட்டினம்
முக்கியக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில், நான்காவது இடத்தில் இருக்கிறார் நாகையில் போட்டியிடும் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஷேக் தாவூத். நகர்ப் பகுதிகளிலும் முஸ்லிம் ஜமாத்துகளிடம் மட்டுமே ஓட்டு கேட்டு வருகிறார். மிகப் பெரிய தொழில் அதிபர். கப்பல்கள், தொழிற்சாலைகள், வைர வியாபாரம் என்று பசை உள்ள பார்ட்டியாக ஷேக் தாவூத் இருந்தாலும், 'அவரிடம் இருந்து பணம் எதுவும் வந்து சேரவில்லை’ என்று தி.மு.க. உட்பட கூட்டணிக் கட்சியினர் புலம்புகிறார்கள். வேட்பு மனுத் தாக்கலின்போது, விண்ணப்பத்தில் சில இடங்களில் அவர் கையெழுத்துகூடப் போடவில்லை. இதைக் கவனித்த தி.மு.க. எம்.பி-யான ஏ.கே.எஸ்.விஜயன், 'இதைக்கூடவா சரியா செய்யத் தெரியாது!’ என்று நொந்துகொண்டார். பிரசாரத்துக்கு கனிமொழி வந்தபோதும், தி.மு.க-வினர் சரியான அளவில் கூட்டம் சேர்க்கவில்லை. பணம் இறங்கட்டும் என்று வேலை செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ''ஷேக் தாவூத் நல்ல தொழில் அதிபர். ஆனால், அரசியலுக்கு சரிப்பட்டு வர மாட்டார்!'' என்று தி.மு.க-வினரே முணுமுணுக்கிறார்கள். கடந்த முறை இந்தத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஜெயபால், அ.தி.மு.க. சார்பில் நிற்கிறார். இந்த முறை ஜெயித்தே தீருவது என்ற முடிவில் தீவிரமாக இவர் வேலை பார்க்கிறார். தொகுதிக்குள் இருக்கும் 40 ஆயிரம் முஸ்லிம் ஓட்டுகள்தான் ஷேக் தாவூத்துக்கு ஆறுதல் அளிக்கின்றன. கடைசி நேரத்தில் வாக்காளர்கள் மனம் மாறினால், ஜெயபாலுக்கு ஜெயம் கிடைக்கும்!
வாணியம்பாடி
சிட்டிங் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் பாசி மீண்டும் களத்தில் நிற்கிறார். ''அப்துல் பாசி, தொகுதிக்குப் பெரிதாக எதையும் செய்யவில்லை!'' என்று பரவலாகப் பேச்சு அடிபடுகிறது. தொகுதியில் அடிப்படை வசதியான சாலை வசதிகள்கூட ஒழுங்காக இல்லை. இதோடு, தி.மு.க. நகரச் செயலாளர் சிவாஜி கணேசன், தனக்கு ஸீட் தராததால் உள்ளடி வேலைகளில் இறங்கிவிட்டார். இந்தத் தொகுதியில் பெரிதாக எந்த சாதனையும் செய்யாததால், தி.மு.க. அரசின் சாதனைகளையும் தி.மு.க. தேர்தல் அறிக்கையும் சொல்லி ஓட்டு கேட்டு வருகிறார் அப்துல் பாசித்.
இவருக்கு எதிரே அ.தி.மு.க. சார்பில் கோவி.சம்பத்குமார் நிற்கிறார். புதுமுகம் என்றாலும், தொகுதி மக்களுக்கு அறிமுகம் என்பதால், சுறுசுறுவென தேர்தல் வேலை செய்கிறார். அப்துல் பாசித் மீது இருக்கும் அதிருப்தியும், தி.மு.க-வினரின் உள் குத்து காரணமாகவும் சம்பத்குமாருக்கு நல்ல யோகம்!
No comments:
Post a Comment