கடந்த இரு நாள்களாக இந்தியா முழுவதிலும் பேசப்படுகின்ற பேச்சாகவும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஸ்தம்பிக்க வைத்த விவகாரமாகவும் மாறியிருக்கிறது - ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற பிற கட்சி உறுப்பினர்களுக்குக் கோடிகோடியாய் பணத்தைக் கொட்டித் தீர்த்த விவகாரம்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட அந்த நாளின்போதும்கூட, தங்களுக்குப் பணம் கொடுக்க முயன்றார்கள் என்று பாஜக உறுப்பினர்கள் சிலர் பணக் கட்டுகளை அவையில் எடுத்துக் காட்டி, அந்த செய்தி நாடு முழுவதும் ஒளிபரப்பானபோது, மத்திய அரசு அதை மறுத்தது.
ஆனால் தற்போது விக்கிலீக் வெளியிட்டுள்ள ஆவணங்களில் இந்த உண்மைகள் அப்பட்டமாக வெளியாகியுள்ளன. காங்கிரஸின் முக்கிய பிரமுகரான சதீஷ் சர்மா என்பவர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவிருந்த 4 நாள்களுக்கு முன்பாக, எம்பி-க்களுக்குக் கொடுப்பதற்காக ரூ.50 கோடி முதல் 60 கோடி வரை பணத்தை வைத்திருப்பதைத் தமக்குக் காட்டியதாக அமெரிக்கத் தூதரக அலுவலர் ஒருவர் அமெரிக்க அரசுக்கு ஜூலை 17-ம் தேதி ரகசிய மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். இதனை விக்கிலீக் அம்பலப்படுத்தியுள்ளது. இச்செய்தி இந்தியப் பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது.
இதற்கு தார்மீகப் பொறுப்பேற்றுப் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்து, அமளியில் ஈடுபட்டபோது, இதில் பிரதமர் அளித்துள்ள விளக்கம் - இதுவரை அளித்துள்ள தன்னிலை விளக்கங்களையெல்லாம் விஞ்சக்கூடியதாக இருக்கிறது. ""இந்திய மக்களால் விவாதிக்கப்பட்டு, அலசப்பட்டு, தள்ளுபடி செய்யப்பட்ட பழைய விஷயங்களுக்கு எதிர்க்கட்சியினர் அங்கீகாரம் அளித்து, உயிர் கொடுக்க நினைக்கிறார்கள்'' என்று கூறியுள்ளார் பிரதமர்.
அதெப்படி அவரால் இந்த விவகாரம் மக்களால் தள்ளுபடி செய்யப்பட்டவை என்று தீர்மானிக்க முடிகிறது. இதை தீர்மானிக்க அவருக்கு உதவியாக இருக்கிறது ஒரு புள்ளிவிவரம். நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோல்வியுறச் செய்த காங்கிரஸýக்கு அடுத்து வந்த 2009 மக்களவைத் தேர்தலில் 141 இடத்திலிருந்து 206 இடங்கள் அதிகமாக அளித்து, அரசின் மீது மக்கள் மன்றம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறதாம். ஆனால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த பாஜகவுக்கு 138 இடங்களிலிருந்து 116 இடமாகக் குறைந்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 59 இடங்களிலிருந்து 39 ஆகக் குறைந்துவிட்டது என்கிறார்.
அதாவது தேர்தலில் எதிர்க்கட்சியினர் பல இடங்களில் தோற்றுவிட்டால், மக்கள் இவர்களது செயலை அங்கீகரித்துவிட்டார்கள் என்று அர்த்தமா? அடுத்தத் தேர்தலில் 206 இடங்களுக்கும் கூடுதலாக சில இடங்கள் பெற்றுவிட்டால், ஸ்பெக்ட்ரம் ஊழலை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று சொல்லிவிடலாமா? எதற்கு எதை அளவுகோலாக வைப்பது?
இந்தத் தகவல் அமெரிக்க நாட்டுக்கும் அமெரிக்கத் தூதுவர் அலுவலகத்துக்கும் இடையிலான ரகசிய கடிதப் போக்குவரத்து. இதை யாரும் உறுதிப்படுத்த மாட்டார்கள் என்கிற தைரியத்தில் பிரதமர் இத்தகைய வாதத்தை முன்வைக்கின்றார். இதை பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் நன்கு அறியும். அதனால்தான், இப்பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை என்றே சொல்கிறார்கள்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு தோற்றுப் போகுமெனில், அதனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை மற்றொரு தேர்தலை சந்திக்க வேண்டும்; அதில் வெற்றி பெறலாம் அல்லது தோல்வியுற்று எதிர்க்கட்சியாக இருக்கலாம் என்பதைத் தவிர, பெரிய இழப்பு ஏதுமில்லை. ஆனால் பதவியின் மோகம், அதிகார போதை எப்படியும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்று, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயலும்போது, அந்த பேராசையின் முன்னால் எல்லா நீதி, நியாயங்களும் உடைந்து போகின்றனவே...
நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் இவ்வாறு பணம் கொடுத்து நாடாளுமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதில் காங்கிரஸýக்கு முன்அனுபவம் உண்டு. இது ஒன்றும் புதியதல்ல.
அமெரிக்கத் தூதரகம் இந்தியாவில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக, அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் கூடாது என்பதை வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால்தான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தனது பெரும்பான்மை ஆதரவு பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், அமெரிக்கா எந்த அளவுக்கு இந்த விவகாரத்தை மிகவும் நுட்பமாகக் கண்காணித்திருக்கும் என்பதை எவரும் உணர முடியும். அணுசக்தி ஒப்பந்தம் கைகூடாமல் போனால் அதனால் இழப்பும் கௌரவக் குறைச்சலும் அமெரிக்க அரசுக்குத்தான்.
யார் கண்டது, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கக் காங்கிரஸýக்கு உதவியது அமெரிக்க உளவுத்துறையாகக்கூட இருந்திருக்கக்கூடும். இல்லையென்றால், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த அமர்சிங்கின் உதவியுடன் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவைக் காங்கிரஸ் எப்படிப் பெற்றது என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய சந்தேகத்துக்கு காங்கிரஸ் பதில் அளித்ததாகத் தெரியவில்லையே ஏன்?
மத்திய அரசோ அல்லது காங்கிரஸ் நிர்வாகிகளோ இத்தகைய சட்டவிரோதச் செயலைச் செய்யவில்லை என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அப்படியானால், அமெரிக்க அரசு தனது நலனுக்காக இந்தியாவில் ஆட்சி கவிழாமல் காப்பாற்ற பணத்தை வாரி இறைத்தது என்கிறாரா? இதற்கு வேறு என்னதான் பொருள்?
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment