Tuesday, April 26, 2011

தயாளு பெயர் சேர்க்கப்படாதது ஏன்? சாட்சிகளின் வரிசையில் 143வது பெயர்

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த துணை குற்றப்பத்திரிகையில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவியும், கலைஞர் "டிவி'யில், 60 சதவீத பங்குகளை வைத்திருப்பவருமான தயாளு பெயர் இடம்பெறாதது, அரசியல் வட்டாரங்களில் பெரியதொரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், கடந்த 2ம் தேதி, முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முன்னாள் அமைச்சர் ராஜா உட்பட, ஒன்பது பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.இந்நிலையில், சி.பி.ஐ., தனது துணை நிலை குற்றப்பத்திரிகையை, நேற்று முன்தினம் தாக்கல் செய்தது. இதில், ஸ்பெக்ட்ரம் உரிமத்தை, டிபி ரியாலிட்டி குரூப்பைச் சேர்ந்த சுவான் நிறுவனம் பெற்றதற்காக, அதே குரூப்பைச் சேர்ந்த குசேகான், சினியுக் நிறுவனங்கள் மூலம், பிரதிபலனாக, 214 கோடி ரூபாய், கலைஞர் "டிவி'க்கு எவ்வாறு கைமாறியது என்பது குறித்து, விவரிக்கப்பட்டுள்ளது. இதில் கனிமொழி, சரத்குமார் உட்பட, ஐந்து பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன், முதல்வர் கருணாநிதி மனைவி தயாளு மற்றும் மகள் கனிமொழியின் பெயர் இடம்பெறுமா என்ற கேள்வி தான், அரசியல் வட்டாரங்களை மிகவும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது.

ஆனால், குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் பிரதானமாக இடம்பெற்றுள்ளது. கலைஞர் "டிவி' துவக்கப்படுவதற்கு மிக முக்கிய காரணக்கர்த்தாவாக இருந்தார் என, அதில் கூறப்பட்டுள்ளது.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் முதல் குற்றவாளியான ராஜாவுடன், கனிமொழியின் தொடர்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்திருப்பதால், சி.பி.ஐ., தனது குற்றப்பத்திரிகையில், ராஜா அமைச்சராக இருந்த காலகட்டத்தில், அவருடன் கனிமொழி இடைவிடாது தொடர்பில் இருந்ததையும், ராஜாவுக்கு தொலைத்தொடர்புத் துறையை பெற்றுத்தருவதில் குறியாக இருந்து, அவர், அந்த துறைக்கு அமைச்சராக காரணமாக இருந்தவர் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.ஸ்பெக்ட்ரம் லஞ்சப்பணம், கலைஞர் "டிவி'க்கு கைமாற்றப்பட்ட விஷயத்தில், கனிமொழியின் பங்கை குற்றப்பத்திரிகையில் விலாவாரியாக விளக்கியுள்ள சி.பி.ஐ., தயாளு பெயரை சேர்க்கவில்லை.

நேற்று முன்தினம் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில், இதற்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளது குறித்து, சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது:தயாளுவின் வயது மற்றும் உடல்நிலையை மேற்கோள்காட்டியுள்ளது. தவிர, அவருக்கு தமிழைத் தவிர வேறு மொழிகள் தெரியவில்லை. 2007, ஜூலை 27ம் தேதி அன்று நடந்த போர்டு மீட்டிங் மினிட் புக் விவரங்களில் இருந்து, தயாளு தனது இயலாமையை முறைப்படி போர்டுக்கு தெரிவித்துள்ளார்.கலைஞர் "டிவி' போர்டு மீட்டிங் ஆலோசனைகளை ஆராய்ந்த போதிலும், கலைஞர் "டிவி'யிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து பார்க்கும்போதும், முக்கிய முடிவுகள் எதிலும் இவர் பங்கேற்கவில்லை. இவர் சார்பாக சரத்குமார் தான் பொறுப்பேற்றுள்ளார். சரத்குமாருக்கு, தன்சார்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தையும் தயாளு அளித்துள்ளார்.கலைஞர் "டிவி'யின் எந்த ஒரு ஆவணங்களிலும் தயாளு கையெழுத்திட வில்லை. அந்த "டிவி'யின் போர்டில் கோரம் தேவைக்காக மட்டுமே இவரது இருப்பு அவசியப்பட்டு இருக்கிறது. தயாளு இந்த நிலை குறித்து முறைப்படி கம்பெனி ஆப் ரிஜிஸ்ட்டரார் தரப்புக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

இதை வைத்து பார்க்கும்போது, கலைஞர் "டிவி'க்கு வந்த லஞ்சப்பண பரிவர்த்தனைகளில் அவர் ஈடுபட்டதாகவோ, அதுபற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இருக்க வேண்டுமென்பதையோ நிரூபிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவரைப் பொறுத்தவரை, அவர், 60 சதவீத பங்குகளை கலைஞர் "டிவி'யில் வைத்திருப்பதாக கூறப்பட்டாலும், அவர் ஒரு, "ஸ்லீப்பிங் பார்ட்னர்' என்ற அளவில் மட்டுமே இருந்துள்ளார்.கலைஞர் "டிவி'யில் அவர் வெறுமனே பார்வையாளராக மட்டுமே இருக்க வைக்கப்பட்டிருக்க வேண்டும். ராஜா, கனிமொழி, சரத்குமாருக்கும், பல்வா தரப்புக்கும் இடையில் நடந்த பேரங்கள் குறித்து, அவர் அறிந்திருக்கவோ அவர்களது கூட்டுச்சதியில் பங்கேற்றதாகவோ கருத வாய்ப்பில்லை என்பதால், அவரது பெயர் சேர்க்கப்படவில்லை.இவ்வாறு, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், துணை குற்றப்பத்திரிகையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் சாட்சிகள் பட்டியலில், தயாளு பெயர் இடம்பெற்றுள்ளது. மொத்தம், 29 சாட்சிகளின் பெயர்கள் உள்ளன. அதாவது, சாட்சி எண், 126லிருந்து, சாட்சி எண், 154 வரை உள்ளது. இதில், தயாளு பெயர், சாட்சி எண், 143 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...