Sunday, April 10, 2011

கலைஞரின் விஞ்ஞானப்பூர்வமான கொள்ளைக்கு சாட்சி..!

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் பதிவைப் படிக்கும் முன்னர் கருணாநிதியின் வீராணம் ஊழல்-1 : சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!
  என்ற இதன் முதல் பாகத்தைக் கொஞ்சம் சோம்பேறித்தனப்படாமல் படித்துவிடுங்கள். ஏற்கெனவே படித்துவிட்டவர்கள் நேரடியாகக் களத்தில் குதிக்கலாம்..!

வீராணம் ஊழலில் சத்தியநாராயணா நிறுவனத்திற்கு அப்போதைய முதல்வர் கருணாநிதியும், பொதுப்பணித் துறை அமைச்சரும் எப்படியெல்லாம் ஆதரவாக இருந்தார்கள் என்பதை கடந்த இதழில் பார்த்தோம். இவர்கள் இருவரும் இவ்வளவு தீவிரமாக ஆதரிக்கக் காரணமென்ன..?

முரசொலி மாறனுக்கு சென்னை பச்சையப்பன் கல்லூரியை நடத்தும், பச்சையப்பன் அறக்கட்டளையில் உறுப்பினராக வேண்டுமென விருப்பம் இருந்தது. அதனால் பச்சையப்பன் அறக்கட்டளையில் உறுப்பினராக இருந்த சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சத்தியநாராயணாவின் மருமகன் புருஷோத்தம் என்பவரோடு மாறன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.


முரசொலி மாறன், முதலமைச்சரி்ன் மருமகன் என்பதால், புருஷோத்தமும் அவருடன் நெருங்கிப் பழகுகிறார். 1970 ஜனவரி மாதம் பச்சையப்பன் டிரஸ்ட் அறங்காவலராக இருந்த எம்.ஏ.எம்.முத்தையா செட்டியார் இறக்கிறார். அந்தக் காலியிடம் தனக்கு வேண்டும் என்று புருஷோத்தமிடம் மாறன் தெரிவிக்கிறார். முதலமைச்சரின் மருமகனை எதிர்த்து வேறு யாரும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட முடியுமா என்ன..? மாறனின் பெயரை புருஷோத்தம் முன் மொழிய மாறன் ஆசைப்படி அவர் பச்சையப்பன் அறக்கட்டளையின் உறுப்பினராகிறார். சில நாட்களிலேயே அந்த அறக்கட்டளையின் தலைவர் பதவியையும் மாறன் கைப்பற்றுகிறார்.

தலைவர் பதவியை மாறனுக்கு விட்டுக் கொடுத்த புருஷோத்தம் பதிலுக்கு வீராணம் குழாய்கள் அமைக்கும் பணியை தனக்கு பெற்றுத் தருமாறு கேட்கிறார். "நான் கான்ட்ராக்ட் வாங்கித் தருகிறேன். எனக்கு இரண்டரை சதவிகிதத்தை கமிஷனாகத் தர வேண்டும்.." என்று மாறன் கேட்கிறார். உடனே கணக்குப் போட்டு வீராணம் திட்டத்தின் மொத்தத் திட்டச் செலவான 16 கோடியில் இரண்டரை சதவிகிதமான 40 லட்சம் ரூபாயை தனக்குக் கொடுத்து விடுமாறு கேட்கிறார். புருஷோத்தமும் அதற்கு ஒப்புக் கொள்கிறார்.

பேச்சுவார்த்தை முடிந்ததும் சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்திற்கு பூர்வாங்கமாக ஒப்பந்தம் வழங்கி ஒரு உத்தரவு வேண்டுமென்று கேட்கிறார்கள். மாறன் மட்டும் சளைத்தவரா என்ன..? "உங்களுக்கு அதுபோல உத்தரவு வழங்கப்படும். அதற்கு முன்னால் பேசிய தொகை 40 லட்சம் ரூபாய் வேண்டும்" என்கிறார்.

புருஷோத்தம் தன் மாமனார் சத்தியநாராயணா ரெட்டியிடம் இந்தத் தகவலைத் தெரிவிக்கிறார். அவர், “இவ்வளவு பெரிய தொகையை மொத்தமாகத் தர முடியாது. அதனால் கொஞ்சம் குறைத்துக் கொள்ளச் சொல்லிப் பேசு” என்கிறார்.

மாறனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. "மொத்தமாகத் தர முடியாது. முதலில் 10 அல்லது 15 லட்சம் ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்" என்று புருஷோத்தம் கேட்கிறார். மாறனோ, “நான் ஒன்றும் பெரிய தொகையைக் கேட்கவில்லை. 40 லட்சத்தைத்தான் கேட்டுள்ளேன். தராவிட்டால், வேறு யாருக்காவது ஒப்பந்தத்தைக் கொடுத்துவிடுவேன் என்று கூறுகிறார். (இந்தச் சமயத்தில்தான் சென்னை அண்ணா சாலையில், வீட்டோடு சேர்த்து 1240 சதுர அடி இடத்தை மாறன் 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார் என்பதில் இருந்து அப்போதைய பண மதிப்பைப் புரிந்து கொள்ளலாம்)

ஒரு வழியாக மீதித் தொகையை பின்னால் தருவது என்றும் முதல் தவணையாக ஒரு தொகை தரப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்படுகிறது. ஒப்பந்தப் புள்ளிகள் முடிவடைவதற்கு முன்பாக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும்போதே, புருஷோத்தமும், அவர் மாமனார் சத்தியநாராயணா ரெட்டியும் மாறனோடு சேர்ந்து கருணாநிதியின் வீட்டிற்குச் சென்று 5 லட்சம் ரூபாயை அவரிடம் வழங்குகிறார்கள்.


இதையடுத்து, குழாய் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அரசிடமிருந்து சத்தியநாராயணா பிரதர்ஸுக்கு 39 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. பதிலுக்கு புருஷோத்தம் 32 லட்சம் ரூபாயை நேரடியாகவும், மாறன் மூலமாகவும் கருணாநிதியிடம் கொடுக்கிறார்.

சர்க்காரியா கமிஷன் இந்த வழக்கை விசாரித்தபோது, 32 லட்சம் ரூபாய் கறுப்புப் பணத்தில் இருந்து கருணாநிதிக்கு வழங்கப்பட்டது என்பதால், கருணாநிதியும் இக்குற்றத்திற்கு உடந்தையானவர் என்கிற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றெல்லாம் கருணாநிதி தரப்பில் வாதாடப்பட்டது.

ஆனால் புருஷோத்தம் தேதிவாரியாக எந்தெந்த நாட்களில் வங்கியிலிருந்து எவ்வளவு தொகை எடுக்கப்பட்டு கருணாநிதியிடம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்களை கமிஷன் முன் தாக்கல் செய்தார்.

ஒரு முறை கருணாநிதியிடம் நேரடியாக பணத்தை எடுத்துச் சென்று கொடுத்ததை கமிஷனிடம், “கரன்ஸி நோட்டுக்களாக 6 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு மாறன் வீட்டுக்குச் சென்றோம். மாறன் கருணாநிதி வீட்டுக்கு எங்களைக் கூட்டிச் சென்றார். பணம் அடங்கிய தோல் பெட்டியை கருணாநிதி முன்னிலையில் மேசை மீது வைத்தேன். கருணாநிதி பெட்டியை எடுத்துக் கொண்டு காலி பெட்டியை திருப்பிக் கொடுத்தார்..” என்று புருஷோத்தம் விரிவாக சாட்சியம் அளித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது சிவராமன் என்ற பொதுப்பணித்துறை அதிகாரி, தாராப்பூர் மற்றும் சத்தியநாராயணா பிரதர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து முக்கியமான ஒரு விஷயத்தைச் சொன்னார்.

குழாய்கள் அமைக்கும்போது அவற்றை சோதனை செய்து பார்க்க.. 12 கோடி காலன் தண்ணீர் தேவைப்படும் என்றும், அந்தத் தண்ணீருக்கு ஆகும் செலவாக அரசு தங்களுக்கு 96 லட்சம் ரூபாய் தர வேண்டுமென்றும் சத்தியநாராயணா பிரதர்ஸ் கேட்டிருந்தனர். ஆனால் தாராப்பூர் நிறுவனமோ, இது போன்ற ஏற்பாட்டிற்கு ஆகும் செலவை தாங்களே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்தனர் என்பதுதான் அந்தச் செய்தி..

இந்த எதிர்ப்புகளையும், கருத்துக்களையும் மீறித்தான் சத்தியநாராயணா நிறுவனத்துக்கு வேலை ஆணை வழங்கப்பட்டது. பணத்தைத் தண்ணீராக செலவு செய்வது என்பது இதுதானா..?

வீராணம் திட்டத்தில் எவ்வளவு பணம் வீணாக செலவழிக்கப்பட்டது என மாநில கணக்காயர் குழு ஆய்வு செய்து அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின்படி கூடுதல் நிதிச் சலுகைகள், தவிர்க்கத்தக்க செலவு, தரக்குறைவான குழாய்கள் ஏற்பட்ட நஷ்டம், தரக்குறைவான சிமெண்ட், மேற்பார்வை பணிக்கான கூடுதல் செலவு என்று மொத்தத்தில் 7 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கருணாநிதிக்கு மட்டும்தான் லாபமா.. இல்லையென்றால் மாறனுக்குமா என்ற கேள்வி வருகிறதே..? பதில் இதோ..! முரசொலி கட்டிடம் கட்டும் பணி சத்தியநாராயணா பிரதர்ஸின் துணை நிறுவனமான மஹாலட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. வேலையையும், கட்டுமானப் பொருட்களையும் இலவசமாகவே மாறன் பெற்றார்.

இது குறித்து கமிஷனிடம் பதிலளித்த மாறன், "மஹாலட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம், சத்தியநாராயணா நிறுவனத்தின் துணை நிறுவனம் என்ற விவரம் தனக்குத் தெரியாது.." என்று பல்டியடித்தார். தன்னிடம் சிக்கியவர்களை தி.மு.க.வினர் எப்படியெல்லாம் பயன்படுத்தி கொள்ளையடித்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.


லஞ்சம் கொடுத்து வாங்கிய வேலையை சத்தியநாராயணா நிறுவனம் சரியாகச் செய்யவில்லை. அரைகுறையாகச் செய்யப்பட்ட பணிகளால் சாலையெங்கும் குழாய்கள் கிடந்தன. இது குறித்து, கருணாநிதியின் முதன்மைச் செயலாளராக இருந்த ஆர்.நாகராஜன் கமிஷன் முன்பு அளித்த சாட்சியத்தில், “என்னைத் தனியாகச் சந்தித்த புருஷோத்தமிடம் வேலைகளை முடிக்க முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி எப்படி ஏற்பட்டது என்று கேட்டேன். வீராணம் திட்டத்தை எங்கள் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக முதலமைச்சர் கருணாநிதிக்கு 29 லட்சம் என பெருந்தொகையை லஞ்சமாகக் கொடுத்ததால் எங்கள் தொழில் புழக்கத்துக்கான பணம் தீர்ந்துபோய்விட்டது” என்று அவர் சொன்னார்..” என்று சாட்சியமளித்துள்ளார்.

ஆக்கவும், அழிக்கவும் வல்லதுதானே அரசு..?

போட்ட திட்டம் நிறைவேறவில்லை. சத்தியநாராயணா நிறுவனம் ஏறக்குறைய நொடித்துப் போய்விட்டது. ஒரு நபர் இறந்துவிட்டால், பிரேதப் பரிசோதனை செய்து, இரங்கல் கூட்டம் போட வேண்டாமா..?

5.6.1974 அன்று சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனம் இத்திட்டத்தை நிறைவேற்றும் பணியில் ஆற்றிய சாதனைகள் குறித்து கருணாநிதி தலைமையில் ஒரு கூட்டம் கூட்டப்படுகிறது. அக்கூட்டத்தில் சத்தியநாராயணா நிறுவனம் குறித்து கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

“சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்துக்குத் தேவைப்படுகின்ற நிர்வாகம் மற்றும் வல்லுநர் அமைப்பு இல்லை. கால அட்டவணைப்படி தொழிற்சாலையை நடத்துவதற்கு போதுமான நிதி வசதிகளும் இல்லை. இப்படிப்பட்ட மாபெரும் திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய திறமை சத்தியநாராயணா நிறுவனத்திடம் இல்லை. அவர்கள் திறமை மீது அதிக அளவில் நம்பிக்கை வைத்து இந்தத் திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது..”

பிரேதப் பரிசோதனை அறிக்கை நன்றாக இருக்கிறதா..?

நிறைவேறாத திட்டத்துக்காக எப்படி ஒரு நிறுவனம் காலியானது. பார்த்தீர்களா..? இதுதான் விஞ்ஞானப்பூர்வமான மோசடி..!


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...