Sunday, April 10, 2011

'மக்கள் ஏமாந்தார்களா? ஏமாற்றப்பட்டார்களா?'

பத்திரமே இல்லாத இடத்தில் சன் டிவி அலுவலகம்..!




என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'நக்கீரன் அன்பு' என்றால் தெரியாத பத்திரிகையாளர்களே இருக்க முடியாது. 'நக்கீரன்' பத்திரிகையில் மிக நீண்ட காலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். 2007-ம் ஆண்டு நக்கீரனில் இருந்து வெளியேறிவிட்டார். தற்போது 'நம் தினமதி' நாளிதழிலும். 'புதிய தமிழகம்' பத்திரிகையிலும்  எழுதி வருகிறார்.
 
அன்பு சமீபத்தில் 'மக்கள் ஏமாந்தார்களா? ஏமாற்றப்பட்டார்களா?' என்கிற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். இதில் 2006 முதல் நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியின்  17 விதமான ஊழல்களை, முறைகேடுகளை ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகளுக்கான ஆதாரங்களைத் தேடியெடுத்து அவற்றினை ஸ்கேன் செய்தும் வெளியிட்டிருக்கிறார். நிச்சயம் இது மிகப் பெரிய விஷயம்தான்.. இதற்காக சகோதரர் அன்புவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்..!!!

இந்தப் புத்தகத்தி்ன் விலை வெறும் 25 ரூபாய்தான்..! தமிழகத்து மக்கள் அனைவரும் அவசியம் இப்புத்தகத்தைப் படித்து தி.மு.க. ஊழல் ஆட்சியின் லட்சணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


தி.மு.க. ஆட்சிக்குக் கொடி பிடிக்கும் உடன்பிறப்புக்களும், ஆதரவாளர்களும் இப்புத்தகத்தை வாசித்து இதில் இருக்கும் ஊழல்களைப் படித்துத் தெளிந்து தங்களது கொள்கையை மறுபரிசீலனை செய்யட்டும். இப்போதும் அவர்கள் தி.மு.க.வினர் ஊழல்களே செய்ததில்லை. இவைகளெல்லாம் ஊழல்களே இல்லை.. என்று சொல்வார்களேயானால் இதில் இருக்கும் ஊழல்கள் அனைத்தும் புனைந்து எழுதப்பட்டவை என்பதை ஆதாரங்களோடு அவர்களும் சொல்லட்டும். தெரிந்து கொள்வோம்..!

இந்தப் புத்தகம் கொஞ்சம் முன்கூட்டியே கையில் கிடைத்திருந்தால் அனைத்தையும் சிரமம் பார்க்காமல் தட்டச்சு செய்து பதிவில் ஏற்றியிருப்பேன். நேற்றுதான் கைக்கு கிடைத்தது.. கால அவகாசமில்லை. நானும் 5 மாத காத்திருப்பிற்குப் பின் இப்போதுதான் ஒரு வேலையில் சேர்ந்துள்ளேன். தட்டச்சு செய்ய நேரம் அதிகமில்லை.. ஆகவே தேர்தல் அவசரத்திற்காக இதில் நாம் அதிகம் அறிந்திருக்காத சில ஊழல்களை மட்டும் உடனுக்குடன் வெளியிடலாம் என்று நினைத்துள்ளேன்.

சென்னையில் இருக்கும் பதிவர்கள் வாய்ப்பு கிடைத்தால் புதிய தமிழகம் வார இதழ் அலுவலகத்திற்கு நேரில் சென்று இப்புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த அரிய, ஆதாரமான புத்தகத்தை முதன்முதலாக என்னிடம் கொடுத்து படிக்கச் சொல்லி, இதனை வலையில் ஏற்ற ஆக்கமும், ஊக்கமும் வழங்கி உற்சாகப்படுத்திய அருமைத் தம்பி பாலபாரதிக்கு வலையுலகத்தின் சார்பாக கோடானு கோடி நன்றிகள்..!

இனி.. இந்தப் புத்தகத்தில் 13-வது முறைகேடாகப் பட்டியலிடப்பட்டிருக்கும் கட்டுரை இது :

பத்திரம் இல்லாத கட்டிடத்தில் சன் டிவி அலுவலகம்

சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் ராஜா அண்ணாமலைபுரத்தில் வாங்கிய 30 கிரவுண்ட் இடம் தொடர்பான பத்திரம், தனித் துணை ஆட்சியர்(ஸ்டாம்ப்ஸ்) அலுவலகத்திலேயே கடந்த 12 ஆண்டுகளாக கிடக்கிறது. ஆனால், இந்த இடத்தில்தான் சன் டிவிக்கென தனி அலுவலகம் 10 மாடிக் கட்டிடமாக உருவாகியுள்ளது.

அது எப்படி பத்திரமே இல்லாத இடத்தில், 10 மாடி கட்டிடம் கட்ட சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி கொடுத்தது..?

சென்னை, மைலாப்பூர் ராஜா அண்ணாமலைபுரத்தில் சென்னை ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்திற்குச் சொந்தமான 40 கிரவுண்ட் காலி மனை இருந்தது. இதை ஏலம்விட அந்த நிறுவனம் முடிவு செய்தது. அப்போது வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன் அந்த இடத்தை ஏலத்திற்கு விடாமல், அடிமாட்டு விலைக்கு சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு வாங்கிக் கொடுத்தார்.



சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன், ஒரு கிரவுண்ட் விலை 39 இலட்சம் என்ற விலையில் 30 கிரவுண்டு காலி மனைக்கு 11 கோடியே 70 லட்சத்திற்கு கிரையம் செய்யப்பட்டு, அதற்கான பத்திரம் 1999-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ம் தேதி மயிலாப்பூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தார்.

பத்திரப் பதிவு செய்யப்படும்போது வழி காட்டி மதிப்பீட்டின்படிதான் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது அரசு ஆணை.

பத்திரப் பதிவு நடந்தபோது, மயிலாப்பூர் பத்திரப் பதிவு அதிகாரி, "ராஜா அண்ணாமலை நகரில் ஒரு சதுர அடி மனையின் விலை 2346 ஆக வழிகாட்டி மதிப்பீடு உள்ளது. அதன்படி 30 கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு 16 கோடியே 87 இலட்சத்து 71 ஆயிரத்து 240 ரூபாய். இதற்கு 13 சதவிகிதம் முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணமாக 2 கோடியே 19 லட்சத்து 40 ஆயிரத்து 261 ரூபாயை செலுத்த வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

ஆனால் சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிர்வாகமோ, பத்திரப் பதிவுத் துறை அதிகாரி கூறிய வழிகாட்டி மதிப்பீட்டு விலைக்கு நிலத்தைப் பதிவு செய்ய முடியாது என்று கூறிவிட்டு, ரூபாய் 11.70 கோடிக்கு உரிய 13 சதவிகிதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணமாக ரூபாய் 1 கோடியே 71 லட்சத்து 13 ஆயிரத்து 772 மட்டுமே  செலுத்தியது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூபாய் 48 லட்சத்து 26 ஆயிரத்து 489 ரூபாய்களாகும்.

ஜெயலலிதா டான்சி நிலத்தை வழிகாட்டு மதி்பபிட்டீற்கு குறைவாக பத்திரப் பதிவு மற்றும் முத்திரைக் கட்டணத்தில் மோசடி செய்ததாக அவர் மீது தி.மு.க. அரசு வழக்குப் பதிவு செய்தது. தனி கோர்ட் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு காலம் சிறைத் தண்டனை வழங்கியது.

இதைக் காரணம் காட்டி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த ஜெயலலிதாவின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிறகு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அந்த நிலம் அரசிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

அப்படியென்றால் ஜெயலலிதாவுக்கு ஒரு நீதி.. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனுக்கு ஒரு நீதியா..?

மயிலாப்பூர் பத்திரப் பதிவு அதிகாரி, வழிகாட்டு மதிப்புப்படி முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் அரசுக்கு 48 லட்சத்து 26 ஆயிரத்து 489 இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறி சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் பத்திரத்தை இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47(அ)(1)-ன் கீழ் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருக்கும் தனித்துணை ஆட்சியருக்கு(ஸ்டாம்ப்ஸ்) அனுப்பி வைத்தார்.

பிறகு அந்த நிலத்திற்கு விலை மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டதா? அந்தப் பத்திரத்தை பதிவு அலுவலகத்தில் இருந்து உரியக் கட்டணத்தைச் செலுத்தி சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் திரும்பப் பெற்றதா என்று தெரியவில்லை.

ஆனால் இதே இடத்தில் வெற்றிகரமாக சன் டிவியின் 10 மாடிக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. சென்ற ஆண்டு புதிய தலைமைச் செயலகத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த சோனியாகாந்தி, சன் டிவி கட்டிடத்தைத் திறக்கப் போவதாக பரபரப்பாக பேச்சு நிலவியது. ஆனால் அந்தக் கட்டிடம் திறக்கப்படவில்லை.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு சன் டிவியின் கட்டிடத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு சன் டிவியின் அலுவலகம் திறக்கப்பட்டுவிட்டது. இப்போது சன் டிவி அங்கிருந்துதான் செயல்பட்டு வருகிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மயிலாப்பூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் வழிகாட்டி மதிப்பீட்டைவிட குறைவான மதிப்புக்கு பத்திரப்பதிவு செய்த ஆவணம் தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டோம்.

எமது தகவலுக்கு பதில் அளித்த மயிலாப்பூர் சார் பதிவாளர், 1999-ல் வழிகாட்டி மதிப்பீட்டைவிட குறைவான மதிப்பில் ஆவணம் பதிவு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் அந்த சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் பதிவு ஆவணத்தை தனித்துணை ஆட்சியருக்கு(ஸ்டாம்ப்ஸ்) அனுப்பி வைத்தோம். இதுவரை மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட ஆவணம் அங்கிருந்து மயிலாப்பூர் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.

அப்படியென்றால் கடந்த 12 ஆண்டு காலமாக தனித்துறை ஆட்சியர் அலுவலகத்தில் சன் டிவி பத்திரப் பதிவு விவகாரம் முடங்கிக் கிடக்கிறது..

பதிவு ஆவணமே இல்லாத ஒரு இடத்தில் கட்டிடம் கட்ட சென்னை பெரு நகர வளர்ச்சிக் கழகத்தின அனுமதி எப்படி கிடைத்தது..?

அரசுக்கு ரூ.48.26 லட்சம் அளவுக்கு இழப்பினை ஏற்படுத்திய சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிர்வாக நியக்குநர் மீது ஏன் வழக்குத் தொடரவில்லை..?

நன்றி : திரு.அன்பு

இனி நாம் பேசுவோம்..!

இதில் எனக்குப் புரியாத ஒரு விஷயம், 12 ஆண்டுகளாக இது தனித்துறை ஆட்சியர் அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது என்றால், 2001 முதல் ஆட்சி செய்த ஜெயலலிதாவின் ஆட்சியில் இது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்..? ஒருவேளை ஆத்தாகிட்ட யாரும் சொல்லலையா..? இல்லை மறைத்துவிட்டார்களா..? எதுவும் புரியவில்லை. காரணம் என்னவெனில், நானே இப்போதுதான், இந்தப் புத்தகத்தைப் படித்துதான் இந்த விஷயத்தையே தெரிந்து கொண்டேன்..! அவ்வளவு ரகசியமாக வைத்திருந்திருக்கிறார்களே பாவிகள்..!

பொதுவாக நாம் ஓரிடத்தை சொந்தப் பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கிய பின்பு நம் பெயருக்கு பத்திரத்தை எழுதி பதிவு செய்து கொடுப்பார்கள். இதன் பின்பு, இந்தப் பத்திரத்தை காண்பித்துதான் குறிப்பிட்ட அந்த இடத்தில் நாம் வீடு கட்டவோ, அல்லது பில்டிங் கட்டவோ விண்ணப்பிக்கவே முடியும்.

ஒருவேளை அந்த இடம் நமக்குச் சொந்தமானதாக இல்லை என்றால் உரிமையாளருக்கும், நமக்கும் இது தொடர்பாக இருக்கும் தனி ஒப்பந்தங்களைக் காட்டினால்தான் கட்டிடம் கட்டவே அனுமதி கிடைக்கும்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடத்தில் வீடுகள் கட்டவோ, பில்டிங் கட்டவோ சென்னை பெருநகர வளர்ச்சி மன்றத்திற்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அங்கேயும் இந்தப் பத்திரம் இல்லாமல் எந்தக் கதையும் நடக்காது..!

ஆனாலும் உரிமையாளர் பத்திரமே இல்லாமல் சன் டிவி அந்த இடத்தில் 10 மாடி கட்டிடம் கட்டி முடித்திருக்கிறது எனில் இதில் எந்த முறைகேடும் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா..?

சென்னை பெருநகர வளர்ச்சி மன்றத்தின் அனுமதியில்லாமலும் சன் டிவி இதனைக் கட்டி முடித்திருக்க முடியாது. ஆக.. சென்னை பெருநகர வளர்ச்சி மன்றம் எதை வாங்கிக் கொண்டு, என்ன சமரசம் செய்து இந்த முறைகேட்டுக்கு ஒத்துக் கொண்டது என்பதும் விசாரிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்..!

சாதாரணமாக ஒரு வீடு கட்ட அனுமதி கேட்டு மாநகராட்சிக்குச் சென்றாலே எத்தனை எத்தனை பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது என்பதை வீடு கட்டிய சென்னைவாழ் தமிழர்களிடம் கேட்டுப் பாருங்கள்.. கண்ணீர் விடுவார்கள்.

நாம் சமர்ப்பிக்கும் அனைத்து ஆதாரங்களும் உண்மையானதாக இருந்தாலும், அது சரியில்லை.. இது சரியில்லை என்றெல்லாம் நொட்டை, நொள்ளை சொல்லிவிட்டு நாம் சில காந்தி தாத்தா உள்ள நோட்டுக்களை வீசியெறிந்தால் மட்டுமே நமக்கான அனுமதி கிடைக்கும். இதனை வாங்குவதற்குள் ஒவ்வொரு வீட்டுக்காரனும், பில்டர்ஸும் 10, 15 முறை இந்தியன் தாத்தாவாக ஆகிவிடலாமா என்றுகூட யோசிப்பார்கள். அந்த அளவுக்கு லஞ்ச லாவண்யம் இத்துறையில் விளையாடுகிறது..

தெருவில் தனது வீட்டு முன்பாக 500 செங்கற்களை குவித்துவைத்தால்கூட வட்ட கவுன்சிலரும், வட்டத்தின் ஆளும்கட்சி அடிப்பொடிகளும் ஓடோடி வருவார்கள். அவர்களுக்கு வெட்ட வேண்டியதை வெட்டினால்தான் அந்த செங்கற்கள் நாளை கட்டிடமாக உருவாகும். இல்லையெனில் இரவோடு இரவாக ஏதாவது ஒரு காரணம் சொல்லப்பட்டு அந்த உரிமையாளரின் அனுமதி ரத்து செய்யப்படும். அல்லது நிறுத்தி வைக்கப்படும். இது சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் நடக்கின்ற விஷயம்.

ஆனால் இங்கே ஒரு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக.. பத்திரமே இல்லாத இடத்தில் 10 மாடி கட்டி முடித்து குடியேறியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு இந்த விஷயத்தில் முறைகேட்டை செய்திருக்க வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள்..

இதில் சன் டிவி தனது அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தித்தான் இந்த முறைகேட்டை செய்திருக்கும் என்பதை தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் அதிகம் தெரியாத சிறுவர்கள்கூட சொல்லிவிடுவார்கள்..!

இப்படி சொத்து, சுகத்துக்காக ஆட்சி,  அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் இந்தக் கொள்ளைக்காரர்களை மனதில் வைத்து ஏப்ரல் 13 அன்று வாக்களியுங்கள்..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...