Wednesday, April 20, 2011

தமிழக மீனவர்களும்

தலையிடியும் காய்ச்சலும் தமிழக மீனவர்களும்

கடந்த சில நாட்களாக ட்விட்டர், பேஸ்புக், வலைகள் என எங்கு பார்த்தாலும் TNFisherman தான். தமிழக மீனவர்களின் கொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இணையம் பாவிக்கும் பெரும்பாலான அறிவுஜீவிகள் போராட்டம் நடத்ததொடங்கிவிட்டார்கள். Save TN Fisherman

ஈழப்போர் ஆரம்பித்த நாள் முதல் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும் அரங்கேறியே வந்துள்ளது. இப்போது ஈழப்போருக்கு முள்ளிவாய்க்காலில் முற்றும் அல்லது கம வைத்த பின்னரும் தமிழக மீனவர்களின் கொலைகள் மட்டும் கலைஞர் தொலைக்காட்சி மானாட மயிலாட போல் சீசன் சீசனாக தொடர்கின்றது. இத்தனைக்கும் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்குமான உறவு உலகமே அறிந்தது.
சிலகாலத்துக்கு முன்னர் ரோவின் கதைக்கு கருணாநிதியின் சீரிய திரைக்கதை, வசனத்தில் தமிழக மீனவர்கள் கடத்தல் நாடகம் அரங்கேறியது, திமுக ஜால்ராக்கள் அல்லது அடிமைகள் இணையங்களில் புலிகளைத் திட்டத் தொடங்கினார்கள். தன் குடும்பத்துக்காக கருணாநிதி உலகத் தமிழர்களைப் பலி கொடுப்பது ஏனோ இன்னும் அந்த புத்திஜீவிகளுக்கு புரியவில்லை.
இந்த விடயத்தைப் பொறுத்தவரை தமிழக மக்கள் இலங்கை கடற்படையின் மீது குற்றம் சுமத்துகின்றார்கள். இந்திய அரசோ தமிழக அரசோ இதனை ஒரு சாதாரண மீனவனின் இறப்பாகவோ நினைப்பதால் சிலவேளைகளில் கடிதத்துடனும் தந்தியுடனும் முடித்துவிடும். தேர்தல் வருவதால் இம்முறை ஐந்து லட்சத்துடன்(அடித்த கோடிகளில் சில லட்சம் போவதால் குடும்பத்துக்கு நட்டமில்லைத்தானே) முடித்துக்கொண்டது. "யுத்தம் என்றால் மக்கள் கொல்லப்படுவார்கள்" என்ற தத்துவ முத்தை உதிர்த்த கொடநாடு ராணியோ ஒரு லட்சத்துடன்(இப்போ அவர் பிச்சைக்காரிதானே) நிறுத்திவிட்டார். மன்மோகன் என்ற அடிமையோ தன்னுடைய எஜமானியின் உத்தரவு கிடைக்காமல் மெளனமாகவே இருக்கின்றார் இருப்பார்.

ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த திரையுலகம் பாசத்தலைவனைக் கண்டிக்கமுடியாமல் இந்த விடயத்தில் மன்மோகனைப்போலவே மெளனமாக இருக்கின்றார்கள். ஊடகங்களோ ஆடுகளமா, சிறுத்தையா டாப் டென்னில் முதலிடம் என்பதிலும் தமன்னாவின் இடுப்பா தபசியின் இடுப்பா 2011ல் தமிழகத்தை ஆட்டிப்படைக்கப்போகின்றது என்ற சீரிய விடயங்களிலும் ஈடுபட்டுள்ளது. ஆனந்தவிகடன் மட்டும் இதைனையும் ட்விட்டரில் நடக்கும் போராட்டத்தையும் கண்டுகொண்டுள்ளது.

இதே நேரம் இந்த விடயத்தில் தமிழக மீனவர்களினால் பாதிக்கப்படும் இலங்கை மீனவர்களைப் பற்றியும் பார்க்கவேண்டும். அண்மையில் வீரகேசரியில் வந்த செய்தி ஒன்றில் இந்திய மீனவர்களால் தமக்கு அதிகம் நட்டம் ஏற்படுவதாக இலங்கை வடபகுதி மீனவர்கள் குறிப்பட்டதாக செய்தி வந்தது. அந்த செய்தியின் தொடுப்பு இங்கே .
யாருக்கும் கேட்காத பருத்தித்துறை மீனவர்களின் குரல்!

அதே நேரம் இலங்கைக் கடற்படையோ தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டுவதாக குற்றம் சாட்டுகின்றது. ஆனாலும் அவர்களின் கொலைக்கு தாங்கள் காரணமில்லை எனவும் கூறுகின்றது. எது எப்படியோ மீனவர்களின் கொலைகள் எவர் செய்தாலும் கண்டிக்கப்படவேண்டியதே. ஆனால் தங்கள் நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்காத இந்திய கடற்படையும் இந்திய அரசும் மிகவும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவர்கள். கையாலாகாத கடற்படையை வைத்துக்கொண்டு இந்தியா 2020ல் வல்லரசாகும் என்பது பாடசாலை மாணவர்களுக்கு உரையாற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவு. அவர் வெறும் கனவு மட்டும் தான் காண்பார் ஒரு ஜனாதிபதியாகவோ இல்லை தமிழராகவோ எந்தப் படுகொலைக்கும் அவர் குரல் கொடுப்பதே இல்லை.


முத்துக்குமாரின் எழுச்சியினால் தமிழகம் உயிர்பெறும் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நல்வழி பிறக்கும் என 2009ல் பலரும் எதிர்பார்த்தார்கள் ஆனால் தங்கள் சுயத்தை குவாட்டருக்கும் புரியாணிக்கும் விபச்சாரம் செய்த தமிழகத் தமிழர்கள் இன்றைக்கு மரணம் தங்கள் வீட்டுக் கதவைத் தட்டியதும் ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் எழுச்சி கொண்டுள்ளமை மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் இன்னும் சில நாட்களில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இன்னொரு குவாட்டருக்கும் புரியாணிப் பார்சலுக்குமாக சோரம் போகமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

ஈழத்தமிழர்களை தன் எதிரியாக நினைக்கும் ஜெயலலிதாவுடன் ஆனாப்பட்ட சீமானே ஓட்டு அரசியல் நடத்தும்போது மற்றவர்கள் நிலையும் அதேதான்.

தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போது கடிதத்துடன் நிறுத்துகின்ற உலகத் தமிழினத் தலைவன் எனத் தன்னை தானே சொல்லிக்கொள்ளும் கோபாலபுரத்து குடும்பத் தலைவர் இப்போ தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக்கு தன்னுடைய தள்ளாத வயதிலும் விமானத்தில் பறந்து டெல்லி செல்கின்றார். வரும் தேர்தலிலும் யாருக்கு எந்த தொகுதி என்பதை நீரா ராடியா பிரைவேட் கம்பனிதான் தீர்மானிக்கும் போல் தெரிகின்றது.

எது எப்படியோ தமிழக தேர்தல் முடியும் வரை தமிழக மீனவர்கள் தற்காலிகமாக கொல்லப்படுவது நிறுத்தப்படலாம். இல்லையென்றால் இலவச டிவி கொடுக்கும் திமுக அரசு இராமேஸ்வரம் மீனவர்களுக்கு மட்டும் இலவசமாக பாடையும் கொடுக்கும். கொலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களுக்கு இலவசமாக மரணச் செலவுகளும் செய்துகொடுக்கும். தலைவர் வழக்கம்போல் கடிதம் தந்தி எழுதுவார். தேர்தல் சமயத்திலும் இந்தக் கொலைகள் தொடர்ந்தால் மீண்டும் தாத்தா இரண்டு உணவு இடைவேளைகளுக்கிடையில் மனைவி துணைவி புடைசூழ உண்ணாவிரதம் இருப்பார் ஆனால் ராஜினாமா மட்டும் செய்யமாட்டார் செய்தால் முழுக்குடும்பமும் ஆ.ராசாவின் பின்னாள் இருந்து சுருட்டிய கோடிகளுக்காக இத்தாலி மஹாராணியால் கைது செய்யப்படுவார்கள்.

நம்ம உடன்பிறப்புகளோ உலகக்கிண்ணப்போட்டியில் சச்சின் சதமடித்தாரா? ஹர்பஜன் விக்கெட் எடுத்தாரா? மானாட மயிலாடவில் கலா மாஸ்டரின் எனர்ஜியையும் பார்த்து ரசிப்பார்கள். தேர்தல் முடிந்தபின்னர் மீண்டும் தாத்தா வருவார்( 1.76 லட்சம் கோடி பணம் இருக்கு ஒவ்வொரு வாக்களருக்கும் ஒரு லட்சம் கொடுத்தாலே பல லட்சம் கனிமொழியின் சுவிஸ் வங்கியில் மீதமிருக்கும்) கொலைகள் நடக்கும்.

இரண்டு நாட்டும் அரசும் முழுஈடுபாட்டுடன் இருபக்க மீனவர்களின் பிரச்சனைகளையும் பேசித்தீர்க்கவேண்டும் இல்லையென்றால் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடலில் செய்யும் அத்துமீறல்களும் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

இதே நேரம் தங்கள் மீனவர்களின் பிரச்சனையை உலகறிய சமூக இணையத் தளங்களிலும் வலைகளிலும் புரட்சி செய்யும் முதுகெலும்புள்ள என் தமிழக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் (தொப்புள்கொடி உறவு என அழைக்கத்தான் ஆசை ஆனால் அது அறுந்து பல காலமாகிவிட்டது).

அரசன் அன்றுகொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது தமிழ்ப் பழமொழில் அரசன் கொல்கின்றானோ இல்லையோ இப்போ தெய்வம் நாடு கடந்தும் கொல்லும்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...