Wednesday, April 20, 2011

செம்மொழி


நெஞ்சு பொறுக்குதில்லையே - செம்மொழி

மொழிக்கு மாநாடு என்பது காலத்தின் கட்டாயம். இதுவரை நடந்தேறிய உலகத் தமிழாராட்சி மாநாடுகள் இதனைத் தான் செய்தன. அங்கே தமிழுக்கு மட்டும் தான் ஆராய்ச்சி நடந்தது. இன்றைக்கு இணையத்தில் ஆங்கிலத்திற்க்கு அடுத்து ஆதிக்கம் செலுத்தும் மொழிகளில் தமிழும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்க்கு என பொறுப்பான குழு இருக்கும் போது, கருணாநிதியால் முதலில் தமிழாராய்ச்சி மாநாடு என அறிவிக்கப்பட்டு பின்னர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு அவர் கூறிய காரணம் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த போதிய அவகாசம் போதாது என தமிழாராய்ச்சி மன்றம் மறுத்துவிட்டது. இதனால் தான் என்னவோ தன்னுடைய தலைமையுரையில் இதுவரை நடந்த தமிழாராய்ச்சி மாநாடுகளை விட இது பெரியது சிறப்பானது என கூறினாரோ.

உண்மைதான் ஏனென்றால் இதுவரை நடந்த தமிழாராய்ச்சி மாநாடுகளில் தமிழைத் தான் ஆய்வு செய்தார்கள். கோவையிலோ தமிழர் தலைவன் என்பவரையல்லவா ஆய்வு செய்தார்கள்.

எத்தனையோ எதிர்ப்புகளுக்கும் வெளியே கேட்காத குரல்களுக்கும் மத்தியில் செம்மொழி மாநாடு நடந்துமுடிந்துவிட்டது. பலரால் எதிர்பார்க்கப்பட்டது போல் கருணாநிதிக்கு பிரமாண்டமாக நடந்த பாராட்டுவிழா போல் தான் செம்மொழி மாநாடு நடந்தேறியது.

முதல்கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் மாநாட்டின் மைய்ய நோக்குப்பாடலே தமிழிசையில் இல்லாமல் தமிழில் அழகாகப் பாடமுடியாத தமிழைக்கொலை செய்யும் பாடகர்களினால் ஏஆர் ரகுமானால் பாடவைத்து தன்னை மலையாளி என காட்டிக்கொள்வதில் பேருவகை அடையும் கெளதம் வாசுதேவ மேனனினால் படமாக்கப்பட்டது. பாடலை கவிஞர் கருணாநிதி அழகாக தொகுத்திருந்தார். தொல்காப்பியம், திருக்குறள், மற்றும் தமிழ் இலக்கியங்களில் இருந்து எடுத்த வரிகளை அழகுறத் தொகுத்தபடியால் இதனை அவர் எழுதிய கவிதை எனச் சொல்லமுடியாது தானே.

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் என்பது போல் கோவையில் எத்தனையோ மொழிஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் உரைகள் நிகழ்ந்திருந்தாலும் கவியரங்கத்தில் கருணாநிதி புகழ்பாடிய கவிஞர்கள் இதனைத் தலைவன் விழாவாகவே மாற்றிவிட்டார்கள்.

மு.மேத்தா,வாலி,நா.முத்துக்குமார் என மதிப்பு வைத்திருந்த கவிஞர்கள் தங்கள் மதிப்பையும் தமிழ்த் தாயின் மதிப்பையும் குறைத்தே விட்டார்கள். வைரமுத்து சொல்லவே தேவையில்லை கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்கவே பிறந்தவர். அண்ணா நூற்றாண்டுக் கவியரங்கத்தில் தம்பிக்கு கவி பாடி, அண்ணாவை உயர்த்துகின்றேன் என மஹாத்மாவையே கீழிறக்கிய அற்பன். கருணாநிதியின் பேர்த்தி கயல்விழியோ கவிதை வாசிக்கும் போது "ஸ்டாப்" என ஆங்கிலத்தில் எழுதி அந்த இடங்களில் நிறுத்தி வாசிக்கும் "புகல்" வாய்ந்த கவிஞர், தன் தாத்தாவின் உமிழ்நீர் கூட தமிழ்நீர் எனப் புதிய கண்டுபிடிப்பை மாநாட்டு மேடையில் முழக்கி பெருமை சேர்த்துவிட்டார்.

வாலியோ தமிழுக்கு ஆராய்ச்சி செய்யாமல் குஷ்புவை ஆராய்ச்சி செய்தார். சோ என்ற விஷக் கிருமியைக் கண்டிக்கின்றேன் என சாதியை தமிழாராய்ச்சி மேடையில் உரைத்தார்.

ஐயா கவிஞர்களே நடந்ததோ செம்மொழி மாநாடு. ஒரு வரலாற்று நிகழ்வு அங்கே ஏன் அரசியல்? சினிமா?. உங்கள் தலைவன் சிறந்த கதாசிரியர் தான் அதனால் தான் என்னவோ மாநாடு தொடங்குவதற்க்குச் சிலநாட்களுக்கு முன்னரும் நல்லதொரு திரைக்கதை அமைத்திருந்தார். செம்மொழி மாநாட்டை கருணாநிதி தமிழுக்கு எடுத்த விழாவாக நடத்தி முடித்தபின்னர் அவருக்கு நீங்கள் எடுக்கும் பாராட்டுவிழாவில் அவரைப் பாராட்டி இருந்தால் ஒருதரும் உங்களைப் பழிக்கமாட்டார்களே? ஆனால் அப்படிச் செய்யாமல் நீங்கள் அனைவரும் இப்போ பாணபத்திர ஓணான்டியை விட கீழிறங்கிவிட்டீர்கள். இந்தக் கலங்கத்தைத் துடைக்க நீங்கள் எத்தனை கவிராயன் கவிதையோ, கிருஷ்ணாவதாரமோ, கண்ணீர்ப்பூக்களோ எழுதினாலும் முடியாது.

கவியரங்கம் தொடங்குமுன்னரே கருணாநிதி என்னைப் பாடாமல் என் தமிழைப் பாடுங்கள் என உத்தரவிட்டிருக்கலாம். ஏனோ செய்யவில்லை.

இனியவை நாற்பது என்ற தமிழக் கலாச்சார ஊர்வலத்தினை காட்டிய கலைஞர் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள் மன்னரையும், மஹாராணிகளையும், இளவரசர்களையும், இளவரசியையும் அவரது புதிய தோழி பச்சைத் தமிழச்சி குஷ்புவையும் காட்டி தங்கள் விசுவாசத்தைக் காட்டினார்கள். கருணாநிதியின் குடும்ப அங்கத்தவர்கள் 84 பேர் மேடையில் அமர்ந்திருந்ததாக விகடன் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

தமிழை ஆட்சிமொழியாக கொண்ட நாடுகளில் இருந்து தமிழறிஞர்களை அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். சில நாடுகளில் இருந்து அரசியல்ப் பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் பக்கத்து நாடான இலங்கையில் இருந்து எந்த அரசியல்வாதிகளும்(தமிழ் பேசும்) அழைக்கப்படவில்லை.

பேராசிரியர் சிவத்தம்பி ஆரம்பத்தில் இதற்க்குச் செல்லமாட்டேன் என மறத்து பின்னர் சென்று ஆங்கிலத்தில் உரையாற்றி நாமும் ஆங்கிலம் பேசுவோம் என செம்மொழி மாநாட்டில் நிரூபித்துள்ளார்.

கம்பனுக்கு கவிபாடும் கம்பவாரிதி ஜெயராயோ "நாம் தமிழ்த் தாய் பெற்றவர்கள், கருணாநிதியோ தமிழத் தாயைப் பெற்றவர்" என ஒரு வரியைச் சொல்லி கருணாநிதியைக் குளிர்வித்திருக்கின்றார். யாழ் நூலகம் எரித்தவர்களுக்கு துணை போனவருக்கு பாராட்டுவிழா நடத்தியவர்களிடம் இதனைவிட அதிகம் எதிர்பார்த்தேன்.

தமிழில் கதைத்தால் குற்றமென அபராதம் விதிக்கும் பத்மா சுப்பிரமணியத்தின் நடன நிகழ்வு, ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகளை நடத்துகின்ற வாசுகி ஜெகதீஸ்வரனின் இந்திய வம்சாவளி நடனங்கள். பேராசிரியர் மெளனகுருவின் இராவணேஸ்வரன் நாட்டுக்கூத்தை வாசுகியின் நடனத்திற்க்குப் பதிலாக இலங்கையில் இருந்து தருவித்திருக்கலாமே.

இன்னும் பல குற்றச்சாட்டுகளை எழுதலாம். ஆனாலும் என்னை தமிழனாகப் பார்க்காமல் ஈழத்தமிழனாகப் பார்க்கும் சில திமுக அன்பர்கள் ஏதோ காழ்ப்புணர்ச்சியில் இதனை எழுதியிருக்கின்றேன் என நினைத்து திட்டுவார்கள். அன்பர்களே தமிழனாக இருந்து நான் சொன்ன சில குற்றச்சாட்டுகளைப் ஆராய்ந்தால் நடந்தது தலைவனுக்கு பாராட்டுவிழாவே அன்றி தமிழன்னைகான விழா இல்லை என்பது புலப்படும்.

தனக்கு பாராட்டு விழாவாக இல்லாமல் இதனை செம்மொழி விழாவாகவே நடத்தியிருந்தால் கலைஞர் கருணாநிதி என்றென்றும் தமிழர் மனங்களில் பழைய கசப்புகளை மறந்து இடம் பிடித்திருப்பார்
.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...