வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் தமிழர்களில் கணவர்கள் படும் பாடு பற்றி தான் இத்தொடர். தினம் 150 ரூபாய் சம்பளத்திற்குச் செல்லும் கூலித் தொழிலாளியின் வறுமையை போக்க இந்த அரசு என்ன செய்திருக்கிறது? என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தேன். உண்மையில் ஏழைகளைக் கொல்லும் அரசுகளாகவே இது நாள் வரைக்குமான அரசுகள் இருந்து வந்திருக்கின்றன. எந்த ஒரு திட்டமும் ஏழைக்கு வரப்பிரசாதமாய் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு மனிதன் படிப்பதற்கு எதற்கு? அவன் நன்கு படித்து, நன்றாக சம்பாதித்து நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமென்பதற்காத்தான். ஆனால் இந்த அரசுகள் என்ன செய்கின்றன. நல்ல கல்வியைப் பெற எத்தனை லட்சம் செலவழிக்க வேண்டியிருக்கிறது? அரசே தன் குடிமக்களின் கல்விச் செலவை ஏற்றால் என்ன? ஏற்க மாட்டார்கள். ஒவ்வொரு அரசியல்கட்சிக்கும் ஏழைகள் தான் தேவை. பணக்காரர்களும், மிடில் கிளாஸ் மக்களும் தேவையே இல்லை. சரி அது போகட்டும். ஒரு கூலித்தொழிலாளியின் புலம்பலைக் கவனியுங்கள்.
கணவன் : இருக்கிற பிரச்சினை போதாதுன்னு டிவிக்காரன் வேற வந்துட்டான். தண்டம் 150 ரூபாய் அழ வேண்டியிருக்கிறது கேபிளுக்கு. இவ வேற எப்போ பார்த்தாலும் டிவியே பாத்துக்கிட்டு சாப்பாடு கூட போட மாட்டேங்குறா. இவ அப்பன் செத்தாமாதிரி அழுவுறா. டிவியைக் கொடுத்து எழவு வீடா மாத்திப்புட்டானுவ. அங்க இங்க போயி விறகு வெட்டிக்கிட்டு வந்து சமைச்சுக் கொடுத்தா. சாப்பிட நல்லா இருந்துச்சு.
400 ரூபாய் கேசுக்குன்னு தண்டம் அழுவ வேண்டியிருக்கு. இவனுங்களை இதெல்லாமா கேட்டோம். அது மட்டுமா பண்ணுறானுவ. சுய உதவின்னு சொல்லிக்கிட்டு இவ பாட்டுக்கு அங்கே இங்கேன்னு கிளம்பி போயிடுறா. பிள்ளைகளை யாரு கவனிக்கறது?என்ன சாப்பிட்டுச்சுங்க, படிச்சுதுங்களான்னு யாரு பாக்குறது? ரேசன் அரிசின்னு ஒன்னைப் போடுறானுவ.
அரிசி கொடுத்த மவராசனை வீட்டில இந்த அரிசியைச் சாப்பிடச் சொல்லனும். ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தேன், கொடுத்தேன்னு சொல்லுறாங்க. இவங்க அபப்ன் வீட்லேர்ந்தா கொடுத்தாங்க? அந்த அரிசியை நாய் சாப்பிடுமா? நாத்தம் குடலைப் பிடுங்குது. 50 ரூவாய்க்கு சரக்குச் சாமனுவ கொடுக்கிறேன்னுவானுங்க. இரண்டு நாளைக்கு பத்த மாட்டேங்குது. காய்கறியெல்லாம் ஒவ்வொரு நாளைக்கு ஒரு வெலை விக்குது. நல்ல அரிசி வாங்கலாம்னா 40 ரூபாய்ங்கிறாங்க. நாம தான் பட்டினியாக் கிடக்கலாம். பொண்டாட்டி பிள்ளையலையுமா பட்டினியா போட முடியும்?
பட்டினியாக் கிடந்த சாவறது தான் ஒரே வழி. அதைச் செய்யுறோம், இதைச் செய்யறோம்னு சொல்றவங்க எல்லாம் வெள்ளையும் சொள்ளையுமா திரியிறாங்க. காலுல விழுந்து கும்பிடுறாங்க.
போதுங்க… இதுக்கு மேலே ஒன்னும் சொல்ல முடியலை. பசி வயித்தைக் கிள்ளுது.
No comments:
Post a Comment