Thursday, April 21, 2011

"நாசமாய் போய் விட்டோம்' : சினிமா துறையை புதிய அரசு மீட்க வேண்டும்


 
கே.ஆர்.ஜி., சினிமா தயாரிப்பாளர் : சினிமா துறைக்கு பொற்காலம் என நீங்கள் கருதும் காலம் எது? ஏன்? இயக்குனர்கள், நடிகர்கள், "டெக்னீசியன்'கள் என, அனைத்து தரப்பினர்களாலும், தயாரிப்பாளர்கள் தெய்வங்களாக மதிக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அன்றைய ஹீரோக்களிடம் சம்பளத்தை விட தங்களின் படம், "ரீலிசாகி' வெற்றிகரமாக ஓட வேண்டும் என்ற எண்ணமே பிரதானமாக இருந்தது. அவர்கள் தங்களின் ஒரு படம், "ஹிட்'டானால், அடுத்தப் படத்திற்கு தயாரிப்பாளரிடம் சம்பளத்தை கொஞ்சம் கூட்டிக்கேட்க யோசிப்பர். அதுபோல, ஒரு படம் தோல்வியை தழுவினால், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரை அழைத்து, அடுத்த படம் தயாரிக்க தேவையான அனைத்து உதவிகளையும் அன்றைய ஹீரோக்கள் செய்தனர். என் அனுபவத்தில், கடந்த, 1970 முதல், 1990ம் ஆண்டு வரை தமிழ் சினிமா துறைக்கு பொற்காலம் என்று சொல்லலாம்.
அதன்பின், சினிமா துறையின் போக்கு எப்படி இருக்கிறது?
"டிவி' சேனல்களின் பெருக்கத்தால், தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் சினிமா ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதைவிட, திருட்டு "விசிடி' என்ற ஒரு கொடிய விஷயம் சினிமா துறையை கடந்த 10 ஆண்டுகளில் கொஞ்ச கொஞ்சமாக நாசமாக்கி விட்டது.
திருட்டு "விசிடி'யை தடுக்க அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையா?
அரசு அப்படி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்திருந்தால், இத்துறை கடும் வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்குமே!
சினிமா துறையின் வீழ்ச்சிக்கு வேறென்ன காரணம்?
திரைப்பட துறைக்கு பின்புலமாக கருதப்படும் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் ஆகியோருக்கிடையே இருந்த ஒருங்கிணைப்பு, நட்புணர்வு தற்போது இல்லை. வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
சினிமா பார்க்கும் ஆர்வம் தற்போது மக்களிடம் குறைந்துவிட்டதாக கருதுகிறீர்களா?
அப்படி சொல்ல முடியாது. ஆனால், தியேட்டர்களில் கட்டணத்தை நூறு, இருநூறு என இஷ்டத்திற்கு நிர்ணயிக்கின்றனர். சாமானியர்கள், தங்கள் குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் சூழல் இன்று இல்லை. இதற்கு, நடிகர்களின் சம்பளம், தேவையில்லாத விளம்பர செலவு, தயாரிப்பு செலவுகளை கண்டிப்பாக குறைத்தாக வேண்டும்.
இப்போதும் ஒரு குறிப்பிட்ட பெரிய நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரித்துக் கொண்டுதானே உள்ளது?
ஆட்சி, அதிகாரம் தங்கள் கையில் இருப்பதால், எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையில் செயல்பட்டு வருகின்றனர். ஒன்று, அவர்கள் படம் தயாரிக்கின்றனர் அல்லது வேறொருவர் தயாரிக்கும் படத்தை தங்கள் நிறுவனத்தின் பெயரில், "ரிலீஸ்' செய்கின்றனர். இவர்களுக்கு உடன்பட மறுத்து, படத்தை வெளியிடும் தயாரிப்பாளர்களின் படங்கள், "ரிலீசான' சில தினங்களிலேயே தியேட்டர்களிலிருந்து எடுக்கப்பட்டு விடுகிறது.
எடுக்க மறுக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் மிரட்டப்படுவதை தாண்டி, அழிக்கப்படுகின்றனர். சமீபகாலத்தில், 300 சிறு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சினிமாவை தவிர வேறு தொழில் தெரியாது. இவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
அரசியல் தலையீட்டால் சினிமாத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு இந்த தேர்தலில் எதிரொலிக்குமா?
பொறுத்திருங்கள்; சினிமாக்காரர்களின் கோபம் இந்த தேர்தலில் வெளிப்பட்டுள்ளதா இல்லையா என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.
பல இடங்களில் தியேட்டர்கள் வணிக வளாகங்களாக, திருமண மண்டபங்களாக மாறிவருகின்றன. ஒரு தயாரிப்பாளராக இதை பார்க்கும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கிறது?
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தியேட்டர்களின் எண்ணிக்கை, 2,500லிருந்து, 1,500 ஆக குறைந்துவிட்டது. ஒரு தயாரிப்பாளராக இதை கண்டு மிகவும் வேதனையடைகிறேன்.
சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் நிலை பற்றி?
தற்போது தமிழில் மட்டும், 150க்கும் மேற்பட்ட படங்கள் ஆண்டுக்கணக்கில் ரிலீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், இத்துறைக்கு புதிதாக வரும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறி தான்.
தயாரிப்பாளர் என்ற முறையில் புதிதாக அமையவிருக்கும் அரசுக்கு உங்கள் கோரிக்கை என்ன?
அரசால் நாங்கள் நாசமாய் போய்விட்டோம்; ஆதரிக்க ஆளில்லாமல் அனாதைகளாகி விட்டோம். குறிப் பிட்ட ஒரு நிறுவனத்தை சார்ந்தவர்களின் ஆதிக்க பிடியில் சிக்கித் தவிக்கும் சினிமாத் துறையை மீட்டு, புத்துயிர் பெறச்செய்யும் முயற்சியை புதிதாக அமையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.
சினிமா எப்போது முறைசார்ந்த தொழிலாக மாறும்?
எதிர்காலத்தில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...