டில்லியில் உள்ள வீட்டை 10 நாட்களுக்குள் காலி செய்யும்படி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை கெடு விதித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதில் டில்லியில் ஜோர்பாக் பகுதியில் உள்ள வீடும் அடங்கும். இவ்வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த ஆண்டே வீட்டை பறிமுதல் செய்திருந்தது. ஆனால் கார்த்தி சிதம்பரம் இதுவரை வீட்டை காலி செய்யவில்லை. இதனால் 10 நாட்களில் வீட்டை காலி செய்யும்படி நேற்று (ஜூலை 31) மாலை நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இந்த நோட்டீசின்படி, இனு்னும் 10 நாட்களில் வீட்டை காலி செய்து, அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடு, கார்த்தி மற்றும் அவரது தாய் நளினி சிதம்பரத்தின் பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த வழக்கில், முன்ஜாமின் கேட்டு டில்லி ஐகோர்ட்டில் இருவரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கில் இருவரையும் கைது செய்வதற்கான தடையை ஆக.,09 வரை நீட்டித்து டில்லி சிறப்பு கோர்ட் இன்று (ஆக.,01) உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment