Friday, August 9, 2019

காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு.. மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு....

கர்நாடக அணைகளில் இருந்து நொடிக்கு ஒன்றரை லட்சம் கன அடி வீதம் காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 3 அடி உயர்ந்தது.
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை கடந்த இரு நாட்களாக கொட்டித் தீர்க்கிறது. இதனால், அந்த மாநிலங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 
84 அடி முழு கொள்ளளவு கொண்ட கபினி அணை, 82 அடி நிரம்பியது. நேற்று வரை கபினி அணைக்கு நொடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
அது அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்ட நிலையில், பின்னர் ஒன்றே கால் லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் உப அணையான தாரகாவில் இருந்து நொடிக்கு 25 ஆயிரம் கன அடி வீதம், காவிரியில் பாய்கிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நொடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
இதன் காரணமாக காவிரியில் மொத்தமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
திறந்து விடப்பட்ட நீரானது நொடிக்கு ஒரு லட்சம் கன அடி என்ற வீதத்தில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வந்து கொண்டிருக்கிறது.
இதனால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக உள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடியில் வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 54 அடியாக இருந்த நிலையில், ஒரேநாளில் 3 அடி உயர்ந்து தற்போது 57.16 அடியாக உள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து வரும் நீர் இதேஅளவில் தொடரும் பட்சத்தில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...