Monday, June 14, 2021

அ.தி.மு.க.,வில் சசிகலாவுக்கு இடமில்லை.

 அ.தி.மு.க.,வில், சசிகலாவுக்கு இடமில்லை' என, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலாவுடன் மொபைல் போனில் பேசிய நிர்வாகிகளுக்கும், 'கல்தா' கொடுக்கப்பட்டது. அவர்கள் எல்லாரும், கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா மற்றும் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நேற்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், பகல், 12:00 மணிக்கு நடந்தது.



சதிச்செயல்கள்



கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:மாபெரும் கூட்டணி; பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு; பகட்டான வாக்குறுதிகள்.பசுத்தோல் போர்த்திய புலிகளாய் பகல் வேஷம் என்ற பரிவாரங்களுடன் வந்து, மக்களிடம் நாடகமாடி, தேர்தலை சந்தித்த தி.மு.க., மற்றும் எதிரணி, சட்டசபை தேர்தலில், மிகக் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான், வெற்றி பெற்றிருக்கிறது.

அ.தி.மு.க.,சசிகலா, இடமில்லை

சூழ்ச்சிகள், தந்திரங்கள், சதிச்செயல்கள் அனைத்தையும் முறியடித்து, மக்களின் பேரன்பை பெற்று, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி, 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.பிரதான எதிர்க்கட்சியாக, 66 எம்.எல்.ஏ.,க்கள், தமிழகத்தின் நலனுக்காக, சட்டசபையில் உரக்க குரல் எழுப்பி, உண்மை மக்கள் தொண்டர்களாகப் பணியாற்ற உள்ளனர்.உழைப்பை சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், நற்பெயரை அழிக்கும் நச்சுகளாகவும், தங்களை வளப்படுத்திய சிலர், அ.தி.மு.க.,வை அபகரித்து விடலாம் என்ற வஞ்சக வலையை, நாளும் விரிக்கின்றனர்.


அபகரிக்கும் முயற்சி



சட்டசபை தேர்தலுக்கு முன், அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்தார் சசிகலா. இப்போது கட்சி, வலுவும், பொலிவும், மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதை பார்த்து, அரசியலில் முக்கியத்துவத்தை தேடிக்கொள்ள, கட்சியை அபகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
ஒவ்வொரு நாளும், டெலிபோனில் சிலருடன் பேசுவதும், அதை ஊர் அறிய, 'டிவி'களில் ஒளிபரப்புவதும் என, வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.இரு தலைவர்களின் ஒப்பற்ற தியாகத்தால், புகழ் பெற்ற அ.தி.மு.க., மக்களின் பேரியக்கமாக, வரலாற்றில் நிலை பெறுமே தவிர, ஒரு குடும்பத்தின் அபிலாஷைக்காக, தன்னை ஒருபோதும் அழித்துக் கொள்ளாது.அ.தி.மு.க.,வின் சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், கட்சியின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது, தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மே 23ல் தெரிவிக்கப்பட்டது.


புகழுக்கும் இழுக்கு



இந்நிலையில், சசிகலா உடன் மொபைல் போனில் உரையாடி, கட்சியின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் இழுக்கு தேடியவர்கள் அனைவரையும், கட்சியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.இனி, அது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் அனைவர் மீதும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், முன்னோடிகள் அனைவரையும் வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, சசிகலாவுடன் பேசிய, அ.தி.மு.க., நிர்வாகிகள், 15 பேர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.


அவர்கள் விபரம்:



கள்ளக்குறிச்சி மாவட்டம், முன்னாள் அமைச்சர் ஆனந்தன்; ஈரோடு புறநகர் மாவட்டம், முன்னாள் எம்.பி., சின்னசாமி; வேலுார் மாவட்டம், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் வாசு; ராமநாதபுரம் மாவட்டம், சுப்பிரமணியம், வின்சென்ட் ராஜா, நடராஜன்.திருச்சி மாநகர் மாவட்ட துணை செயலர் அருள்ஜோதி; மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணை செயலர் சுஜாதா ஹர்ஷினி; திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஐ.டி., பிரிவு இணை செயலர் சிவா. கன்னியாகுமரி மேற்கு மாவட்ட ஐ.டி., பிரிவு பில்மூர் ராபர்ட்; சென்னையை சேர்ந்த ஸ்ரீதேவி பாண்டியன், ராஜேஷ்சிங், ராஜு, சதீஷ்; மதுரை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டனர்.




புகழேந்தி நீக்கம்:



அ.ம.மு.க.,வில் இருந்து அ.தி.மு.க.,வுக்கு வந்து, செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தியும், நேற்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இவர், பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி, தங்களால் தான் அ.தி.மு.க., வெற்றி பெற்றது எனக் கூறியதற்கு, பதிலடி கொடுத்தார். மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார். எனினும், அவர் சசிகலா சொல்படி, இந்த குழப்பத்தை கட்சியில் ஏற்படுத்துவதாக கூறி, அவரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர்.அதேபோல, தேனி மாவட்ட மீனவர் பிரிவு துணை செயலர் அழகர்சாமியும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


தீர்மானத்தில் முரண்பாடு!



எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சசிகலா உடன் பேசியவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், கட்சி மூத்த முன்னோடிகளை வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின்படி, நடவடிக்கை எடுக்க வேண்டிய, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தீர்மானத்தை முன்மொழிந்தது முரண்பாடாக உள்ளது.


தனித்தனி கோஷம்!





எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்த, அ.தி.மு.க., அலுவலகத்திற்கு, கட்சியினர் யாரும் வர வேண்டாம் என, கட்சி தலைமை தெரிவித்திருந்தது. எனினும் சில தொண்டர்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒரு பிரிவினர், ஓ.பி.எஸ்., வந்தபோது, அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். மற்றொரு பிரிவினர், இ.பி.எஸ்., வந்த போது, வாழ்த்து கோஷம் எழுப்பினர்.


எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பி.எஸ்.,



சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 66 இடங்களில் வெற்றி பெற்று, பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு, ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., இடையே கடும் போட்டி உருவானது. எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்ய, மே மாதம் 10ம் தேதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. அதில், இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் குரல் ஓங்கியதால், இ.பி.எஸ்., எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனால், விரக்தி அடைந்த ஓ.பி.எஸ்., வெறுப்புடன் கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.

அதன்பின், இ.பி.எஸ்., அவரை சந்தித்து சமாதானப்படுத்தினார். துணைத் தலைவர் பதவியை ஏற்கும்படி கூற, அவர் மறுத்து வந்தார். அதைத் தொடர்ந்து, துணைத் தலைவர் மற்றும் கொறடா பதவிக்கு, கடும் போட்டி ஏற்பட்டது. அப்பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய, நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது.இதில், எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பி.எஸ்., கொறடாவாக முன்னாள் அமைச்சர் வேலுமணி, துணை கொறடாவாக அரக்கோணம் எம்.எல்.ஏ., ரவி, பொருளாளராக முன்னாள் செய்தித்துறை அமைச்சர் ராஜு, செயலராக முன்னாள் அமைச்சர் அன்பழகன், துணை செயலராக எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...