முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அலிசியா தீர்ப்பு வழங்கினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி
ஜெயலலிதா முதல் முறையாக ஆட்சி அமைத்த போது 1991 முதல் 1996 வரை அ.தி.மு.க. அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இந்திரகுமாரி இருந்து வந்தார்.
அவர் ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டது. 1992- 96-ம் ஆண்டு அவரது கணவரும், வக்கீலுமான பாபு, “ மெர்சி மதர் இந்தியா” என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று தொடங்கினார். மேலும் ‘பரணி சுவாதி’ என்ற பெயரிலும் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
இவற்றின் மூலமாக காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளும் தொடங்குவதாக கூறி அரசிடமிருந்து ரூ.15 லட்சத்து 45 ஆயிரம் பெற்றனர். ஆனால் அதன்படி அவர்கள் இந்த பள்ளிகளை தொடங்கவில்லை.
இது தொடர்பாக 1997-ம் ஆண்டு சமூக நலத்துறை செயலாளராக இருந்த லட்சுமி பிரானே புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சமூக நலத்துறை அமைச்சர் இந்திரகுமாரி, சமூக நலத்துறை முன்னாள் செயலாளர் கிருபாகரன், ஊனமுற்றோர் மறுவாழ்வு துறை முன்னாள் இயக்குனர் சண்முகம், இந்திரகுமாரியின் கணவர் பாபு, இந்திர குமாரியின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோரை குற்றவாளிகளாக சேர்த்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதன் விசாரணை முடிந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி சுயலாபம் அடைந்துள்ளனர். இதன் மூலம் ரூ.15 லட்சத்து 45 ஆயிரம் அரசு பணம் மோசடி செய்யப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து அங்கு விசாரணை நடந்து வந்தது.
சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி அலிசியா வழக்கை விசாரித்து வந்தார். அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்டு விசாரணை முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி கிருபாகரன் இறந்து விட்டார். இதனால் அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது.
இன்று அந்த வழக்கு நீதிபதி அலிசியா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நடந்த விவாதங்களை தொடர்ந்து நீதிபதி அலிசியா தீர்ப்பு கூறினார்.
அதில் இந்திரகுமாரி, அவருடைய கணவர் பாபு, முன்னாள் அதிகாரி சண்முகம் ஆகியோர் குற்றவாளி என்று தீர்ப்பு கூறினார். வெங்கடகிருஷ்ணன் தரப்பு குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர் 3 பேருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டது. இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு ஆகியோருக்கு தலா 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், சண்முகத்துக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து நீதிபதி அலிசியா தீர்ப்பு கூறினார்.
மேலும் 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
தண்டனை பெற்ற இந்திர குமாரி தற்போது தி.மு.க.வில் மாநில இலக்கிய அணி செயலாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment