மனித உறவுகளில் மிக நெருக்கமானது கணவன் மனைவி உறவுதான். அதிமாக பிணக்கு வருவதும் அவர்களுக்குள் தான்.
பொதுவாக, அன்பு அதிகமிருக்கும் இடத்தில் தான் கோபம் அதிகம் வரும், சண்டை போடாத கணவன் மனைவி கிடையாது என்றெல்லாம் சொல்வார்கள்.
கணவன் மனைவி புரிதலை மூன்று வகையாகப் பிரிக்கலாமென்று தோன்றுகிறது.
எங்களுக்குள் perfect understanding இருக்கிறது, கல்யாணமாகி 30-40 வருஷங்களில் எங்களுக்குள் சண்டையே வந்தது கிடையாது என்பது முதல் வகை.
ஒரு நாளைக்கு நாலைந்து தடவையாவது எங்களுக்குள் வாக்குவாதம்/சண்டை வரும் என்று ஒப்புக் கொள்வது இரண்டாம் வகை.
நாங்கள் ஒருவருக்கொருவர் மற்றவர் விஷயத்தில் தலையிடுவது கிடையாது. அதனால் எங்களுக்குள் சண்டை, வாக்குவாதத்திற்கு இடமே இல்லை என்பது மூன்றாவது வகை.
முதலாவது ரொம்பவும் ideal couple. இருவருக்குள்ளும் பரஸ்பர அன்பு, பாசம், அன்னியோன்யம், விட்டுக் கொடுத்தல், ஒருவரை ஒருவர் காயப்படுத்தக் கூடாதென்ற உறுதி..... இதெல்லாம் இருந்தால் அந்த ஜோடி கொடுத்து வைத்தவர்கள். சிலர் அப்படியிருப்பதாகச் சொல்வதுண்டு. ஆனால் சதவீதக் கணக்கில் இவர்கள் அதிகம் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
அப்படி இருப்பவர்களுக்கு
.
வாழ்த்துக்கள்

இரண்டாவது வகையினர்தான் ஸ்வாரஸ்யமானவர்கள். இன்றைய 50+ வயது ஜோடிகள் பெரும்பாலும் இந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்பது என் கணிப்பு. காலையிலிருந்து இரவு வரை ஏதாவது விஷயத்தில் வாக்குவாதம், சின்ன சின்ன விஷயங்களில் ஆரம்பித்து பெரிதாக வளர்ந்து பரஸ்பரம் வார்த்தைகள் வெடித்து, கணவர் அங்கிருந்து அகல, மனைவி கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க/சிந்த...
அன்று இரவுக்குள்ளோ அல்லது ஒரு சில நாட்களிலோ சகஜமாகி.... மீண்டும் முதலிலிருந்து சின்ன சின்ன.... இதுவும் ஒரு தொடர்கதை தான்.
இவர்களுக்குள் புரிதல், பரஸ்பர அன்பு, விட்டுக் கொடுத்தல்.... இல்லை என்று சொல்லமுடியுமா? என்னைப் பொறுத்தவரை இந்த ஜோடிகளுக்கு ஒருவர் மீது மற்றவருக்கு அதிகப் பாசமும், அக்கறையும், புரிதலும்... இருப்பதால் தான் ஒரே நாளில் பலமுறை சண்டை போட்டுச் சமாதானமாக முடிகிறது.
ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவர் என்ன நினைப்பாரோ என்ற தயக்கமின்றிப் பேசிச் சண்டையிட்டு சமாதானம் அடைய முடிகிறது.
கணவன்/மனைவி பேசினால் சண்டை வருவது போய், ஏதாவது பேசினால் சண்டை வருமோ என்று பயந்து பல நேரங்களில் பேசாமலேயே இருந்து விடுவது அல்லது பேச வேண்டிய நேரத்தில் பேச வேண்டியதைப் பேசாமல் தவிர்ப்பது இந்தக் காலத்தில் சகஜம்.
இதைச் சொன்னால் மனைவிக்குப் பிடிக்காதே என்று கணவனும் இதைக் கேட்டால் கணவனுக்குக் கோபம் வருமே என்று மனைவியும், குடும்பத்தில் சகஜமாகப் பேச முடியாமல், அளந்து மனதில் ரிகர்சல் செய்து பேசுவது எப்போதுமே சாத்தியமா? இது சரியா?
தற்கால இளவயதுத் தம்பதிகள் மற்றவருடைய spaceல் தலையிட விரும்பாமல் ஒதுங்கி நின்று தத்தம் வேலையில் மூழ்குவது ஒரு சரியான புரிதலுடன் என்று சொல்ல முடியுமா? ஒருவருக்கொருவர் உரிமையோடு, ஈகோ இல்லாமல், பேச நினைப்பதைப் பேசுவது மணவாழ்க்கையின் அங்கமில்லையா?
தாம்பத்யம் என்பது 'வின்னர்' திரைப்படத்தில் கைப்புள்ள வடிவேலு ஒரு கோடு கிழித்து 'இந்தப் பார்டரத் தாண்டி நீயும் வரக் கூடாது, நானும் வர மாட்டேன்' என்று சொல்வது போலவா?

No comments:
Post a Comment