Monday, April 25, 2016

என்ன நடக்கிறது தி.மு.க.வில்?: டீட்டெய்ல் ஸ்டோரி


1
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் அறிவிப்பே அரசியலாகிக் கொண்டிருக்கிறது. என்னதான் தண்ணீருக்குள் புதைத்து வைத்தாலும் நீர் குமிழியாய் குமுறல் வெடிக்கத் தொடங்கிவிட்டது.சட்டமன்ற தேர்ததில் தி.மு.க. 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நல்ல விஷயம்தான். இதில் நாற்பது வேட்பாளர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள். அப்படி என்றால் அந்த நாற்பது தொகுதியிலும் கட்சியும் கரைவேட்டியுமே கற்பு என உழைத்துக் கொண்டிருந்தவன் நாதியற்றவனாகி நிற்கிறான். அதனாலேயே அந்த நாற்பது தொகுதியிலும் ஒருவித அதிர்ப்தி-கலகம்-எதிர்ப்புகுரல் என ஏற்பட்டிருக்கின்றது.
இதற்கு முன்பு இப்படி எல்லாம் தி.மு.க. வரலாற்றிலேயே நடந்தது கிடையாது. தலைவர் சொல்லிவிட்டால் அது வேதவாக்கு என இருந்தவர்கள் இப்போது எதிர்க்கத் தொடங்கிவிட்டார்கள் என்றால் ஏன்? அண்ணா காலத்தில் ஆட்சி மன்றக் குழுதான் வேட்பாளர்களை தேர்வு செய்யும். கட்சிக்காக உழைத்தவர்கள், அவர்களின் தியாகம், நேர்மை, மக்களிடம் பெயர் எடுத்தவரா? குற்ற வழக்கில் சிக்காதவரா? என்றெல்லாம் தீர விசாரித்து பரிசீலனை செய்வார்கள்.
ஆனால் இன்று அப்படியா நடக்கிறது. பகார்பரேட் நிறுவனம் வேலைக்கு ஆட்களை எடுப்பதை போல்தான் நடக்கிறது. வேட்பாளர் விருப்ப மனுவிற்கு ஆயிரம் ரூபாய் கட்டவேண்டும். அந்த படிவத்தை நிரப்பி வாய்ப்பு கேட்டால் 25 ஆயிரம் கட்ட வேண்டும். அப்படி பணம் கட்டி நேர்முகத் தேர்வுக்கு  சென்றால், அவர்கள் கட்சிக்காரர்களா என பார்ப்பதே சந்தேகம். தொகுதிக்கு ஆறுகோடி செலவு செய்யத் தயார் என்று கூறிவிட்டால் போதும். அவர் குற்றப் பின்னணி உடையவரா என்றுகூட பார்க்க மாட்டார்கள். அவர்தான் வேட்பாளர். வெளியில் வந்து எனக்குத்தான் சீட்டு என கெத்தாக சுற்றுவார். அந்த தொகுதியில் சோறு தண்ணீர் இல்லாமல், ’திமுக-விற்கு உழைப்பதே தன்மானம்’ என்றிருந்தவர் எல்லாம் தலைகுனிந்து கிடக்க வேண்டும். அண்ணா காலத்தில் மட்டுமல்ல, பிறகு கருணாநிதியின் தொடக்க காலத்திலும் இப்படியான நேர்காணல்கள் நடந்ததில்லை.
இன்றைய மாவட்ட செயலாளர்கள் எல்லாம் திமுக சாம்ராஜ்யத்தின் குறுநில மன்னர்கள்தான். அவர்கள் வைத்ததே சட்டம். அவர்கள் விரல் நீட்டுபவர்களுக்கே சீட்டு. தனக்கு வேண்டப்பட்டவர்கள் கொள்ளையடித்த பணத்தோடு வந்தால், அவர்கள்தான் ‘பணக்கார’ வேட்பாளர்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேவதாஸ் சுந்தரம், சேலம் உமாராணி, ஜலீல் என சிலருக்கு கட்சித் தலைமையே போட்டியிட வாய்ப்பு அளித்தது. அவர்கள் கட்சிக்காக என்ன தியாகம் செய்தார்கள் என்ற எதிர்ப்பு அப்போது எழுந்தது.
இந்த சட்டமன்ற தேர்தலிலும் அதே நிலைதான் நீடித்திருக்கிறது. ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் பெண் வேட்பாளர் இதற்கு முன்பு கட்சி கூட்டங்களில் பங்கேற்றவரா? போராட்டங்களில் நின்றிருக்கிறாரா? மக்களோடு மக்களாக இருந்தவரா? எனில் ஏதுமில்லை. மூத்த நிர்வாகி சர்குணபாண்டியனின் கோட்டா, அவரது மருமகளுக்கு கொடுக்கப்பட்டது. அவ்வளவே. மேடைப் பேச்சுகூட சரியாக வரவில்லை இவருக்கு.
ஐ. பெரியசாமி
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதி. அதில் ஐ.பெரியசாமிக்கு ஒரு தொகுதி. அவருடைய மகனுக்கு ஒரு தொகுதி.
அப்படியே கடலூர் மாவட்டத்திற்குள் வந்தால், எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்திற்கு ஒரு தொகுதி. அவருடைய அக்கா மகனுக்கு ஒரு தொகுதி அப்படியே விருதாசலத்தில் பன்னீரோட சொந்தக்காரருக்கு ஒரு தொகுதி என வாங்கிக்கொண்டார். மற்ற கட்சிக்காரர்களின் கருணாநிதியின் இதயத்தில் ஒதுக்கீடு. வெட்கமே இல்லாத ’ஜனநாயக கேடு’ என்கிறார்கள் அந்த தொகுதி நிர்வாகிகள்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் நந்தகுமாரை எதிர்த்து பெரிய அடிதடி சண்டையே நடந்தேறியிருக்கிறது. அந்த அடிதடியில் இருந்து முகமது சையத் தப்பி வந்ததே பெரும்பாடாகிவிட்டது. குன்னூரில் படுகர் இனத்திற்கு கொடுக்காமல் முபாரக்கிற்கு எப்படி சீட்டுக் கொடுக்கலாம் என்ற கலகம். அங்கு தேர்தல் வேலையே நடக்கவில்லை. படுகர்கள் மொத்தமாக தேங்கி நிற்கிறார்கள். சீர்காழி தொகுதியில் கனிமொழியின் விருப்பத்திற்காக ஒத்தை சீட்டு என்று கெஞ்சிக் கேட்டு வாங்கிய வேட்பாளர் கிள்ளை ரவி சந்திரனுக்கு பணி செய்ய யாரும் முன்வரவில்லை. உடுமலைப்பேட்டையில் மு. கண்ணப்பனுடைய மகன் முத்துவை வேட்பாளராக அறிவித்த உடனே உடுமலைப்பேட்டை கட்சிக்காரர்கள் கொதித்துக்போய் போராடினார்கள். இப்போதும் அந்த அதிர்ப்தி நீடிக்கிறது. ஆலங்குடியிலும் பெரும் எதிர்ப்பு போராட்டத்திற்கிடையே அறிவித்த வேட்பாளரான மெய்நாதனை திரும்ப பெற்றுக்கொண்ட பிறகும் அமைதி திரும்பாமல் கிடக்கிறது. முதலில் அறிவிக்கப்பட்ட சதிஷ் இப்போது குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டமோ கதிகலங்கி இருக்கிறது. பழைய கட்சிக்காரரான கும்மிடிப்பூண்டி வேணுவுகக சீட்டுக் கொடுக்காமல், தே.மு.தி.க.வில் இருந்து திடீரென்று ஓடிவந்தவருக்கு தாங்கித் தாங்கி சீட்டுக் கொடுத்தது பெரும் அதிர்ப்தியை உருவாக்கி இருக்கிறது. இன்றும் தீர்ந்தபாடில்லை. பெயருக்கு தேர்தல் வேலை செய்கிறார்கள். அவ்வளவே.
சோழிங்கநல்லூரில் துரைமுருகன் சிபாரிசில் அறிவிக்கப்பட்ட அரவிந்த ரமேஷ்க்கும் எதிர்ப்புகள் கூடிக்கொண்டிருக்கிறது.. வடசென்னை திரு.வி.க. நகரிலும் குழப்படிதான். அரக்கோணம் தொகுதியில் அறிவிக்கப்பட்ட பவானி மாற்றம் செய்யப்பட்டார். மயிலாடுதுறையிலும் வேட்பாளர் அறிவிப்பில் மல்லுக்கட்டு நடந்து நீடிக்கிறது. ஜோலார்பேட்டை தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட கவிதா தண்டபாணியை கட்சிக்காரர்களே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அறிவாலய சமாதானமும், பஞ்சாயத்தும் எடுபடவில்லை.
திருவெறும்பூரில் தன்னுடைய மகன் என்று குறிப்பிடும் அன்பில் மகேஷ் என்பவரை வெளியூர்காரர் என்று மறுத்து குழப்படி செய்கிறார்கள். அதிக பணநாயகம் விளையாடிநாலும் இவருக்கு வேறு ‘நேரா’ன உள்ளடி குழப்பமும் நடந்துகொண்டிருக்கிறது. விழுப்புரம் மாவட்ட வானூர், விக்கிரவாண்டி, உளுந்தூர் பேட்டை தொகுதிகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் இன்றும் அதிர்ப்தி பஞ்சாயத்து நீடித்துக் கொண்டிருக்கிறது. ஆலங்குடி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளரான ராஜ்குமார் எனக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டார். பாளையங்கோட்டையில் அறிவிக்கப்பட்ட மைதீன்கானுக்கு எதிராக கொடும்பாவி எல்லாம் எரித்து போராட்டம் செய்தார்கள்.
பல்லாவரம் தொகுதியிலும் இந்த நிலைதான். நெருக்கடியில்தான் இ.கருணாநிதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். சிறீரங்கத்தில் அறிவிக்கப்பட்ட ஆனந்தனுக்கு சீட்டு இல்லாமல் பழனியாண்டிக்கு சீட்டு கொடுக்க இன்னும் தீராத பிரச்சனையில் இருக்கிறது. விளாத்தி குளத்தில் அறிவிக்கப்பட்ட பீமராஜாவை ‘நல்ல வேட்பாளர் இல்லை’ என எதிர்க்கிறார்கள். ஆலந்தூர் தொகுதியில் எதிர்பார்த்திருந்த பாரதிக்கு கொடுக்காமல் அன்பரசுக்கு கொடுத்ததில் அதிர்ப்தி. கரூரில் சின்னசாமிக்கு சீட்டு கிடையாது .மைலம் தொகுதியில் நேற்று வந்த மாசிலாமணிக்கு சீட்டா என்று விழுப்புரம் திமுக-வினரின் கோபம் நிலைத்தபடியே இருக்கிறது.
அப்படியே கடலூர் தொதிக்கு போனால் மீண்டும் புகழேந்திதானா? என்ற குமுறல் உள்ளூரில் இருக்கிறது. ஆலங்குளத்தில் அப்பன் பெயரைச்சொல்லிக்கொண்டு சீட்டு வாங்கி, அப்படியே மந்திரியாகி, காவல்துறை உயர் அதிகாரியை தொலைபேசியில் மிரட்டி, அதனாலேயே கட்சிக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்திய பூங்கோதைக்கு தொகுதி நிர்வாகிகள் விரும்பவில்லை.
இப்படி இதுவரை இல்லாத குழப்படி குமுறளில் இருக்கும் திமுக வேட்பாளர் பட்டியலில் 93 பேர்தான் புதுமுகங்கள். இவர்களில் 50 பேருக்கும் மேல் கட்சிக்கே தொடர்பு இல்லாதவர்கள். மொத்தமுமாக பார்த்தால் 173 தொகுதிகளில் அறுபது தொகுதிகளில்தான் உண்மையான கட்சிக்காரர்கள் நிற்கிறார்கள். எனில் மீதம் உள்ளவர்கள்?
ஓரளவு மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கும் புஷ்பலதா ஆல்பன் சிட்டிங் எம்.எல்.ஏவிற்கு வாய்ப்பளிக்காமல், நிச்சயம் தோற்றுவிடுவார் என்று நன்றாக அறிந்துகொண்டே திருநெல்வேலியில் லட்டுசுமணனுக்கு சீட்டைக் கொடுத்திருக்கிறார்கள். விருதுநகர் தொகுதியில் ‘மக்களை பார்க்காத’ சீனிவாசனுக்கு சீட்டா என்ற எதிர்ப்பு. இராஜாபாளையத்தில் நிச்சயம் தோற்போம் என தெரிந்த பின்பும் அங்கே தங்கபாண்டியனுக்கு வாய்ப்பை கொடுத்ததில் அதிருப்தி.
கனிமொழியின் சிபாரிசில் சீட்டை பெற்ற உசிலம்பட்டி வேட்பாளரான இளமகிலனை அந்த பகுதி கட்சிக்காரர்கள் யார் என கேட்கிறார்கள். இவருக்கெல்லாம் எப்படி வேலை செய்ய முடியும் என்கிறார்கள்.
திருப்பரங்குன்றத்தில் மணிமாறனுக்கும், மதுரை மேற்கு தொகுதியில் கோ. தளபதிக்கும் வாய்ப்பு கொடுக்கும்போதே, ‘படுதோல்வியாகும்’ என முடிவு செய்துவிட்டார்கள். இனி தேர்தல் வேலை செய்தென்ன, செய்யாவிட்டால் என்ன என அப்பகுதி கட்சிக்காரர்கள் முடிவெடுத்துவிட்டார்கள். அதே போன்று பி.டி.ஆர்  தியாகராஜனுக்கு மத்திய தொகுதியை அறிவித்ததும் அதிருப்தி. அவர் வினியோகிக்கும் துண்டு பிரசுரத்தில் தலைவர் மற்றும் தளபதியின் படத்தையே புறக்கணித்துள்ளார் என கட்சிக்காரர்கள் புறம்தள்ளி நிற்கிறார்கள். மதுரை தெற்கு வேட்பாளரான பாலச்சந்திரனை, ’ஆமாம். அவர் யார்’? என தொகுதி வாசிகள் கேட்கும் அளவிற்கு இருக்கிறது.
சோழவந்தான் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர், ‘மாவட்ட செயலாளர் கேட்கும் பணத்தை என்னால் கொடுக்க முடியாது’ என்று கொடுத்த சீட்டையே திருப்பிக் கொடுத்துவிட்டார்.
டி.ஆர். பாலு
டி.ஆர். பாலு
இதே நிலைமைதான் தஞ்சாவூர் தொகுதியிலும். என்ன காரணத்தினால் டாக்டர் அஞ்சுகம் பூபதிக்கு சீட்டுக்கொடுத்தார்கள் என்று தொகுதிவாசிகளும், கட்சிகாரர்களும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதே போன்று மன்னார்குடியில்தான் டி.ஆர். பாலுவின் சாராயத் தொழிற்சாலை இருக்கின்றது. அங்குதான் மக்கள் கருப்பு நாள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். மிகப்பெரிய எதிர்ப்பே இந்த சாராயத் தொழிற்சாலைதான். இதனால் திமுக.வும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் அதே மன்னார்குடி தொகுதியில் டி.ஆர். பாலுவின் மகனுக்கு சீட்டு கொடுத்தால் விளங்குமா? தோல்வி கணக்கில்தான் வைக்க வேண்டும் என்கிறார்கள்.
அப்படிதான் கோயமுத்தூர் வடக்கு தொகுதியும். எந்த வித உழைப்பும் இல்லாமலே மீனா லோகு வேட்பாளர். இவருக்கு ஆ.ராசா செல்வாக்கு. இன்னும் சொல்லப்போனால் இது ஆ.ராசாவின் கோட்டாவில் கிடைத்த தொகுதி. அங்குள்ள தி.மு.க.வினர் வேலை செய்ய மறுக்கிறார்கள். 2-ஜி பணம் போனாலும் அங்குள்ளவர்களின் குணம் மாறுமா? தெரியவில்லை. செய்யூர் தொகுதியில் அறிவிக்கப்பட்ட அரசு, தாம்பரத்தில் ராஜா, தி.நகரில் எஸ்.என். கனிமொழி, வேளச்சேரியில் நடிகர் சந்திரசேகர், எழும்பூரில் ரவிச்சந்திரன், வில்லிவாக்கத்தில் ரங்கநாதன், பூந்தமல்லியில் பரந்தாமன், பொன்னேரியில் டாக்டர் பரிமளம் ஆகியோரை அந்தந்த தொகுதி கட்சி நிர்வாகிகளே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வெற்றி பெருவார்களா என்பத சந்தேகம்தான் என்கிறது மூத்த திமுக தரப்பு.
துறைமுகம் பகுதியிலேயே உள்ள காஜாவை விட்டுவிட்டு சேகர்பாபுக்கு கொடுத்திருப்பதை தொகுதி கட்சியினர் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.? ஒருவேளை இவர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் சென்றால் இவர்கள் எல்லாம் தமிழகம் எதிர்கொள்ளும ஈழத் தமிழர் பிரச்சனை, காவிரி நதிநீர் பிரச்சனை, மீத்தேன் பிரச்சனை உள்ளிட்ட பல மக்களின் சிக்கலை எல்லாம் சட்டமன்றத்தில் பேசுவார்களா என்றால் தெரியாது. அப்படி ஒரு திறமை இவர்களுக்கு. அப்படி ஒரு தேர்வைதான் திமுக இப்போது அறிவித்திருக்கிறது.
அண்ணா காலத்தில் சாதாரண கூலித் தொழிலாளி, முடித்திருத்துபவர், டீக் கடைக்காரர், என சாமானியர்களும் சட்டமன்ற தேர்தல்களில் வேட்பாளர்களாக நிற்க வைத்தார். கலைஞர்கூட அப்போது தினசரி வாழ்க்கைக்கே கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவர்தானே. இப்படியான வேட்பாளர்கள்தான் காங்கிரஸ் கட்சியில் இருந்த மன்றாடியார் போன்ற நிலச்சுவான்தார்களையும், ஜமீன்தார்களையும் தோற்கடித்தார்கள். அப்படியான திமுக கட்சிதான் இன்றைக்கு மாமன் மச்சான், மருமகன், துணைவியார், மைத்துனர், உற்றார் உறவினர் என்று வேட்பாளர்களை பங்கு போட்டுக்கொள்கிறது. எங்கே செல்கிறது திமுக என்ற கொதிப்பு மூத்த நிர்வாகிகளிடம் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.
அந்த பக்கம் ஸ்டாலின் சொல்பவர்களுக்குத்தான் சீட்டு. இந்தப்பக்கம் கனிமொழி ஆதரவாளர்களான பொன்முடி, நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, தூத்துக்குடி பெரியசாமி போன்றவர்களுக்குதான் சீட்டு என்றால் காலங்காலமாக கட்சிக்கு உழைத்துக் கொண்டிருந்த மற்றவர்கள் எல்லாம் எங்கே போவார்கள். திமுக. வை பொருத்த வரையில் சாமனியர்களுக்கு எல்லாம் சீட்டு கிடைக்காது என்பது கடந்த 15 வருடங்களாகவே உண்மையாகி வருகிறது
திட்டமிட்டே பலர் ஒதுக்கப்பட்டு விட்டார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணாவின் சகா, முன்னாள் அமைச்சர் ஏ.ஜி. கோவிந்தசாமியினுடைய மகன் ஏ.ஜி. சம்பத் பொன்முடியைவிட சீனியர். இப்போது எங்கே இருக்கின்றார் என தெரியவில்லை. அவரை ஏன் பின்னுக்கு தள்ளினார்கள் எனத் தெரியவில்லை. ஸ்டாலின் நிழலாக சுற்றிக்கொண்டிருந்த, ஜெயலலிதாவை தோற்கடித்த சுகவணம், ஸ்டாலின் பற்றாளரும், மத்திய அமைச்சருமாக இருந்த காந்தி செல்வன் போன்றோர் எல்லாம் புறக்கனிக்கப்பட்டிருப்பது ஏன், எதனால். இவர்கள் எல்லாம் விசுவாசிகள் இல்லையா. இப்படித்தானே திருச்சி செல்வராஜை ஓட ஓட விரட்டினார்கள். அதனால்தானே அவர் அ.தி.மு.க.விற்குள் போய் ஐக்கியமானார்.
தஞ்சாவூரில் சீட்டுக் கேட்ட பழனிமாணிக்கத்தின் தம்பிக்கு ஒரத்தநாட்டில் அறிவிக்கப்பட்ட நோக்கமென்ன? ஐ.பெரியசாமியின் மகனுக்கு கேட்ட தொகுதியை கொடுத்தது ஏன்? பழனிமாணிக்கத்தின் தம்பிக்கு மறுப்பது ஏன்? மாணவர் காலத்தில் இருந்தே தி.மு.க.வில் பணியாற்றி வருபவர் பழனிமாணிக்கம்.
கடலூர் மாவட்டத்தில் சீட்டுக்கேட்ட சபாபதி மோகனுக்கு மறுத்தது ஏன் என்று இன்றும் பலருக்கு புரியவில்லை. மாசிலாமணிக்கு மைலம் தொகுதியை கொடுத்திருக்கும்போது சபாபதி மோகனுக்கு கொடுத்திருக்கக்கூடாதா என்ற கேள்வியும் குமுறலும் இன்றும் அங்கே இருக்கின்றது. அது வெற்றியை பாதிக்கும். அதே போன்று மாணவர் பருவத்தில் இருந்தே திமுகவில் பணியாற்றி, முரசொலி மாறனின் நிழலாக இருந்த கள்ளக்குறிச்சி வேங்கடபதி, ராமநாதபுரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக குடும்ப சேர்ந்தவருமான பவானி. ஆர் எஸ். மங்கலம் நல்லசேதுபதிக்கும், பெநாழி கோஷு, எம்.எல்.ஏ, வாக இருந்து குமரி மாவட்டத்தில் கட்சியை வளர்த்த புஷ்பலதா ஆல்பன். மதுரையில் கட்சியை பாதுகாத்து வந்த பொன். முத்துராமலிங்கம் ஆகியோர் எல்லாம் புறக்கணிக்கப்பட்டிருப்பது வெற்றியை பாதிக்கும் என்கிறார்கள்.
ஸ்டாலின் சோதனை கட்டத்தில் இருந்த போதெல்லாம் அவருக்கு தென்மாவட்டத்தில் துணையாக இருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் தா. கிருட்டிணன். மற்றொருவர் மதுரை வேலுசாமி. தா.கிருட்டிணனுடைய கொலையையே ஸ்டாலின் சாதாரணமாக எடுத்துக்கொண்டார். அப்படி இருக்கும்போது, அவர் நிழலாக இருந்த பண்பாளர் வேலுசாமிக்கு நன்றி பாராட்டுவாரா என்ன?
அதே போன்று ஈழத் தமிழர் பிரச்சனை, நதிநீர் பிரச்சனை என்ற நீதிமன்றங்களில், ஏடுகளில் தி.மு.க.விற்கு ஆதரவாக துணை நின்று வாதாடும் கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கும் கோவில்பட்டி தொகுதியை ஒதுக்கவில்லை. கம்பம் செல்வேந்திரனுக்கு உசிலம்பட்டி தொகுதியை ஒதுக்கவில்லை. இவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை மறுத்து, கட்சியில் இருக்கும் சிலரின் தயவால் திடீர் ஆசாமிகளுக்கு சம்மபந்தம் இல்லாமல் சீட்டு ஒதுக்கிருக்கும் மர்மம் என்ன என்பது, இப்போது வெளிப்படை கேள்வியாக எழுந்திருக்கிறது.
கே.பி. ராமலிங்கம்
கே.பி. ராமலிங்கம்
கே.பி.ராமலிங்கம், டி.கே.எஸ். இளங்கோவன், திருவண்ணாமலை சிறீதர், விஜயா தாயன்பன், தங்கவேலு, மாலைராஜா, ஜெயதுரை, ஹெலன் டேவிட்சன், காயத்திரி சிறீதர் என பலருக்கும் வாய்ப்பில்லாத நிலையை உருவாக்கி, தே.மு.க.தி.க, மற்றும் ம.தி.மு.க.வில் இருந்தெல்லாம் திடீரென ஓடிவந்தவர்கள்கு சீட்டை கொடுத்திருப்பது திமுக.விற்கு பலவீனமாகவே அமைந்திருக்கிறது. இன்று அதனாலேயே அந்தந்த பகுதிகளில் எதிர்ப்புகளையும் அதிருப்திகளையும் சந்தித்துக்கொண்டிருக்கிறது தி.மு.க.
ஒரு காலத்தில் அறிவாலயம் அறிவித்தால் அந்த வேட்பாளரை மறுபேச்சு இல்லாமல் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு திரிவார்கள். ஆனால் இன்று தினமும் ஒரு எதிர்ப்பு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். எப்படி இருந்த திமுக, இப்படியாகி நிற்கிறது. இப்படியான நிலைமைகள் நீடித்தால் கலைஞர் காலத்திற்குப் பிறகு தி.மு.க. தேர்வது சிக்கல்தான். பெரியார் காலத்திற்கு பிறகு பெரியார் திடல் எப்படி மடமாகியிருக்கிறதோ, அப்படிதான் அண்ணா, கலைஞர் திடல் என்று அறிவாலயத்தை வைத்துக்கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...