தேர்தல் ஆணையர் பதவியின் அதிகாரத்தையும் தனித்தன்மையையும் உணர்த்தியவர் சேஷன்
தலைமைத் தேர்தல் ஆணையர் என்ற பதவியின் முழு வீச்சையும் உணர்த்தியவர் சுகுமார் சென். இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையர் அவர்தான். சுதந்திரத்துக்குப் பின், 1951-52-ல் நடந்த முதல் தேர்தலில், பல சவால்களை எதிர்கொண்டு சாதித்துக்காட்டியவர். 1957 தேர்தலையும் வெற்றிகரமாக நடத்தியவர். அவருக்குப் பின்னர், தேர்தல் ஆணையர் பதவியில் அமர்ந்தவர்களில் குறிப்பிடத் தக்க சாதனைகளின் மூலம் கவனம் ஈர்த்தவர் டி.என். சேஷன். தேர்தல் ஆணையர் பதவி என்பது எப்படிப்பட்ட அதிகாரமும் தனித்தன்மையும் அரசியல் சட்ட உரிமைகளும் கொண்டது என்பதை உணர்த்தியவர் அவர்.
1990 முதல் 1996 வரை தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி வகித்தார் சேஷன். வி.பி. சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவ், வாஜ்பாய், தேவ கவுடா என ஐந்து பிரதமர்களின் பதவிக்காலம் அது. அரசியல் கட்சிகளிடம் கெடுபிடிகளைக் காட்டத் தொடங்கியதன் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்டார் சேஷன்.
சட்டப்படியான மிரட்டல்!
தேர்தலை ரத்து செய்துவிடுவேன், கட்சியின் அங்கீகாரத்தைக் காணாமல் போக்கிவிடுவேன், இனி பதவியே வகிக்க முடியாதபடிக்குத் தகுதி நீக்கம் செய்துவிடுவேன் என்று அரசியல்வாதிகளிடம் அதிகாரத் தொனியில் பேசினார். பார்வைக்கு அது முரட்டுத்தனமாக தெரிந்தது. ஆனால், அதையெல்லாம் அவர் சட்டப்படிதான் செய்தார். தன் பதவியின் வரம்புகளையும் அதிகாரங்களையும் தெரிந்துகொள்ள அடி வேர் வரை அவர் பயணித்தார் என்று சொல்லலாம். தேர்தல் தில்லுமுல்லுகளின் பட்டியலைத் தொகுத்தார். அவற்றின் தோற்றம், வளர்ச்சியை ஆராய்ந்தார். தடுக்கும் வழிகளைத் தீர்மானித்துச் செயல்படுத்தினார்.
அவர் பதவிக்கு வருவதற்கு முன்னால், தேர்தல் பற்றிய அறிவிப்புகள் வாக்குப் பதிவுக்கு வெகு நாட்களுக்கு முன்னதாகவே வந்துவிடும். அரசியல் கட்சிகள் சாவகாசமாகத் தேர்தல் வேலைகளைச் செய்யும். அப்போதெல்லாம் பிரச்சாரத்துக்கு நேரமோ, வரம்போ, கட்டுப்பாடுகளோ கிடையாது. வசதி படைத்தவர்கள் எப்படி வேண்டுமானாலும் செலவுசெய்து தங்களை முன்னிறுத்திக் கொள்வார்கள். வாக்குகளைக் கவர்வதற்காக சாதி, மத, மொழி அடையாளங்களைக் கூச்சமின்றி வெளிப்படுத்துவார்கள். பண பலம், ஆள் பலம், பிரச்சார பலம் காரணமாக வெற்றி பெற்றார்கள்.
சேஷன் இவற்றில் மாறுதல்களைக் கொண்டுவந்தார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய திட்டங்களை ஆளும் கட்சியோ அரசோ அறிவிக்கக் கூடாது, புதிய வாக்குறுதிகளைப் பேரவையில் அறிவிக்கக் கூடாது, திறப்பு விழாக்களை நடத்தக் கூடாது, அதிகாரிகளின் பதவி உயர்வு, இட மாறுதல், ஊதிய உயர்வு போன்றவற்றுக்கு உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று நிர்ணயித்தார். தேர்தல் நடைபெறும் மாநிலம் முழுக்க முழுக்க மத்தியத் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட வேண்டும் என்றார்.
நேரக் கட்டுப்பாடு, முன்அனுமதி
பொது இடங்கள், சுவர்கள் போன்றவற்றில் அனுமதி இல்லாமல் எழுதவும் தட்டிகளை வைக்கவும் தடை விதிக்கப்பட்டது. சட்டப் பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல் போன்றவற்றுக்கு ஒரு வேட்பாளர் அதிகபட்சம் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அந்தச் செலவை அன்றாடம் எழுதி கணக்கு காட்ட வேண்டும் என்று விதிக்கப்பட்டது. கட்சி செய்யும் செலவு, வேட்பாளர் செய்யும் செலவு என்று தனித்தனியாகப் பிரிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் தொடங்கி பிரச்சாரம் வரையில் எத்தனை வாகனங்கள் வேட்பாளருடன் செல்ல வேண்டும் என்பதிலிருந்து கட்டுப்பாடுகள் தொடங்கின. முக்கியமாக, பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் இரவு 10 மணியோடு முடிய வேண்டும், பொதுக்கூட்டங்களுக்கு முன்னதாகவே காவல்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும், ஊர்வலம் போன்றவற்றை விருப்பப்படி நடத்தக்கூடாது என்று கூறப்பட்டது.
மதம், மொழி, இன அடிப்படையில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தால், தேர்வு பெற்றிருந்தாலும் அந்தத் தேர்வு செல்லாது என்று அறிவிக்கப்படும், வேட்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், தொடர்ந்து போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம்கூடச் செய்யப்படும் என்று கண்டிப்பாகக் கூறப்பட்டது. அரசியல் சட்டத்துக்குக் கட்டுப்பட்டே பேச வேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசு வாகனங்களையும் அரசு இயந்திரங்களையும் பயன்படுத்தக் கூடாது என்று தடுக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டு அறைகளைத் திறந்தது. தேர்தல் நடைபெறும் பகுதிகளோடு தொடர்ந்து தொடர்பு கொண்டது. ஊடகங்களில் வரும் தகவல்கள்கூட உடனுக்குடன் விசாரிக்கப்பட்டன. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேர்தல் பார்வையாளர்கள் மத்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டனர். செலவுகளைக் கண்காணிக்க மட்டும் தனிப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். அன்றாடம் செலவுக் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. சுவரொட்டி, துண்டறிக்கைகள்கூடக் கவனமாகப் படித்துப் பார்க்கப்பட்டன. வாக்காளர்களுக்குப் பணம், பொருட்கள், மதுபானங்கள் கொடுப்பது தடுக்கப்பட்டது. வழிபாட்டுத் தலங்களைத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
எந்த மாநிலத்தில் தேர்தல் நடக்கிறதோ அந்த மாநிலத்தைச் சேராத ஒருவர் பார்வையாளராக நியமிக்கப்பட்டார். இந்தப் பார்வையாளர்கள்கூட நடுநிலை தவறி நடந்துவிடாமலிருக்கக் கண்காணிக்கப் பட்டார்கள். பணப்பரிமாற்றம் போன்றவை நடைபெறா மலிருக்கப் பறக்கும் படைகளை நியமிக்கும் வழக்கம் ஏற்பட்டது. வேட்பாளர்களின் பூர்வோத்திரம் அலசி ஆராயப்பட்டது. பொய்யான தகவல்களைத் தந்தால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. வேட்பாளர்களின் கல்வி, வயது, தொழில், மீதுள்ள வழக்குகள் பற்றிய விவரங்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட வழியேற்பட்டது.
பாதுகாப்பு அதிகரிப்பு
ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிகாரிகள் முக்கியப் பொறுப்புகளிலிருந்து விலக்கப்பட்டார்கள். அங்கீகரிக்கப்பட்ட எல்லா அரசியல் கட்சிகளும் வானொலி, தொலைக்காட்சிகளில் பிரச்சாரம் செய்ய சமவாய்ப்பு தரப்பட்டது. வேட்பாளர்களின் மீதான புகார்கள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வாக்குப் பதிவு நாளன்று இயந்திரத்தில் கோளாறு, வாக்குச் சாவடியைக் கைப்பற்றுவது போன்றவை நடந்தால் அந்தச் சாவடியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, பிறகு உடனே மறுவாக்குப் பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயுதம் தாங்கிய கும்பல்கள் வன்முறையில் ஈடுபடுவதைத் தடுக்க பெரிய மாநிலங்களில் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு பிரித்து நடத்தப்பட்டது. மத்திய போலீஸ் படைகள் அதிக எண்ணிக்கையில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
தேர்தலுக்கு முன்னதாகச் சமூக விரோதிகள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். தேர்தல் நாளன்று தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பது கட்டாயமாக்கப் பட்டது. மதுபானக் கடைகள் மூடப்பட்டன. வாக்குச் சாவடிக்கு வெகு தொலைவிலேயே அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர் காலத்தில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.
தப்பிய சுவர்கள்
தொகுதிகள் மறுசீரமைப்பு, வாக்காளர் பட்டியல் திருத்தியமைப்பு போன்றவை நிகழ்ந்தன. அரசியல் கட்சிகள் அதிகம் செலவிடவும் இஷ்டப்படி பேசவும் அஞ்சி அடக்கியே வாசித்தன. பொதுத் தேர்தல்தானா இது என்று வியப்போடும், சிலர் சலிப்போடும் கேட்கிற அளவுக்குக் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் குறைந்தன.
சேஷனின் இந்த நடவடிக்கைகளால் பெரும்பாலான வீடுகளின் சுவர்கள் தப்பின. இரவு 10 மணிக்கு மேல் அலற முடியாமல் ஒலிபெருக்கிகள் ஓய்ந்தன. அவருக்குப் பின்னர் பதவியேற்ற எம்.எஸ். கில்லும் இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். அதேசமயம், சேஷன் காலத்துக்குப் பின்னர், தேர்தல் நடைமுறைகள் ஊழலுக்கும் முறைகேட்டுக்கும் இடமில்லாமல் முழுக்க முழுக்க நடந்துவிடுகிறது என்று சொல்லிவிட முடியாது. எனினும், சட்டத்தின் உறங்கிக்கிடந்த பிரிவுகளைத் தட்டி எழுப்பிச் செயல்படுத்தியதும், அரசியல் கட்சிகளின் செல்வாக்குக்குப் பணியாமலும் தேர்தலை நடத்த முடியும் என்று நிரூபித்துக்காட்டியதும் அவரது முக்கியமான சாதனைகள்.