Tuesday, April 12, 2016

நீங்கள் உங்கள் கல்லீரலை(LIVER) எவ்வளவு நேசிக்கிறீர்கள்?

நட்பென்றால் நாம் என்போம்
நீங்கள் உங்கள் கல்லீரலை(LIVER) எவ்வளவு நேசிக்கிறீர்கள்? என்றொரு கேள்வி எழுப்பப்பட்டால் அதற்கு நாம் அளிக்கும் பதில் என்னவாக இருக்கும்?

கல்லீரலை நேசிக்க வேண்டுமா? எதற்காக? முழுமையாக அறியாத ஒன்றை எவ்வாறு நேசிக்க இயலும்? என்பது போன்ற பதிலே பெரும்பாலும் பெறப்படும்.

ஒரு நபர் ஒன்றை நேசிக்க வேண்டும் எனில் அதனால் ஏதாவது உபயோகம் அவருக்கு இருக்க வேண்டும் அல்லது அதனால் இவர் நேசிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலே மனப்பூர்வமான நேசம் அதன் மீது அவருக்கு வைக்க இயலும். அந்த வகையில் நோக்கினால் ஒரு மனிதனைப் பொறுத்தவரை அவன் அவனது கல்லீரலை வாழ்நாள் முழுவதும் மிகுந்த அக்கறையுடன் நேசிக்க வேண்டும். எதற்காகக் கல்லீரலை நேசிக்க வேண்டும்?. இதற்கான பதிலைக் கல்லீரலே நம்மிடம் பட்டியல் இட்டால்…? இதோ கல்லீரல் பேசுகிறது:

ஹலோ, நான் தான் உங்கள் கல்லீரல்…. நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை ஒன்பது விதத்தில் விவரிக்கப்போகிறேன். கவனமாகக் கேளுங்கள். அதன் பின் நீங்களும் என்னை நேசிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யுங்கள்.

1) நான் உங்களுக்குத் தேவையான இரும்பு சத்துக்களையும் இதர வைட்டமின்களையும் சேமித்து வைக்கிறேன். நானின்றி நீங்கள் தொடர்ந்து செயல்படக்கூடிய சக்தியை பெற மாட்டீர்கள். மனிதன் ஆரோக்கியமாக வாழத்தேவையான சக்திகள் இரும்பு சத்துக்களிலும் வைட்டமின்களிலும் நிறைந்துக் காணப்படுகின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே?. எனவே நானின்றி நீங்கள் தொடர்ந்து செயல்படக்கூடிய சக்தியைப் பெற மாட்டீர்கள்.

2) நீங்கள் உட்கொள்ளும் உணவை ஜீரணிக்கச் செய்யும் பித்தநீரை (Bile) நானே உற்பத்தி செய்கிறேன். இது இல்லையேல் நீங்கள் உட்கொள்ளும் உணவு ஜீரணிக்காமல் (அதிலிருந்து சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல்) வீணாகிவிடும். இப்பொழுது நான் இல்லையெனில் உங்கள் நிலைமையை யோசித்துப் பாருங்கள். உணவு சாப்பிட இயலாமல், வாழ்நாள் முழுவதும் குளுக்கோஸை உடலினுள் செலுத்திக் கொண்டு வாழ்வதை எந்த மனிதனாவது விரும்புவானா?

3) நீங்கள் உட்கொள்ளும் உணவிலுள்ள விஷத்தன்மை கொண்ட ஆல்கஹால் போன்ற இதர தீமையான இரசாயன திரவங்களின் அமிலங்களை நானே சுத்தப்படுத்துகின்றேன். இது போன்ற ஆபத்தான விஷ அமிலங்கள் சில நேரம் மது போன்ற போதைப் பொருட்கள் மூலமும் அல்லது சாதாரண மருந்துகள் அதிக அளவில் உபயோகிப்பதன் மூலமும் உடலில் தேங்குகின்றன. நான் இவற்றை முறையாக அகற்றவில்லையெனில் இவற்றால் உங்கள் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

4) நான் உங்கள் உடல் இயங்கத் தேவையான சக்திகளை (சர்க்கரை – Sugar குளுகோஸ், கார்போஹைட்ரேட் – Carbohydrates, கொழுப்பு சத்து – Fat போன்றவைகளை..) ஒரு மின்கலன் (Battery) போல் உங்கள் தேவைக்கேற்ப சேமித்து வைக்கிறேன். நான் இவ்வாறு செய்யாவிடில் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்து அளவில் குறைந்து அதனால் நினைவிழந்து கோமா (Coma) வரை கூட செல்ல நேரிடும் என்பதை நீங்கள் நினைவில் நிறுத்த வேண்டும். நான் என் பணியை முறையாகச் செய்திருக்காவிட்டால் ஒருவேளை இன்று நீங்கள் உங்கள் படுக்கையிலிருந்தே எழுந்திருக்க இயலாது.

5) நீங்கள் பிறக்கும் முன்பே உங்கள் முறையான இயக்கத்திற்குத் தேவையான இரத்தத்தை நானே உருவாக்குகிறேன். நானில்லையேல் நீங்கள் இவ்வுலகில் உயிருடன் இருந்திருக்கவே மாட்டீர்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

6) உங்கள் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புதிய புரோட்டீன்களை (Proteins-புரதச் சத்துகள்) நானே தயாரிக்கின்றேன். நானின்றி உங்கள் உடல் வளர்ச்சி பெற்றிருக்க முடியாது.

7) நான் நீங்கள் சுவாசிக்கும் காற்றிலிருந்து வெளியேற்றப்படும் புகைகள் போன்ற நச்சுப்பொருட்களையும் அகற்றுகின்றேன். நானில்லையேல், இது போன்ற கலப்பான தூய்மையற்ற காற்றின் விஷத் தன்மையினாலேயே உங்களுக்கு கேடு ஏற்பட்டிருக்கும்.

8) நான் இரத்த உறைவுக் காரணிகளை (Clotting Factors) உருவாக்குகின்றேன். இதன் மூலமே உங்களுக்கு ஏதும் காயம் ஏற்படும் போது அந்த இடத்தில் இரத்தம் உறைந்து ஒரு தடுப்பை அது ஏற்படுத்தி தொடர்ந்து இரத்தம் வெளியேறாமல் நின்று விடுகிறது. உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டு தொடர்ந்து இரத்தம் நிற்காமல் ஓடினால் அதனால் நீங்கள் மரணித்து விடுவீர்கள் என்பதை நான் தனியாகக் கூற வேண்டிய அவசியமில்லை தானே?

9) நான் உங்களைத் தாக்கும் ஃப்ளூ என்ற ஜலதோஷம் ஏற்படுத்தும் நோய்க் கிருமிகளைத் தாக்கி அழிக்க அல்லது அதனை வலுவிழக்கச் செய்கிறேன். இவ்வாறு நான் செய்யாமல் இருந்தால் மனிதர்கள் அறிந்த மற்றும் அறியாத அனைத்து அற்பக் கிருமிகளின் தாக்குதலும் உங்களை நோயாளியாக்கி முடக்கி வைத்து இருக்கும்.

இதுவெல்லாம் நான் உங்கள் மீதுள்ள நேசத்தினால் செய்கின்றேன். ஆனால், நீங்கள் என்னை அதே போல் நேசிக்கின்றீர்களா? நான் உங்களை நேசிக்காமல் இருந்து விட்டால் எத்தனை பாரிய ஆபத்திற்கு நீங்கள் உள்ளாவீர்களோ அதே அளவிற்கான ஆபத்தை நீங்கள் என்னை நேசிக்காமல் இருப்பதனாலும் அடைவதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளும் உள்ளன. என்னை நீங்களும் நேசிக்க வேண்டும் என்றதும், வெறுமனே எப்பொழுதாவது என்னை மனதில் நினைத்துக் கொண்டு “நானும் என் கல்லீரலை நேசிக்கிறேன்” என்று கூறினால் என்னை நேசித்து விட்டதாக ஆக முடியாது. உங்களை நேசிக்கும் முகமாக எந்நேரமும் மேலே பட்டியலிட்டது போன்ற முக்கியமான சில வேலைகளை நான் செய்வது போன்று நீங்களும் சில காரியங்களைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தான் நீங்களும் என்னை நேசிக்கின்றீர்கள் என்று பொருள். இல்லையேல் அது உங்களுக்குத் தான் ஆபத்தாக முடியும். என்னை நீங்கள் நேசிக்கும் விதமாக நடக்க சில எளிமையான வழிகளை உங்களுக்கு நான் கற்றுத் தருகிறேன். கவனமாகக் கேளுங்கள் :

1) ஆபத்தில்லை எனக் கருதிக்கொண்டு பீர் (Beer) போன்ற ஆல்கஹால் கலந்த மது பானங்களில் என்னை மூழ்கடிக்காதீர்கள். சில நேரங்களில் ஒரே ஒரு முறை சிறிதளவு இவற்றை அருந்துவதும் கூட உங்களுக்கு அபாயமானதாக முடியும்.

2) எல்லா அலோபதி மருந்துகளும் வேதி (chemicals) அமிலங்கள் கலந்தனவையே. ஆகையால் மருத்துவர் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளாதீர்கள். நீங்களாவே எந்த ஆலோசனையுமின்றிக் கலந்து உட்கொள்ளும் சில மருந்துகள் கலவையினால், ஏதேனும் தீய நச்சுத்தன்மை உருவாகி, அது என்னை பாதிக்கச் செய்து விடலாம்.

3) நான் மிகவும் எளிதாக காயம் ஏற்படுத்தப் படுகிறேன். இந்த காயத்தின் வடுக்கள் (Cirhossis) நிரந்தரமானவை. மருந்துகள் சில நேரங்களில் தவிர்க்கமுடியாதவையே. ஆயினும் பல நேரங்களில் அது தேவையற்றவை என்பதை கவனத்தில் கொண்டு மருந்துக்களை உபயோகிக்க வேண்டும்.

4) ஏரோசால் (Aerosol) போன்ற நச்சுத்தன்மை கலந்த தூவி (Spray)களை உபயோகித்து நீங்கள் சுத்தப்படுத்தும் போது அதைச் சுவாசிக்கவும் செய்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொண்டு வீட்டை எப்பொழுதும் போதிய காற்றோடமுடையதாக வையுங்கள், அல்லது முகத்தில் திரை (mask) அணிவது அவசியம். இதே போல் மூட்டைப் பூச்சிக் கொல்லி மருந்துகள், பெயின்ட் போன்ற ஏனைய இரசாயன ஸ்ப்ரேக்களையும் உபயோகிக்கும் போது அவற்றை சுவாசிக்காமல் இருக்க கவனம் செலுத்துங்கள்.

5) தாவரங்களுக்கு உபயோகிக்கப் படும் இதர பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகிக்கும் போதும் கையுறை மற்றும் காலுறைகள் அணிந்திருப்பது அவசியம். ஏனெனில், இவை தோல்கள் மூலமும் உடலில் நுழைந்துப் பலச் செல்களை(உயிரணுக்களை)யும் தாக்கி அழித்து விடுகின்றன. அதே போன்று இவை அனைத்தும் காற்றில் கலந்துவிடும் விஷம் கலந்த இரசாயனப்பொருட்கள் என்பதை நினைவில் நிறுத்தி இவற்றை உபயோகிக்கும் போது முகம், தலை போன்ற ஏனைய பாகங்களையும் மாஸ்க், தொப்பிகள் போன்றவை அணிந்து மறைத்திருப்பது நினைவில் வைக்கப் படவேண்டிய ஒன்றாகும்.

6) அதிக அளவில் அதிகமான கொழுப்புச் சத்து கலந்த உணவுகளை உட்கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான கொலெஸ்ட்ரோலைச் சரியான அளவில் நான் உருவாக்கிக் கொள்கிறேன். இதனைக் குறித்து விரிவாக சத்தியமார்க்கம்.காம் தளத்தினர் வெளியிட்டுள்ளகொல்லுமோ கொலெஸ்ட்ரோல் என்றப் பதிவினைக் கவனமாகப் படித்துப் பாருங்கள். எனக்குச் சிறிது ஓய்வு கொடுங்கள். சரியான அளவில் சத்தான உணவுகளை மட்டும் உட்கொள்ளுங்கள். நீங்கள் சரியான அளவில் உணவை உட்கொண்டீர்களானால் மட்டுமே நானும் சரியாக உங்களுக்குச் சேவை செய்ய இயலும்.

முதலாகவும் இறுதியாகவும் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை… : சாதாரணமாக நான் எனது கஷ்டங்களை உங்களுக்கு எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. அவ்வாறு சொல்லவும் மாட்டேன். எனக்கு ஏதாவது பிரச்சனை எனில், என்னால் இயன்றவரை அதைத் தாங்கிக் கொள்வேன். இவ்வாறு இருப்பதால் நீங்கள் நான் ஆரோக்கியமாகத் தான் இருப்பதாக நினைத்துக் கொள்வீர்கள். ஆனால் அது எனது மற்றும் உங்களது இறுதி நேரமாகவும் ஆகிவிடும் வாய்ப்புகள் உண்டு. நினைவில் வைக்கவும் : நான் ஒருபோதும் குறைப்பட்டுக் கொள்வதில்லை. அதனாலேயே நான் திருப்தியாளனாக உள்ளேன் எனத் தவறாக எடை போடாதீர்கள். என்னை அதிகமாக இரசாயன திரவங்கள் மூலமும் அமிலங்கள் மூலமும் பாதிக்கச் செய்தால் நான் செயலாற்ற இயலாதவாறு பாதிப்புக்குள்ளாவேன். அதனை நான் உங்களுக்கு உடனே தெரிவிக்காமல் இருப்பதனால் அதன் மூலம் உங்கள் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து விளையலாம். இதுவே நீங்கள் பெறும் எனது ஒரே எச்சரிக்கை அறிவிப்பாகவும் இருக்கலாம். எனவே இத்தகைய சூழலிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள எனது கீழ்கண்ட ஆலோசனையைச் செவிமடுங்கள் :

1. மருத்துவ ஆலோசகரிடம் என்னை முறையாக குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

2. விசேஷ இரத்தப் பரிசோதனைகள் (blood screen test) மூலம் எனது ஆரோக்கிய நிலையை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.

3. நான் எப்பொழுதும் மிருதுவாக மென்மையாக இருப்பின் அது நல்லது. கடினமாகவோ அல்லது வீக்கமாக இருப்பது ஏதோ கோளாறு அல்லது அபாயம் என்னில் நிகழ்ந்துள்ளது என்பதன் அறிகுறியாக இருக்கலாம்.

4. உங்கள் மருத்துவர் ஏதேனும் இது போன்று சந்தேகத்தைப் பரிசோதனையின் போது உணர்ந்தால் மீயொலி (Ultrasound) அல்லது கணினி உடற்கூறாய்வு (CT Scan) எனும் இதர பரிசோதனை மூலம் மேலதிக உதவி பெறலாம்.

5. உங்கள் உயிர் நீங்கள் என்னை நடத்தும் விதத்தில் தான் நிலைத்து இருக்கிறது.

அன்பர்களே.. இப்பொழுது உங்கள் மீதான நேசத்தில் நான் உங்களுக்குச் செய்யும் உதவிகளின் முக்கியத்துவத்தினைக் குறித்து உணர்ந்திருப்பீர்கள். தயவு செய்து நீங்களும் என்னை நல்ல முறையில் நேசத்துடனும் அக்கறையோடு பேணி நடத்துங்கள்.

உங்கள் வாழ்க்கை எனது ஆரோக்கியத்தில் தான் உள்ளது. இப்படிக்கு, உங்களை நேசிக்கும் உங்கள் கல்லீரல்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...