Wednesday, April 27, 2016

தமிழர்களின் வெற்றித் திருவிழா...

ஜல்லிக்கட்டு அனுமதி குறித்து நடிகர் சூரி அறிக்கை!
தமிழகத்தின் ஒருமித்த போராட்டத்தால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. இதனைப் பாராட்டி நடிகரும் மாடுபிடி வீரருமான சூரி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் சூரி கூறியிருப்பதாவது:
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த வருடமும் நடக்காமல் போய்விடுமோ எனப் பரிதவித்தவர்களில் நானும் ஒருவன். ஒரு மாடுபிடி வீரனாகவும், பலநூறு மாடுகளை எங்கள் வீட்டில் வளர்த்தவனாகவும் ஜல்லிக்கட்டு விளையாட்டின் மீது நான் கொண்டிருந்த நேசம் அளவிட முடியாதது. ஆனால், காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளைகளைச் சேர்த்ததால் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த முடியாமல் போனது என்னைப் போன்றவர்களுக்கு தாங்கொணா வேதனையை உண்டாக்கியது. தமிழ் மக்களின் வீர விளையாட்டு இந்த வருடமும் நடக்காமல் போனால், நமது பாரம்பரியப் பெருமையும் சிறப்பும் மீட்க முடியாத அளவுக்குப் போய்விடுமே என தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் வேதனையின் விளிம்பில் இருந்தனர். இந்த நிலையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் போராட்டத்தாலும் தமிழ் மக்களின் இடைவிடாத கோரிக்கையாளும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்திருப்பது அளவிட முடியாத மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. மனதுக்குள் பெருக்கெடுத்து ஓடும் மகிழ்ச்சியைச் சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை.
பொங்கல் பண்டிகையின் சிறப்பே மாடுபிடிக்கும் விளையாட்டுதான். வீரமும் விளையாட்டும் கலந்துகட்டும் களமாக ஜல்லிக்கட்டு மைதானம் இருக்கும். இன்றைக்கும் மதுரை வட்டாரத்தில் பிரசித்தியாக இருக்கும் காளைகளில் முக்கியமானது எங்கள் ஊரான ராஜாக்கூர் காளை. மாடுபிடி விளையாட்டில் காளைகளை அடக்கி எப்படி வீரத்தைக் காட்டுகிறோமோ அதைப்போல் காளைகளிடம் பாசத்தைக் காட்டவும் தமிழ் மக்கள் தவறவில்லை. மாடுகளை குளிப்பாட்டி, புது மூக்கனாங்கயிறு, லாடம், மாலை, கயிறு என அலங்கரித்து காளைகளுக்கு பொங்கல் சோறு ஊட்டிக் கொண்டாடுவது தமிழ் மக்களின் வழக்கம். ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளைத் தயார் செய்யும்போதும் உணவு மற்றும் பயிற்சிகள் மூலமாக முழு உடல்தகுதியோடு காளைகளைக் கொண்டு வருகிறோம். வெளிநாட்டில் சிகப்பு துணியைக் கையில் வைத்துக்கொண்டு காளையை சுவற்றில் மோத விட்டே கொல்வதுபோல் நாம் ஜல்லிக்கட்டு நடத்துவது இல்லை. திமிலோடு நிற்கும் காளைக்கு நேராக நாம் திமிரோடு நின்று அடக்க முயல்கிறோம். இது தமிழர்களின் வம்சாவழி வீரம். எந்தக் கொம்பனாக‌ இருந்தாலும் நெஞ்சுக்கு நேராக‌ எதிர்க்கிறவன் தமிழன். அதற்கான அடையாளம்தான் ஜல்லிக்கட்டு என்கிற வீர விளையாட்டு. உலகத்திலேயே ஒரு விலங்குக்கு நேருக்கு நேராக நின்று போட்டிக்குத் தொடை தட்டும் இனம் நம் தமிழர்கள் இனம்தான். மொத்தத்தில் தமிழர்களின் வாழ்க்கையில் மனிதர்கள் தனி மாடுகள் தனி எனப் பிரிக்க முடியாது. இத்தகைய அன்புக்கும் வீரத்துக்கும் அடையாளமான ஜல்லிக்கட்டு நிகழ்வு இந்தவருடம் நடக்க இருப்பது ஒவ்வொரு தமிழர்களுக்குமான வெற்றித் திருவிழா. நமக்குக் கிடைத்திருக்கும் அனுமதியைச் சரியான முறையில் பயன்படுத்தி ஜல்லிக்கட்டை வெகுவிமர்சையாகக் கொண்டாட ஒவ்வொரு தமிழர்களும் உறுதி எடுப்போம். பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மிகக் கவனமாகச் செய்துகொண்டு யாருக்கும் பாதிப்பு ஏற்படாதபடி தமிழர்களின் வீரவிளையாட்டை அரங்கேற்றிக் காட்டுவோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் சூரி தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...