Saturday, April 30, 2016

தள்ளுபடி : (சிறுகதை)




ருக்குமணியின் ஒப்பாரி சத்தம் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. ஏனோ வீட்டிற்குள் இருக்கவே பிடிக்கவில்லை வெள்ளைச்சாமிக்கு.
மழையை நம்பி, விதைப்பாட்டிற்காக தன் மனைவி ருக்குமணியியிடமிருந்த ஓரே நகை, அந்த அஞ்சு பவுன் சங்கிலியை கூட்டுறது வங்கியில் அடகு வைத்து கடன் பெற்றது.
அடகு வைத்து, நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. முதல் இரண்டு வருடம் வட்டிப் பணம் மட்டும் செலுத்தி நகை காப்பாற்றப்பட்டது.
இந்த ரெண்டு வருசத்தில், விவசாயத்தில பெருசா ஒன்னும் இல்லை. ஏதோ உசிரை காப்பாத்தி வைச்சிருக்குது, அவ்வளவுதான்.
இப்போது, அடகு வைச்ச நகை ஏலத்திற்கே வந்து விட்டது. ஏல அறிவிப்பு கடிதத்தை, தபால்காரர், போன வாரம்தான் கொடுத்துட்டு போனார்.
எப்படியாவது திருப்பிடனும்கிற தவிப்பு, வெள்ளச்சாமியிடம் தெரிந்தது.
தனக்காக இல்லாட்டியும் ருக்குமணிக்காகவாவது செஞ்சாகனும்.
பொறந்த வீட்ல போட்ட ஒத்த நகை,
அதுவும் ஏலத்துல போயிருச்சுன்னா, பொறந்த வீட்டு சாதி சனத்தோட மூஞ்சில எப்படி முழிக்கறதுன்னு சொல்லி சொல்லி பொலம்பித் தீர்த்த்து விட்டாள்.
கணவனை பார்த்து தீர்மானமாக சொன்னாள் ருக்குமணி 'இந்தா பாருங்க ஒன்னு நகைய மீட்டிட்டு வீட்டுக்குள்ள வாங்க...., இல்லாட்டி என்னைய உசிரோட
பாக்க முடியாது பாத்துக்கங்க'
'ருக்குமணி கேட்பதிலும் நியாயம் இருக்கு, ஆனால் கையாலாகாத நிலைமைல தானே, நான் இருக்கேன்' என்று மனசுக்குள் பேசிக் கொண்டான் வெள்ளச்சாமி.
ஏலம் வேண்டாம், எப்படியும் ரெண்டு மாசத்துல திருப்பிடரேன்னு சொல்லி, வங்கி மேலாளரிடம் மன்றாடிப் பார்த்தான். ஆனால் அவர் அசைந்து கொடுப்பதாக இல்லை.
ஏல அறிவிப்பு கடிதத்தை கையில் வைத்துக் கொண்டு சொந்தம் பந்தம், தெரிந்தவர் தெரியாதவர் என்று எல்லோரிடமும் கேட்டுப் பார்த்தாச்சு.
ஆறுதல் சொல்ல ஆளிருந்ததே தவிர உதவி செஞ்சு, அரவணைக்க ஒருவருமில்லை.
நகையில்லாமல் ருக்குமணியின் மூஞ்சியில் எப்படி விழிப்பது? ஒரு முடிவுக்கு வந்தவனாக, நேரே வயலுக்குச் சென்றான் வெள்ளைச்சாமி.
நெல்லு நாத்துக்கு அடித்தது போக மீதமிருந்த பூச்சிக் கொல்லி மருந்தை எடுத்து, கடகடவென்று குடித்துவிட்டு, நெற்பயிர்களை ஒரு ஏக்கப் பார்வை பார்த்தபடியே உட்கார்ந்து விட்டான்.
சிறிது நேரத்திற்கெல்லாம், வயிற்றுக்குள்
எழுந்த சிறு உறுத்தல், தாங்க முடியாத வலியாக மாறியது,
வலியால் துடித்த உடம்பு தூக்கி தூக்கி போட்டது. நினைவு மெல்ல மெல்ல தவற, வாய் கோணி நுரை தள்ளியது.
கை கால்கள் இழுத்துக் கொண்டிருக்கவே, சன்னமாக பிரிந்தது கடைசி மூச்சு.
கண்கள் பாதி மூடியும், பாதி திறந்தும் வானத்தை நோக்கி ஏதோ நியாயம் கேட்பதைப் போல் வெறித்திருந்தது.
அடுத்த நாள் செய்தித்தாளில், கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை என்ற செய்தி, ஒரு பெட்டி செய்தியாக ஆறாவது பக்கத்தில் பிரசுரமானது.
அதே பத்திரிக்கையின் முதல் பக்கத்தில், ஒரு பெரிய நிறுவனத்திற்கு வழங்கிய பல ஆயிரம் கோடி கடனை, தள்ளுபடி செய்வதாக..., ஒரு தேசிய வங்கி அறிவித்திருந்தது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...