Wednesday, June 1, 2016

‎சொத்துக்குவிப்பு‬ மேல்முறையீட்டு வழக்கில் இன்றைய வாதங்கள் !

ஆச்சார்யா - அளவுக்கு அதிகமாக சொத்து குவித்துவிட்டு இப்போது அதை நால்வரும் மறைக்க பார்க்கின்றனர். சசிகலாவிடமிருந்து பல்வேறு வழிகளில் ஜெயலலிதா பணம் பெற்றுள்ளார். அதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அவைகளை கடனாக காண்பித்துள்ளார். இதை கீழமை நீதிமன்றம் கவனித்தது. ஆனால் உயர்நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டது.
-
நீதிபதிகள் குறுக்கீடு - தன்னுடனேயே வீட்டில் இருப்பவர்களிடம் கடன் பெற முடியாதா ? அது இயலாத ஒன்றா ? உதாரனமாக ஒரே வீட்டில் தந்தையும், மகனும் வசிக்கின்றனர். தொழில் துவங்க, இதர தேவைகளுக்காக மகன் தன் தந்தையிடம் கடனாக பணம் தாருங்கள், திருப்பி தந்துவிடுகிறேன் என்று கூறி பெறுவதில்லையா ? அதுவும் கடன் தானே ?
-
ஆச்சார்யா - அதை எப்படி கடனாக ஏற்றுக்கொள்ள முடியும். தந்தை மகனுக்கு செய்யும் செலவு என்று தான் அதை ஏற்றுக்கொள்ள இயலும்.
-
நீதிபதி பினாகி சந்திரகோஷ் - அப்படி ஏற்றுக்கொள்ள இயலாது. இப்போது நான் என் சக நீதிபதியான அமிதவ் ராயிடம் பணம் பெற்றால் அது கடன் தான்.
-
நீதிபதி அமிதவ் ராய் - தங்களுக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை.
-
நீதிபதி பினாகி சந்திரகோஷ் - பரவாயில்லை, நான் ஆச்சார்யாவிடமே பெற்றுக்கொள்கிறேன்.
-
வழக்கறிஞர்கள் சிரித்தனர்....
-
நீதிபதிகள் - இந்த வழக்கு அளவுக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டது பற்றியது இல்லை. தவறான வழியில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டது பற்றியது. அதாவது அரசாங்க பணத்தையோ அல்லது மக்கள் பணத்தையோ வைத்து சொத்து சேர்க்கப்பட்டதாக குற்றம் சமத்தப்பட்டுள்ளது பற்றியது. ஒருவர் சொத்து சேர்ப்பதில் தவறு இல்லை. அதுவும் ஆரம்ப காலம் முதல் வருமான வரி கட்டும் நபரான ஜெயலலிதா சொத்து சேர்த்து வைத்திருப்பது தவறு இல்லை. ஆனால் அவர் தவறான வழியில் அளவுக்கு அதிகமாக சேர்த்து வைத்திருந்தால் மட்டுமே அது தவறு. அரசாங்கத்திற்கு தெரியாமல், அரசாங்கத்தை ஏமாற்றி சேர்த்துள்ளாரா ?
-
ஆச்சார்யா - நிச்சயமாக அப்படித்தான் சேர்த்துள்ளார். பொய்யாக கணக்குகளை காண்பித்துள்ளார். அவர் காட்டிய பொய் கணக்குகளால் தான் அவர் வெளியே வந்துள்ளார்.
-
நீதிபதிகள் - அவர் அரசாங்கத்தை ஏமாற்றி, அரசாங்கத்திற்கு தெரியாமல் சேர்த்த சொத்துக்களின் கணக்குகள் எங்கே ?
-
ஆச்சார்யா - அனைத்திற்கும் கீழமை நீதிமன்ற ஆவனங்களுடன் இணைத்து ஆதரங்கள் உள்ளன.
-
நீதிபதிகள் - ஆதாரங்கள் இருக்கின்றது என்கிறீர்கள். ஆனால் இதில் அவர் அரசாங்கத்தை ஏமாற்றி தான் சொத்து சேர்த்தார் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் இல்லையே ?-
ஆச்சார்யா - நிறைய ஆதாரங்கள் உள்ளன. அவைகளை ஏற்கனவே நாங்கள் சமர்பித்துவிட்டோம்.
-
நீதிபதிகள் - சரி உங்கள் வாதங்களை முடிக்கிறீர்களா ?
-
ஆச்சார்யா - இந்த வழக்கு நாடே எதிர்பார்க்கும் ஒரு வழக்கு. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டேன். என் வாழ்நாளில் நான் வாதாடிய வழக்குகளில் இந்த வழக்கில் தான் எனக்கு கடுமையான சோதனைகள் இருந்தன. எனது 49 ஆண்டு கால வழக்கறிஞர் பணியில் இந்த நொடிப்பொழுது இங்கு (உச்சநீதிமன்றத்தில்) வாதாடுவதை தான் சிறந்த நொடிப்பொழுதாக கருதுகிறேன். இந்த வழக்கை பொருத்தவரை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சர்காரை ஏமாற்றி பல்வேறு முறைகேடுகள் செய்து சொத்து சேர்த்துள்ளனர். இதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளும் என்று நம்பி, உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டு என் வாதங்களை முடித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...