இதெல்லாம் தெரியாம இத்தனை நாள் விமானத்தில் பயணம் செய்துருக்கிறோமே.! விமானம் பயணம் - நீங்கள் அறிந்திராத தகவல்கள்.!
விமானப் பயணம் என்பது பலருக்கும் சுவாரஸ்யமானதாகவும் சொகுசானதாகவும் கருதப்படுகிறது. இந்தநிலையில் விமானப் பயணங்களில் நடக்கும் சில சுவாரஸ்யங்கள் மற்றும் ரகசியம் காக்கப்படும் விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் போட்டு உடைக்கப் போகிறோம்.
விமான பைலட்டுகள் மற்றும் பணியாளர்களுக்கு தெரிந்த சில தகவல்கள் காற்று வாக்கில் கசிந்த சில தகவல்களும் இந்த செய்தித் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
தூக்கம் போடும் பைலட்டுகள்
விமானங்களை நீண்ட தூரம் இயக்கும்போது பைலட்டுகள் தூக்கம் போடுவது சர்வசாதாரணமாம். ஆனால், அவர்கள் நிம்மதியாக தூங்குவதில்லையாம். அவ்வப்போது எழுந்து மற்றொரு விமான பைலட் தூங்கிவிட்டாரா என்ற பதைபதைப்பில் குட்டித் தூக்கம் போடுகின்றனராம்.
ஆக்சிஜன் மாஸ்க்
சில வேளைகளில் விமானங்கள் அதி உயரத்தில் பறக்கும்போது பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்காக இருக்கையின் மேல்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆக்சிஜன் மாஸ்க்குகளை பயன்படுத்த பயணிகள் அறிவுறுத்தப்படுவர். ஆனால் அந்த ஆக்சிஜன் மாஸ்க்குகள் மூலமாக 15 நிமிடங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் கிடைக்கும்.
அதற்குள் குறைவான உயரத்திற்கு விமானத்தை பைலட் கொண்டு வந்துவிடுவார் என்பதால் அதுவே போதுமானதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஆக்சிஜன் மாஸ்க்குகளை போடும்போது முதலில் பெரியவர்களும் பின்னர் சிறியவர்களுக்கும் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், குழந்தைகளுக்கு பாதிப்பு குறைவாக இருக்குமாம்.
குறைவான வெளிச்சம்..
விமானங்களை தரை இறக்கும்போது பயணிகளின் அமர்ந்திருக்கும் பகுதியில் விளக்குகளின் பிரகாசத்தை பைலட்டுகள் குறைத்துவிடுவது வழக்கம். ஒருவேளை தரை இறக்கும்போது விமானம் விபத்தை சந்திக்க நேர்ந்தால் திடீரென இருள் சூழ்ந்துவிடும் வாய்ப்புண்டு. அப்போது பயணிகளின் கண்களுக்கு அந்த சூழலை உடனடியா க புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும். மேலும் அவசர கால வழியை தேடுவதும் கடினமாகிவிடும். அதற்காகவே, விளக்குகளின் பிரகாசம் குறைக்கப்படுகிறது.
பைலட்டுகளுக்கு உணவு
விமானத்தை இயக்கும் பைலட்டுகளுக்கு வெவ்வேறு உணவு வழங்கப்படுவது வழக்கம். மேலும் அவர்கள் அதை பகிர்ந்து உண்ணக் கூடாது என்ற விதிமுறையும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு உணவில் விஷம் அல்லது ஒவ்வாமை இருந்து ஒருவர் பாதிக்கப்பட்டாலும் மற்றொருவருக்கு பாதிப்பு ஏற்படாது என்ற காரணத்தாலேயே இவ்வாறு வெவ்வேறு உணவு வழங்கப்படுகிறது. ஒருவேளை, பகிர்ந்து உண்ணப்படுவது தெரிந்தால், பணியிலிருந்து நீக்கப்படும் வாய்ப்பும் உள்ளதாம்.
உள்ளே ….
விமானங்களில் பிளாஸ்டிக் டம்ப்ளர்களில் தரப்படும் தண்ணீரை குடிக்கக்கூடாது என்று லூஃப்தான்ஸா கார்கோ ஏஜென்ட் ஒருவர் கூறியிருக்கிறார். அதாவது விமானத்தில் நிரப்பப்படும் தண்ணீர் சுகாதாரமான இருக்காது என்பதுடன் சில வேளைகளில் கழிவறையை சுத்தம் செய்யும் பணியாளரே தண்ணீர் தொட்டியையும் சுத்தம் செய்யும் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். சில விமானங்கள் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருப்பதால் அதன் தண்ணீர் தொட்டி சுகாதாரமற்ற முறையில் இருக்க அதிக வாய்ப்பு உண்டு. எனவே போத்தல் தண்ணீரை மட்டுமே பயன்படுத்த பரிந்துரைக்கிறார்.
டீ, காபியும் வேண்டாம்
விமானங்களில் தரப்படும் டீ, காபி போன்றவை சுகாதாரமான குடிநீரில் தயாரிக்கப்படுவதிலும் சந்தேகம் இருக்கிறது. எனவே, விமானங்களில் தரப்படும் டீ, காபியை தவிர்ப்பது நலம் என்கின்றனர். ஆனால், இது எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை.
கழிவறை விடயம்….
விமானத்தின் கழிவறை உள்பக்கம் தாழிட்டுக் கொண்டு திறக்க முடியாவிட்டால், வெளியிலிருந்து எளிதாக திறக்கும் வசதி உள்ளது. கழிவறையின் வெளிப்புறத்தில் புகைப்பிடிக்கத் தடை என்று இருக்கும் பேட்ஜை சற்றே விரல்களால் தூக்கிவிட்டு, அதன் பின்புறத்தில் இருக்கும் போல்ட்டை திருகினால் கழிவறை திறந்து கொள்ளும்.
ஹெட்போன்
விமான இருக்கைகளில் இருக்கும் ஹெட்போன்கள் பலவும் மிகவும் பழையதாக தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் அந்த ஹெட்போன்களை கழற்றி, சுத்தம் செய்து புதிய உறையை மாட்டி மீண்டும் பொருத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பேக் ஜிப்
எடுத்துச் செல்லும் பைகளில் டிஎஸ்ஏ அங்கீகரிக்கப்பட்ட பூட்டுகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இதன்மூலமாக, பைகளை அதிகாரிகள் எளிதாக திறந்து சோதனையிடமுடியும் என்பதோடு, எளிதாகவும் பூட்டி விடலாம். சாதாரண பூட்டுகளை சோதனை செய்துவிட்டு மீண்டும் மூடும்போது சிரமம் ஏற்படும் என்பதுடன், பை கொண்டால் பின்னர் வெளியாட்கள் பொருட்களை எடுத்துவிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தரை இறக்குதல்…
தரை இறக்குதல் என்பதுதான் பைலட்டுகளுக்கு மிக சவாலான விஷயம். சில மோசமான வானிலை மற்றும் மழை நேரங்களில் தரையில் இறக்குவது என்பது கட்டுப்பாட்டுடன் தரையில் மோதுவதற்கு சமமானதாக பைலட்டுகள் வர்ணிக்கின்றனர். சில சமயம் மழை நீர் தேங்கி, விமானத்தின் டயர்கள் தரையுடன் உராய்வு இல்லாமல் போகும் சமயங்களில் அதிக விபத்து அபாயம் ஏற்படுகிறது. எனவே இதனை தரையில் மோதுவதற்கு சமமான லேண்டிங்காகவே பைலட்டுகள் குறிப்பிடுகின்றனர்.
டிப்ஸ் கொடுத்த அனுபவம்…
சில விமான பணியாளர்களுக்கு முதல்முறையாக வரும்போது டிப்ஸ் கொடுத்து கவனித்தால் பயணிக்கும் நேரம் வரை மது உள்ளிட்ட தேவையானதை போதும் போதும் எனும் பெற்றுக் கொள்ளலாம் என்று விமானத்தில் பணியாற்றிய ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறைவான அனுபவம்….
பெரிய அல்லது பிரபலமான விமான நிறுவனங்கள் அனுபவசாலியான பைலட்டுகளை வைத்திருப்பதாக நினைப்பதும் தவறு என்கின்றனர் விமான சேவை துறையை சேர்ந்த வல்லுனர்கள். அனுபவம் குறைவான பலர் லஞ்சம் கொடுத்து பெரிய விமான நிறுவனங்களில் புகுந்துவிடுகின்றனராம். இதுவும் விமான சேவையின் துறையின் நிழல் உலகத்தில் நடைபெறும் மோசமான நடைமுறையாக தெரிவிக்கின்றனர்.
மொபைல்போன் பயன்பாடு
விமானத்தில் ஏறியவுடன், மொபைல்போனை சுவிட்ச் ஆஃப் செய்யப்படுவது வழக்கம். மொபைல் உள்ளிட்ட சாதனங்களால் விமானத்தின் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதாம். ஆனால், கட்டுப்பாட்டு அறையுடன் விமானிகள் செய்யும் சம்பாஷனைகள் மற்றும் சமிக்ஞைகளில் குறுக்கீடுகள் இருக்க வாய்ப்புள்ளதாம். அதுவே, மொபைல்போனை சுவிட்ச் ஆஃப் செய்ய சொல்வதற்கு காரணம்.
துவைக்காத சீட் கவர்கள்
ரயில்களில் தரப்படும் போர்வைகள், தலையணை உறைகள் இரண்டு மாதத்திற்கு ஒருமுறைதான் துவைக்கப்படுகிறது என பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஒப்புக்கொண்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதேநிலைதான் பெரும்பாலான விமானங்களிலும் என்கிறார் முன்னாள் விமானப் பணியாளர் ஒருவர். போர்வையை மடித்து வைத்து கொடுப்பதுதான் பல விமான நிறுவனங்கள் செய்யும் நாற்றம் பிடித்த செயலாக தெரிவிக்கப்படுகிறது.
எஞ்சின் செயலிழந்தாலும்…
பறந்துகொண்டிருக்கும்போது இரண்டு எஞ்சின்களையும் அணைத்துவிட்டாலும், 35,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தை படிப்படியாக தரைக்கு அருகில் வருவதற்குள் 42 மைல்கள் வரை கடக்க வைக்க முடியுமாம். எனவே, பறக்கும்போது விமானம் விபத்துக்களில் சிக்குவது குறைவு. ஆனால், ஏறும்போது இறங்கும்போதுதான் அதிக விபத்து ஏற்படுகின்றன.
ஆஷ் ட்ரே
விமானத்தில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டு விட்டாலும், விமானத்தில் ஆஷ் ட்ரே இருப்பது கட்டாயமான விதிமுறை. ஏனெனில், கட்டுப்படுத்த முடியாத நிலையில், பயணி ஒருவர் சிகரெட் பிடித்தால், அவர் ஆஷ் ட்ரெயில் மட்டுமே போடுவதற்கு வசதி இருக்க வேண்டும். அவர் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டால் விமானத்தில் தீ பிடிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதற்காகவே, இப்போதும் ஆஷ் ட்ரே வைக்கப்படுகிறதாம்.
ரகசிய சிக்னல்
ஒருவேளை விமானம் கடத்தப்பட்டிருந்தால் தரை இறக்கிய பின்னர் விமானத்தின் வேகத்தை குறைக்க பயன்படும் இறக்கையின் ஃப்ளாப்புகள் மேல்நோக்கி இருக்குமாறு விமானி வைத்திருந்தால் அது விமானம் கடத்தப்பட்டிருக்கிறது அல்லது விமானத்திற்குள் தீவிரமான பிரச்னை உள்ளது என்று விமான நிலைய அதிகாரிகளுக்கு சங்கேதமாக தெரிவிக்கும் விதிமுறையாம்.
நாய்களை அழைத்துச் செல்லும்போது…
செல்லப் பிராணிகளை விமானத்தில் அழைத்து செல்வதை தவிர்ப்பது நலம் என்கின்றனர் விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள். மிகவும் பத்திரமாக கூண்டில் எடுத்துச் செல்லப்பட்டாலும், சில சமயம் விமானத்தில் ஏற்றுவதற்கு முன்பாக, விமான எஞ்சினுக்கு அருகில் கூண்டு நிறுத்தப்பட்டிருக்கும். இந்த அதீத சப்தம் உங்களது செல்லப்பிராணிக்கு மன அளவில் அச்சத்தையும், காதுகள் செவிடாகும் அளவுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தும் என்று தெரிவிக்கின்றனர்.
மனித உடல் உறுப்புகள்
விமானங்களில் அதிக அளவில் மனித உடல் உறுப்புகள் எடுத்துச் செல்லப்படுகிறதாம். சில வேளைகளில் தலை மட்டும் தனியாக பெட்டிகளில் வைத்து எடுத்துச் செல்லப்படுவதையும் பணியாளர்கள் பார்த்து விக்கித்து போயுள்ளனராம்.
No comments:
Post a Comment