Friday, September 2, 2016

# யாரங்கே.. அந்த இணையத்தை உடனே இழுத்து மூடுங்கள் #

நிகழ்வு - 1
கபாலி என்ற படம் இணையத்தில் வெளியாவதைத் தடுக்க வேண்டும் என்று அதன் தயாரிப்பாளர் வழக்குத் தொடர்கிறார். அனைத்து அதிகாரங்களும் கொண்ட நீதிபதி இருநூறு வலைத்தளங்களைத் தடை செய்யுமாறு இணையசேவை வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடுகிறார். படத்தின் அறிமுக காட்சி படத்துக்கு முன்பாகவே வாட்ஸ் ஆப்பில் வெளியாகிறது. படம் வெளியான அதே நாளில் படத்தின் பெரும்பகுதி லீக் ஆகிறது. ஆஹா இத்தனை பெரிய காவல்துறை இருந்தும் அதிகாரம் இருந்தும் எப்படி இது நடக்கலாம் என்று கொந்தளிக்கிறது நீதிமன்றம். காவல் துறையை பெஞ்சு மேல் ஏறி நிற்கச் சொல்கிறது.

நிகழ்வு - 2
சவுக்கு சங்கர் என்பவர் தொடர்ந்து தன்னைப் பற்றி எழுதி வருவதால் சினம் கொள்கிறார் ஒரு நீதிபதி. அந்த இணையதளத்தை தடை செய்து உத்தரவிடுகிறார். காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. இரண்டே மணி நேரத்தில் வேறொரு உருவத்தில் வெளிவருகிறது சவுக்கு இணையதளம். இந்த முறை அந்த நீதிபதியின் பெயரிலேயே. காவல் அதிகாரிகளின் மீது நீதிமன்றத்தில் வெளிப்படையாகவே தனது கோபத்தைக் காட்டுகிறார் நீதிபதி.
நிகழ்வு - 3
பல ஆபாச வலைதளங்கள் சிறுவர் சிறுமிகளை வைத்து எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களைப் பரப்புகின்றன என்று வழக்குத் தொடரப்படுகிறது. உடனே மத்திய அரசை அழைத்து என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்புகிறது. மத்திய அரசு இரவோடு இரவாக இருநூறு வலைதளங்களை முடக்கிவிட்டதாக அறிக்கை விடுகிறது. பிறகு அப்படி எதுவும் செய்யவில்லை என்று கூறி மறுநாள் இரவோடு இரவாக அந்த தடையை நீக்குகிறது.
இணையம் என்ற மாபெரும் அமைப்பை ஆரம்பித்து வைத்தது அமெரிக்காதான். இன்றைய இணையத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பல மென், வன்பொருட்களை உருவாக்கும் நிறுவனங்கள் அங்கு தோன்றி வளர்ந்தவையே. வலிமையான சைபர் வேவு பார்க்கும் சக்தியுள்ள நாடு. அப்படிப்பட்ட நாடே, முன்கூட்டியே தெரிந்தும் தனது உளவுத்துறை ரகசியங்கள் இணையத்தில் லீக் ஆவதைத் தடுக்க முடியவில்லை. அசாங்கே அவர்கள் கண்ணில் விரல் விட்டு ஆட்டினார். அமெரிக்காவின் இமேஜ் உலக அளவில் பெரிய அடி வாங்கியது. அவர்களின் நம்பகத்தன்மை மீது பெரிய வரலாற்று ஓட்டை விழுந்தது. அதற்காக அமெரிக்காவின் நீதிமன்றங்கள் தங்கள் காவல் அமைப்புகளை அழைத்து டோஸ் விட்டால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட நகைச்சுவைதான் இந்த நிகழ்வுகள்.
இணையம் என்பது வெறும் தொழில்நுட்பம் அல்ல. அது வெறும் இணையதளங்கள் மட்டும் அல்ல. அது மக்களால் நாடுகளால் ஆனது. பல அரசுகள், தொழில்கள், வங்கிகள் என்று அனைத்தும் இணைந்த நூடுல்ஸ். இணையம் என்பது யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு டைனோசாராக இருப்பதுதான் அதன் பலமும் பலவீனமும். ஒரே நாளில் ஒரு படத்தையோ வீடியோவையோ கட்டுரையையோ உலகம் முழுக்க கொண்டு சேர்க்க முடியும். அந்த விஷயம் நல்லதா கெட்டதா என்பதைப் பொறுத்து அது இந்த உலகத்தை நல்ல வழியிலோ அல்லது தகாத வழியிலோ பாதிக்கிறது. அதை முழுவதுமாக கட்டவோ வெட்டவோ நிறுத்தவோ முடியாது.
ஒரு வகையில், சட்டம் மற்றும் நீதித் துறையில் இருப்பவர்கள் இணையம் தொடர்பான அடிப்படை அறிவு பெறுவது பலரது நேரத்தை மிச்சப்படுத்தும். இலவச லேப்டாப்கள் வாங்கிய எத்தனை எம்பி எம்எல்ஏக்கள் அதை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று கவனித்தாலே தெரியும். எழுபதுகளுக்கு முன்பாகப் பிறந்தவர்கள் அதுவும் டைப்பிஸ்ட் ஸ்டெனோ என்று வாழ்ந்து பழகியவர்களுக்கு கணிணி என்பது சற்றே விலை உயர்ந்த டைப்ரைட்டர் போலத் தெரிவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நீதிபதிகளின் வானளாவிய அதிகாரத்தைத் தாண்டிய, வல்லரசுகளின் வீச்சைத் தாண்டிய ஒரு வெளி அந்தப் பெட்டிக்குள் இருப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதற்காக அரசு வழக்கறிஞர் மீது சாட்டையை சொடுக்கி எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை.
உதாரணமாக ஒரு இணையதளத்தைத் தடை செய்வது என்பது அதன் பெயரை மட்டுமே தடை செய்வதாகும். சற்றே வேறு பெயரில் அந்த இணையதளத்தை உருவாக்க சில வினாடிகள் போதுமானது. அதுவும் தானாகவே உருவாக்கிக் கொள்ளும் வகையில் அமைத்து வைக்க முடியும். போர்ன் தளங்களில் இருக்கும் வீடியோக்கள் படங்கள் ஒரு பொதுவான கன்டென்ட் சர்வரில் இருந்து வருபவை. அவற்றை வைத்து நூற்றுக் கணக்கில் தளங்கள் இருக்கும். அவை வெறும் கூடுகள் மட்டுமே. ஒன்று போனால் இன்னொன்று என்று வந்து கொண்டே இருக்கும். ஒரு சர்வரை முடக்கினால் அதன் பிரதி ஏழு கடல் தாண்டி தானாகவே விழித்தெழும். இணையம் தொடர்பான எந்த சட்டமும் இல்லாத ஒரு நாட்டில் அது இருக்கும்.
இதையெல்லாம் தடுக்கவே முடியாதா, இணையத்தில் நடக்கும் அநியாயங்களை அரசுகள் கைகட்டி வேடிக்கை பார்க்க மட்டுமே வேண்டுமா என்று கேட்டால், அப்படி இருக்க முடியாதுதான். ஆனால் அவர்களுக்கெதிரான சண்டையை நிகழ்த்த அவர்கள் தளத்தில் இறங்க வேண்டும். அரசு அதிகாரிகள், மந்திரிகள், பிரதிநிதிகள், காவல் அதிகாரிகள், நீதிபதிகள் என்று அனைவருக்கும் இணையம் குறித்த அடிப்படைகள் புரியவேண்டும். ஆனால் அதைத் தாண்டி தொழில்நுட்பத்தில் தொடர்ந்து தங்களைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கும் நிபுணர் குழுவை ஆலோசனைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் தனியார் துறையில் அத்தகைய திறமை உள்ளவர்கள் கொட்டிக் கிடக்கிறார்கள். அரசாங்கத்தின் தகவல் தொழில் நுட்பம் மட்டும் இன்னும் முப்பது நாற்பது ஆண்டுகள் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது.
அரசுகளும் அரசுத் துறைகளும் தகவல் தொழில்நுட்பத்தில் முன்னேறுவது அத்தனை கடினமான காரியமா? இல்லைதான். முன்னேற முடியாது என்றெல்லாம் இல்லை, முன்னேற வேண்டாம் என்று அவர்கள் நினைப்பதுதான் காரணம். எல்லாமே கணிணி மயமாகிவிட்டால் அங்கே ஊழல்கள் நடத்துவது கடினம். அரசு இயந்திரம் வேலை செய்யும் அழகு பல்லிளித்துவிடும். ஒரு கோப்பு எத்தனை நாட்களாக ஒரு இடத்தில் தூங்குகிறது என்பதை படமாகப் போட்டுக் காட்டி விடும். மாநிலத்திலேயே சோம்பேறியான அதிகாரி யார் என்பதை ஒரு சிறு மென்பொருள் தோண்டி எடுத்துச் சொல்லிவிடும். கணிணி மயமாக்குதலால் வேலை இழப்பு நேரும் என்ற பயம் கூட அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் இந்தியாவில் அரசு சேவைகளின் வேகம் உயர்ந்தால் அதே அளவு பணியாளர்களுக்கு இன்னும் நிறைய மக்கள் பயன் பெறுவார்கள். அவர்களுக்கு அரசு அதிகாரிகளின் துறைகளின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி குறையும். அடுத்த முறை அரசு அலுவலர்கள் போராட்டம் நடத்தினால் நல்லா வேணும் அவங்களுக்கு என்று ரசிக்காமல் நான்கு பேராவது குரல் கொடுப்பார்கள்.

No comments:

Post a Comment