காஞ்சி சங்கரமடத்தின் முன் அந்தக் கார் வந்து நிற்கிறது.
காரிலிருந்து இறங்குபவர் அன்றைய முதல்வர் எம்,ஜி,ஆர்!
எந்தவித முன் அறிவிப்பும் இல்லை? அவர் வருகிறார் என்ற செய்தியும் இல்லை??
மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கும் இங்குமாக அலை பாய்கிறார்கள். காரணம்?
அன்றைய மடாதிபதியான “மஹா பெரியவர்” அந்த சமயம் மடத்தில் இல்லை! முதல்வர் என்றால் முறைப்படி பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவழைக்கவேண்டும்?
மடத்தில் உள்ளவர்களின் மருட்சியைப் பார்த்து பொன் மனம் கேட்கிறார்,
ஏன் இந்தப் பரபரப்பு?
அவரிடம் தயங்கியபடியே விபரம் சொல்லப்படுகிறது.
மகா பெரியவர் மூன்று கி மீ தூரத்தில் ஒரு குடிலில் தியானத்தில் இருக்கிறார்.
இவ்வளவு தானே? அங்கே போய் அவரை தரிசித்துக் கொள்கிறேன், பதட்டமில்லாத பண்பட்ட வார்த்தைகளை உதிர்த்து விட்டு மீண்டும் காரில் ஏறிக் கொள்கிறார் மக்கள் திலகம்.
மஹா பெரியவர் தங்கியிருந்த குடில் ஒரு குறுகிய சந்தில் இருந்ததால் காரிலிருந்து இறங்கியவர் எந்தவித பந்தாவும் இல்லாமல் செல்கிறார் குடிலை நோக்கி.
இதயக்கனியை வரவேற்ற அந்த முதிர்ந்த கனி,
“உன்னை இங்கே உட்கார சொல்ல ஒரு இருக்கை கூட இங்கில்லை.” என்கிறார்.
“அதனால் என்ன? இங்கே இந்த மடத்துக்கு நீங்கள் தானே முதல்வர்!”
என்றபடி அவர்க்கு எதிரே மண் தரையில் உட்காருகிறார் இதயக்கனி.
இங்கே ஒரு விஷயம் சிலர் அறிந்திருக்க நியாயம் இல்லை, தன் மனதுக்கு மிகவும் பிரியப்பட்ட ஒரு சிலரைத்தான் மஹா பெரியவர் ஒருமையில் அழைப்பார்கள்!
அந்த ஒரு சிலரில் எம்,ஜி,ஆரும் ஒருவர்!
ஆசி வழங்கிய பின் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அந்த அருள் ஞானி!
“நம்ம மனுஷா முருகனோட அறுபடை வீடுகள்—
பழனி–திருச்செந்தூர் திருத்தணி என்று ஒவ்வொன்றுக்கும் தனித் தனியா போகவேண்டியிருக்கு! அதுக்கு தேக சிரமம்–கால விரயம், பணச் செலவுன்னு ஆகிறது.
ஆறுபடைகளையும் ஒரே இடத்துல பிரதிஷ்டை பண்ணும்படியா உன் ராஜ்யத்துல ஒரு இடம் கொடுத்தாய் என்றால் ரொம்ப நன்றாக இருக்கும்”
இவ்வளவு தானே,
இந்த விஷயத்துக்கா என்னைக் கூப்பிட்டிங்க?ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா கூடப் போதுமே? நம் நெஞ்சமெனும் மடத்தில் இன்றும் தங்கற இந்த மடாதிபதி அந்த
சங்கர மடாதிபதியிடம் கனிவாகக் கேட்க,
“உன்னை நேரில் பார்க்கணும்ன்னு ஆசை” என்று பதில் தருகிறார் எதிலும் ஆசை வைக்காத அந்த முனிவர்.
“நீ எங்கே எப்போ எத்தனை மணிக்குப் போனாலும் ஜனங்க உன்னைப் பார்க்க ஆசையோட சூழ்ந்துக்கறா.
அதனால தான் இந்த இடத்துக்கு உன்ன வரச் செஞ்சேன்!
அங்கப் பாரு அதற்குள் உன்னைப் பார்க்க ஜனம் திரண்டுடுத்து.
நீ கிளம்பு என்று அன்புடன் விடை தருகிறார் அந்த ஆன்மிக அருங்கனி.
இப்படியாக உருவானது தான் சென்னை பெஸன்ட் நகரில் உருவாகியுள்ள முருகன் அறுபடை வீடு கோயில்!
எம்,ஜி,ஆர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது யாராலும் விலைக்கு வாங்கப்பட முடியாத யாருக்கும் தனியாக பிரார்த்தனை செய்யும் பழக்கம் இல்லாத அந்தப் பெரியவர் எம்,ஜி,ஆர் ஒருவருக்காக மட்டுமே அவர் நலம் பெற வேண்டி பிரத்யேக பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
மேலும், மகா பெரியவரின் ஆலோசனைப்படியே தமிழகமெங்கும் கவனிக்கப்படாமல் சரியான பராமரிப்பின்றி இருந்த கோவில்களில் எல்லாம் "ஒரு விளக்கு பூஜை" முறையை அமுல்படுத்தினார் பொன்மனச் செம்மல்!
புரட்சித்தலைவர் மறைந்தபோது மிகவும் வருந்திய பெரியவர், அவருக்காக "மோட்ச தீபம்" ஏற்றினார்!