Wednesday, October 17, 2018

பர்வத மலை !!!

*****************
பர்வதமலை' என்றால் மலைகளுக்கெல்லாம் மலை... என்று பொருள்.
கயிலாயத்தில் இருந்து சிவபெருமான் திருவண்ணாமலைக்கு வந்தபோது பர்வத மலையில் ஒரு காலை வைத்து மற்றொரு காலை திருவண்ணாமலையில் வைத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
எனவே பர்வத மலையின் காலமும் திருவண்ணாமலையின் காலம்போன்று 260 கோடி வருடங்கள் என்று கருதப்படுகிறது. இந்த மலை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது. போளூருக்குத்தென்மேற்கே 20 கி.மீ. தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து வடமேற்கே 30 கி.மீ. தொலை விலும், செங்கத்திலிருந்து வடகிழக்கே 30 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
இந்தமலை `கடலாடி' என்னும் கிராமத்தையும், தென்மாதி மங்கலம் என்னும் கிராமத்தையும்தன் அடிவாரத்தில் கொண்டிருக்கிறது. கம்பீரமான தோற்றம் கொண்ட இம்மலையின் பரப்பளவு 5500 ஏக்கர். மலையின் உயரம் சுமார் 4500 அடிகள். இம்மலையைச் சுற்றிலும் 365 குளங்கள் இருந்தன என்று கூறப்படுகிறது.
இம்மலையைச் சுற்றிலும் ஏழுசடைப்பிரிவுகள் உள்ளன. பர்வத மலையின் முன்பாகம் தென்மாதி மங்கலத்திலும், பின்பாகம் கடலாடி கிராமத்திலும் உள்ளள. எனவே இரு வழிகளிலும் மலையேறலாம். இந்த மலையானது, சில கோணங்களில் இருந்து பார்க்கும்போது திரிசூலவடிவில் தெரிவதால், இதனைத் `திரிசூலகிரி' என்றும் கூறுகின்றனர்.
இதுதவிர கந்தமலை, அகத்தியமலை, மங்களமலை, நந்தி மலை என்றும் இந்த மலை அழைக்கப்படுகிறது. இவற்றுள் ஏதாவது ஒன்றின் பெயரை நம்பிக்கையுடன் நாம் சொன்னால், வாழ்க்கையில் செல்வம், புத்திரப்பேறு, முதலியவற்றைப்பெற்று இறுதியில் முக்தி இன்பம் அடையலாம்.
பர்வதமலை மிக உயரமான சிகரத்தை உடையதால், `பர்வதகிரி' என்றும், இம்மலையில் மிகச்சிறந்த பல அரிய மூலிகைகள் நிறைந்திருப்பதால், `சஞ்சிவிகிரி' என்றும், ஒரு காலத்தில் அகத்தியரால் இம்மலையில் திரிசூலம், நாட்டப்பட்டதால் `திரிசூலகிரி' என்றும், பர்வதராஜன் மகளாகிய பார்வதி தேவி இங்கு வந்து தங்கியதால், `பர்வதம்' எனவும் பெயர் பெற்றிருக்கிறது.
சிலர் இம்மலையை `ஸ்ரீசைலம்' என்றும் அழைப்பதுண்டு. மகாலட்சுமி திருமாலைத் திருமணம் புரிவதற்காகப் பல இடங்களில் தவம் செய்து அது முடியாமற் போகவே அதன்பின் இப்பர்வதமலையைத் தேர்ந்தெடுத்து, இங்கு வந்து தவம் செய்தார். இதனைக் கண்ட சிவபெருமான், பர்வதமலையில் தவம் செய்யும் மகாலட்சுமியை உடனே திருமணம் செய்து கொள்வாயாக என்று திருமாலுக்கு எடுத்துரைக்க, அதன் பின்னர் திருமகள் திருமணம் மிகவும் சிறப்புடன் நடந்தேறியது.
இதனால் இம்மலைக்குச் சென்று வருபவர்கள் தங்களின் எண்ணம் ஒவ்வொரு முறையும் நிறைவேறுவதை உணர்கின்றனர். இதற்குக் காரணம் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியே இங்குத்தவம் செய்ததால் தான். தவம் செய்து அதன் பலனால் மகாலட்சுமியின் எண்ணம் ஈடேறியதால், இம்மலை `மங்களமலை' என்று அழைக்கப்படுகிறது.
சிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து தன்னை யாரும் வெல்லக்கூடாது என வரம் பெற்ற சூரபதுமன் தனது தவவலிமையால் தேவர்களை கொடுமை செய்தான். இதனால் ஈசனின் உத்தரவுப்படி முருகப்பெருமான் பர்வதமலையை சுற்றிவந்து தென்பாதிமங்கலம், காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், எலத்தூர், பூண்டி, குருவிமலை ஆகிய 7 ஊர்களில் லிங்கத்தை நிறுவி வழிபட்டார்.
இதனால் இந்த மலை கந்தமலை என்ற பெயர் பெற்றது. அதுபோல அகத்தியருக்கு இந்த மலையில்தான் ஈசன்முதன் முதலில் தன் திருமண காட்சியை காட்டினார். அந்த மலையில் அகத்தியர் திரிசூலத்தை நட்டதால் அது திரிசூலமலை என்று கூறப்படுகிறது. இம்மலையில் உள்ள தெய்வத்துக்கு ஒரு முறை தீபமேற்றி வணங்கினால், வருடத்தில் 365 நாட்களுக்கும் தீபமேற்றி வைத்து வழிபட்ட பலன் கிடைக்கும்.
பிரம்மா, விஷ்ணு, இந்திரன், 12 கோடி சூரியர்கள் இரு கோடி அசுவணி தேவர்கள் மற்றும் தேவதைகள், 11 கோடி உருத்திரர்கள், 8 கோடி வசுக்கள், கோடி ரிஷிகள், 18 வகைகளைச் சேர்ந்த தேவ கணங்கள் ஆகிய அனைவரும் இம்மலையை வலம் வந்து அநேகதான தர்மங்கள் செய்ததால் தங்கள் துன்பங்கள் நீங்கப் பெற்று இன்புற வாழ்ந்து இறுதியில் இறைவன் பாதம் பெற்றனர்.
நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணாமலை நினைக்காமலே முக்தி தருவது பர்வதமலையாகும். இம்மலை உச்சியிலுள்ள கோவில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுப்புகழ் உடையது. தென்கைலாயம் என்று இந்த மலை போற்றப்படுகிறது. இந்த மலையானது அறம், பொருள், இன்பம், மோட்சம் இவை நான்கினையும் ஒரே இடத்தில் அளிக்கக் கூடிய பெருமை பெற்றது.
மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை பொதிகைமலை, வெள்ளியங்கிரிமலை, சதுரகிரிமலை போன்ற பல சித்தர்களின் மலைகளுக்குக் குறிப்பிட்ட சில மாதங்கள் அல்லது நாட்களுக்குத்தான் செல்ல முடியும். ஆனால் வருடம் முழுவதும் பர்வதமலைக்கு சென்று வரலாம். நவநாத சித்தர்கள், பதினெண் சித்தர்கள் எனச் சித்தர்கள் பலர் உறையும் புனித இடமாக பர்வதமலை கருதப்படுகிறது.
சித்தர்கள் இம்மலையில் இருக்கும் மல்லிகார்ஜுன சுவாமிக்கும் பிரமராம்பிகை அம்மனுக்கும் தினமும் இரவில் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதாகக் கூறப்படுகிறது. திருவண்ணாமலையில் அடிக்கு ஒரு லிங்கம் இருப்பதாக சொல்வார்கள். ஆனால் பர்வதமலையில் பிடிக்கு ஒரு லிங்கம் இருப்பதாக கருதப்படுகிறது.
இங்கு சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள். இங்கு குகை நமச்சிவாயர், குருநமச்சிவாயர் ஆகியோர் கரு நொச்சியுண்டு இளமை பருவத்தை அடைந்தனர். இங்கு சித்தர்கள் இரவில் ஜோதி தரிசனம் காண்பதாக நம்பப்படுகிறது. தியானம் செய்வதற்கு இந்தமலை உகந்தமலையாகும். சித்தர்கள் தேனீக்கள் வடிவில் இந்தமலையில் உலவுவதாக சொல்கிறார்கள்.
பர்வதமலையில் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இரவு நடுஜாமத்தில் பன்னிரண்டு சித்தர்கள் சங்கு, கஞ்சதாளம் முதலான இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டு வலம் வருவதாக இரவில் அங்கு வயலுக்குக் காவல் இருக்கும் விவசாயிகள் கூறுகின்றனர். இவர்களில் ஒருசிலரின் கண்களுக்கு வலம் வந்த சித்தர்கள் தென்பட்டதாகவும், சிலருக்கு இன்னிசை மட்டும் கேட்டதாகவும் சொல்கின்றனர்.
தவசிகள் யோகம் செய்வதற்காகவே சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இம்மலையில் ஆலயம் அமைத்து இதனை யோகமலை ஆக்கியிருக்கின்றனர். இந்த மலையில் சகலநோய்களையும் தீர்க்கும் `பாதாள சுனைத்தீர்த்தம்' உள்ளது. இச்சுனையின்கீழ் சூட்சும தேகத்தோடு (ஆன்மா) செல்லக்கூடிய வழி உள்ளது.
சித்தர்கள் தங்கும் தாமரைத் தடாகம், வாழைத் தோட்டம், காராம்பசு போன்றவை இங்கு உள்ளதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். பூண்டி மகான் இங்கு வந்து பாதிமலை ஏறும்போதே மலையை நோக்கியதும் சிவலிங்கம் தொடர்வடிவமாகக் காட்சி தரவே `காலால் மிதிப்பது கூடாது' என்று மலைமீது செல்வதை நிறுத்தி விட்டு மலையைச் சுற்றிச் கிரிவலம் மட்டும் செய்து விட்டு வணங்கிச் சென்றார் என்று கூறப்படுகிறது.
மலைக்கு வருபவர்களின் வழித்துணைக்கு அடிவாரம் முதல் கடப்பாறைப்படி வரை பைரவர் (நாய்) ஒன்று நமக்குத்துணைக்கு வரும் அதிசயம் நடக்கிறது. பக்தர்கள் பர்வத மலையில் மலையேறு கையில் சித்தர்கள் ஓரிடத்தில் பூனை வடிவாகவும், வேறோர் இடத்தில் மான் வடிவாகவும் தரிசனம் தந்ததாகத் தென்மாதி மங்கலம், கடலாடிக் கிராமத்துப்பெரியவர்கள் கூறுகின்றனர்.
இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. திருக்கழுக்குன்றத்தில் காண்பதுபோல் சில சமயம் இங்கும் சித்தர்கள் கழுகு வடிவத்தில் பாப்பாத்தி மலையைச்சுற்றிப்பறந்த வண்ணம் இருப்பதைக் காணலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...