Tuesday, October 16, 2018

நீயே குருவாக வந்து என்னை ஆட்கொண்டவன்.

📗📗📗📗கந்தர் அனுபூதி 📘📘📘📘
அருணகிரிநாதர் கூடு விட்டு கூடு பாய்வதற்கு கிளியை ஏன் பயன்படுத்தினார் ? கழுகு, மயில், அன்னம் என பறவைகள் பல இருப்பினும் கிளியை தேர்வு செய்வதற்கு காரணம் என்ன…?
ஸ்ரீஆண்டாள், ஸ்ரீமீனாட்சி, ஸ்ரீகாமாட்சி, ஸ்ரீவடிவுடையம்மன், ஸ்ரீகற்பகாம்பாள் என்று நிறைய பெண் தெய்வங்கள் கிளியை ஏன் கையில் வைத்துள்ளனர்…?
🌹பதில்🌹
🌟 இதற்கான முக்கியமான காரணம் மனிதர்களுக்கு அடுத்து பேசும் திறமை உடைய ஒரே உயிரினம் கிளி மட்டுமே, ஆதலால் தான் அருணகிரிநாதர் கிளியை தேர்வு செய்தார்.
🌟 கிளி பழவகைகளை மட்டுமே உணவாக அருந்தும் தன்மை உடையது. சைவ உணவு விரும்பி. தன்னை கடந்து செல்லும் எறும்பை கூட உண்ணாது, பிற உயிரினங்களையும் எதுவும் செய்யாது.
🌟 கூர்மையான நகங்களை உடைய கால்கள் கிளிகளுக்கு இருந்தாலும் மென்மையான பூவைகூட அவை கீறாது.
🌟 கிளிகளுக்கு நியாபக திறன் அதிகம். விவேகம் கலந்த வேகம் , கூர்ந்து கவனிக்கும் தன்மை, கிளிக்கு அதிகம் உள்ளது.
🌟 அழகான பறவைகளில் கிளியும் ஒன்று. எந்த திசையிலிருந்து எதிரிகள் வந்தாலும் விரைவில் கண்டு பிடித்து விடும்.
இதனால் அருணகிரிநாதர் கூடு விட்டு கூடு பாய்வதற்கு கிளியை தேர்வு செய்தார். கிளி உடலுக்கு சென்ற பிறகு அருணகிரிநாதர் பெருமான் பாடியருளியது கந்தர் அனுபூதி.
🌹சிறப்புகள்🌹
🌹 அனுபூதி என்னும் சொல்லினை
அனு + பூதி என்று பிரிக்கலாம்
"அனு" என்பது அனுபவம்.
"பூதி" என்பது புத்தி. அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி.
🌹 பத்தாம் திருமுறை திருமந்திரம் நூலுக்கு ஒப்பாக இந்த நூல் கொள்ளத்தக்கது எனச் சமயவாணர்கள் கூறுகின்றனர்.
🌹 திருமூலர் இடையன் உடலுக்குள் புகுந்து திருமந்திரம் சொன்னாராம். அதுபோல அருணகிரிநாதர் கிளி உடலுக்குள் இருந்து கொண்டு இந்த நூலைச் சொன்னார் எனக் கூறுவர்.
🌹 எல்லாப்பாடல்களுமே "நிலைமண்டில ஆசிரியப்பா" வகையில் எழுதிருப்பதனை காண முடிகிறது. எனவே ஒவ்வொரு பாடலும் 4 அளவடிகள் கொண்டு, ஆசிரியச்சீர்கள் கொண்டு இயற்றப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு பல சிறப்புகள் நிறைந்த கந்தர் அனுபூதியின் 51வது நிறைவு பாடல்…
🌹நிறைவு பாடல்🌹
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
🌹பதவுரை🌹
🍀உருவாய் ... ஆறுமுகமும் பன்னிருதோளும் கொண்ட
சகள வடிவாயும்,
🍀அருவாய் ... குணம், குறி, நாமம் அற்ற அகளமாயும்,
🍀உளது ஆய் ... உண்டு என்பவருக்கு உள் பொருளாகவும்,
🍀இலது ஆய் ... இல்லை என்பாருக்கு இல் பொருளாகவும்,
🍀மலராய் ... மலராகவும்,
🍀மருவாய் ... அம் மலரின் மணமாகவும்,
🍀மணியாய் ... மாணிக்கமாகவும்,
🍀ஒளியாய் ... அதன் ஒளியாயும்,
🍀கருவாய் ... சகல உயிர்களையும் பிரளய காலத்தில் தன் மேனியில்
வைத்து காப்பவனும்,
🍀உயிராய் ... சிருஷ்டிக்கும் போது சகல ஜீவன்களுக்கும் உயிருக்கு
உயிராகவும் ஆன்மாவாகவும் திகழ்பவனும்,
🍀விதியாய் ... அந்த உயிர்களின் வினைப் பயனாகவும்,
🍀கதியாய் ... முத்தி நிலையில் அந்த உயிர்கள் சென்றடையும்
நிலையாகவும்,
🍀குகனே ... உள்ள முருகக் கடவுளே
🍀குருவாய் வருவாய் அருள்வாய் ... என் குருவாக வந்து எனக்கு
அருளி என்னை ஆட்கொண்டவன்.
🌹பாடல் விளக்கம்🌹
ஆறுமுகமும் பன்னிரு விழியும் கொண்ட சகள வடிவாகவும்,
குணம் குறி நாமம் அற்ற அகளமாயும், உண்டு என்பார்க்கு உள்
பொருளாயும், இல்லை என்பார்க்கு இல் பொருளாயும், மலராயும்,
அம் மலரின் மணமாகவும், மாணிக்கமாகவும், அதன் ஒளியாயும்,
சகல உயிர்களையும் பிரளய காலத்தில் தன் மேனியில் வைத்துத்
தாங்குபவனும், சிருஷ்டிக்கும் சமயம் சகல உயிர்களுக்கும்
உயிராய், ஆன்மாவாய் திகழ்பவனும், அவ்வுயிர்களின்
வினைப்பயனாய் உள்ளவனும், முத்தி நிலையில் அவ்வுயிர்கள்
சென்றடையும் நிலையாக உள்ளவனும் திகழும் கந்தக் கடவுளே,
நீயே குருவாக வந்து என்னை ஆட்கொண்டவன்.
எங்கும் ஏகனாக அனேகனாக நிறைந்த பச்சை மயில் மீது, வள்ளி தேவயானையுடன் வெற்றி வேலை திருக்கரத்தில் ஏந்தி பவனி வரும் முருகப் பெருமானை வணங்கி, பைந்தமிழ் வளர்த்து திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி பாடியருளிய அருணகிரிநாதர் வள்ளல் பெருமானின் திருவடிகளை வணங்கி "ஈ" _யினும் சிறிய சிறியேன் கந்தர் அனுபூதி தொகுப்பை நிறைவு செய்கிறேன்.
அனைவருக்கும் நன்றிகள் பல………

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...