Thursday, October 31, 2019

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் மிக நூல் பதிவு...... சுர்ஜித் விஷயம் துக்கமே. யாரும் மறுக்க முடியாது.

ஆனால் ஒரு கிரிக்கெட் மேட்ச் அல்லது சுதந்திர தின அணிவகுப்பு போல நேரலையில் அதுவும் மூன்று நாட்கள் ஒரு துக்கத்தை மக்கள் மனதில் ஆணியடித்து இறக்கியே ஆக வேண்டிய விஷயம்தானா? செய்தித் தொகுப்பில் காட்டினால் போதுமே. இது மக்களின் மனதில் வலிந்து திணிக்கப்பட்ட கூடுதலான பதட்டம்.
முன்னணியில், பின்னணியில் உள்ள நடிகர் நடிகைகளை அழைத்து வந்து,"இதை நீங்க எப்படி பார்க்கறிங்க?'' என்று கேட்பது அபத்தமாகப் படவில்லையா?
இரண்டு வயது குழந்தை உயிருக்குப் போராடுவதை துக்கம் தாண்டி வேறு எப்படிப் பார்ப்பார்கள்? அரசின் மெத்தனம், அதிகாரிகளின் அலட்சியம், தனி மனிதனின் பொறுப்பின்மை என்கிற டெம்ப்ளேட் கருத்துகள் தாண்டி.. எப்படி மீட்கலாம் என்று விஞ்ஞானப் பூர்வமாக ஆலோசனை தருவார்கள் என்று எதிர்பார்த்தீர்களா?
ஒருவர் 'வின்வெளியில் ராக்கெட்டும், சாட்டிலைட்டும் பிறகு அனுப்பலாம்,முதலில் இதற்கு ஒரு கருவி கண்டுபிடிக்கச் சொல்லுங்க' என்றார். அவர் பேசும் அந்த நேரலைக் காட்சியே சாட்டிலைட்டுகளால்தான் நிகழ்கிறது என்பதே புரியாமல்.
இறந்து, நல்லடக்கம் முடிந்த பின்னும் விடாமல் துரத்தி அங்கு வந்தவர்கள் முன்னெல்லாம் மைக் நீட்டி "இந்த துக்கத்தை எப்படி பார்க்கறிங்க?'' என்று துரத்தித் துரத்திக் கேட்பது..ஊடக தர்மத்தில் சேருமா?
துக்கத்தில் இருக்கும் அந்தக் குடும்பத்தினரையும் கொஞ்சம்கூட தனிமையில் விடாமல்..
அவர்களுக்கு சுதந்திரமாக அழுவதற்கான பிரைவசிகூட கொடுக்காமல் வெளிச்சமடித்து கவர் செய்துகொண்டே இருப்பது ஒரு வகையில் குரூரமாயில்லையா?
அழுகையும், துக்கமும்கூட ஒரு அந்தரங்கமான விஷயமில்லையா? கம்பி மத்தாப்பு கொளுத்திப் பிடித்து மகிழ்ச்சியுடன் போஸ் கொடுக்கலாம். துக்கத்துடனும் போஸ் கொடுக்க வேண்டுமா?
அரசியல் தலைவர்கள் கூட அத்தனை அவசரமாக ஏன் ஓடிப் போய் ஆளுக்கொரு செக்கை நீட்ட வேண்டும்? அறிக்கை மட்டும்விட்டுவிட்டு பிறகு நிதானமாகப் போய்ப் பார்த்திருக்கலாம்...
இந்த நேரலை மூலம் அரசு இயந்திரம் சரியாக வேலை பார்க்கிறது என்று நற்சான்றிதழ் வழங்கினீர்களா?
அல்லது விளம்பரங்களால் கல்லாக் கட்டினீர்களா?
அல்லது நிர்பந்தமா? மீடியா நண்பர்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்.
வெள்ளம், சுனாமி காலங்களில் செய்த நேரலைகளில் செய்த என்ணற்ற தகவல் உதவிகளால் பாராட்டுக்களைப் பெற்ற காட்சி ஊடகங்கள் இதில் சறுக்கி விட்டன என்பதே உண்மை.
இப்படிச் செய்தது சரியா, தவறா என்று உங்கள் சேனல்களிலேயே ஒரு விவாத நிகழ்ச்சி நடத்தத் தயாரா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...