Monday, October 28, 2019

அ.தி.மு.க.,வில் ஓய்ந்தது சசிகலா சலசலப்பு.

இடைத்தேர்தல் வெற்றிக்கு பின், அ.தி.மு.க.,வில், சசிகலா சலசலப்பு அடியோடு ஓய்ந்தது. சிதறிய கட்சியினரை ஒருங்கிணைத்து, ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., தலைமையிலான, அ.தி.மு.க., முழு பலம் பெற்றுள்ளது.

அடுத்தடுத்து வரும், உள்ளாட்சி தேர்தல், சட்டசபை பொதுத்தேர்தலில், தி.மு.க.,வை எதிர்கொள்ள, அ.தி.மு.க., தரப்பு, அதிரடி வியூகம் அமைத்து வருகிறது.ஜெயலலிதா மறைவுக்கு பின், அவருடன் இருந்த சசிகலா, அ.தி.மு.க., பொதுச் செயலரானார்; ஓ.பன்னீர்செல்வம், முதல்வரானார். சசிகலாவுக்கு முதல்வராகும் ஆசை வந்ததால், கட்சியில் குழப்பம் வெடித்தது. சசிகலாவை எதிர்த்த பன்னீர்செல்வம் தலைமையில், தனி அணி உருவானது. அதேநேரத்தில், சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா சிறைக்கு சென்றதால், அவரது முதல்வர் கனவு தகர்ந்தது. அவரது விருப்பப்படி, இ.பி.எஸ்., முதல்வரானார். ஆனால், கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து வந்த நெருக்கடி காரணமாக, சசிகலா குடும்பத்தினரின் உறவை, இ.பி.எஸ்., துண்டித்தார்; பன்னீருடன் கைகோர்த்தார்.

பழையபடி கட்சி பலம் பெறத் துவங்கியதும், ஓரங்கட்டப்பட்ட தினகரன், தனி அமைப்பை ஏற்படுத்தி, அ.தி.மு.க.,வினரை வளைக்க முயன்றார். அ.தி.மு.க.,வே தன் கைக்கு வந்து விடும் எனக்கூறி, ஆளும் கட்சியினருக்கு வலை விரித்தார். அவரை நம்பி சென்ற, 18 எம்.எல்.ஏ.,க்கள், பதவியை இழந்தனர். சென்னை, ஆர்.கே.நகரில் சுயேச்சையாக வெற்றி பெற்ற தைரியத்தில், லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம் என, கணக்கு போட்டார். அதற்காக, அ.ம.மு.க., என்ற கட்சியை தினகரன் துவக்கினார். அனைத்து தொகுதிகளிலும், வேட்பாளர்களை நிறுத்தினார். தன்னை நம்பி வந்து, எம்.எல்.ஏ., பதவி இழந்தவர்களை, இடைத்தேர்தலில் நிறுத்தினார். அனைத்து தொகுதிகளிலும், அவரது கட்சி படு தோல்வியை சந்தித்தது.தினகரனுக்கு, மக்கள் செல்வாக்கு இல்லை என்பதை அறிந்த, அ.ம.மு.க., நிர்வாகிகள் பலர், அ.தி.மு.க.,வுக்கு திரும்பினர். மீதியுள்ளவர்கள், தி.மு.க.,விற்கு தாவினர். இதனால், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில், போட்டியிட மறுத்து, தினகரன் பின்வாங்கினார்.

மேலும், இரு தொகுதிகளிலும், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றதும், அ.ம.மு.க.,வில் உள்ள எஞ்சிய கூட்டமும் மெல்ல கரையத் துவங்கி உள்ளது. தினகரனின் வலது கரமாக இருந்த, கர்நாடக மாநில செயலர் புகழேந்தி, சமீபத்தில், முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்து பேசினார். அதன் தொடர்ச்சியாக, அ.ம.மு.க., முக்கிய நிர்வாகிகள் பலர், முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.இடைத்தேர்தல் வெற்றியால், அ.தி.மு.க.,வில், சசிகலா ஆதரவு பேச்சு மங்கத் துவங்கி விட்டது. சசிகலா, தினகரன் என்ற சலசலப்பே இல்லாமல் போய் விட்டது. அந்த குடும்பத்தினரால் வெளியேறிய கட்சியினர், மீண்டும் திரும்பி வருவதால், கட்சிக்கு முழு பலம் கிடைத்துள்ளது. இதை நிரூபிக்கும் வகையில், இடைத்தேர்தலில், அதிக ஓட்டுகள் பெற்று, ஆளும் கட்சி பெரும் உற்சாகத்தில் உள்ளது.இதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்து வரவுள்ள உள்ளாட்சி தேர்தல், சட்டசபை பொதுத் தேர்தலை சந்திக்கவும், களத்தில், தி.மு.க.,வை எதிர்கொள்ளவும், அ.தி.மு.க., தரப்பு, அதிரடி வியூகங்களை வகுக்க துவங்கி உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...