Wednesday, July 14, 2021

மணப்பாறை கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் அடாவடி!

 மணல் கடத்திய திருச்சி, மணப்பாறை ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் ஆரோக்கியசாமியின் டிப்பர் லாரிகள், ஜே.சி.பி.,யை பறிமுதல் செய்ய சென்ற பெண் டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டரை, நான்கு மணி நேரம் கதற வைத்த அடாவடி சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'கட்சி நிர்வாகிகளின் இது போன்ற சட்டவிரோத செயல்களை, முதல்வர் ஸ்டாலின் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்' என போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.


மணப்பாறை  ஒன்றியம்,  தி.மு.க., பொறுப்பாளர், அடாவடி!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே முத்தபுடையான்பட்டியில் மணல் கடத்துவதாக, போலீசாருக்கு நேற்று முன்தினம் அதிகாலை தகவல் கிடைத்தது. 'பெல்' இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார், முத்தபுடையான்பட்டியில் சோதனை நடத்தினர்.


மூன்று டிரைவர்கள்



அப்போது, அங்கு மணல் அள்ளிக் கொண்டிருந்த ஒரு ஜே.சி.பி., மற்றும் இரு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து, டிரைவர்கள் மனோகர், 36, பவுன் சேகர், 28, கார்த்திகேயன், 25, ஆகிய மூவரையும் பிடித்து, மணப்பாறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.அந்த ஜே.சி.பி., மற்றும் டிப்பர்கள், மணப்பாறை கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் ஆரோக்கியசாமி, 42, என்பவருக்கு சொந்தமானவை. போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைக்கப்பட்டிருந்த மூன்று டிரைவர்களையும், அரசியல் அழுத்தம் காரணமாக இன்ஸ்பெக்டர் அன்பழகன் விடுவித்து விட்டார். அவர்களும், யூனியன் அலுவலகத்தில் நிறுத்தி வைத்திருந்த ஜே.சி.பி., மற்றும் டிப்பர்களை ஓட்டிச் சென்று விட்டனர்.

மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் விடுவிக்கப்பட்டது குறித்து, டி.ஜி.பி., வரை புகார் சென்றது. இதையடுத்து, விடுவிக்கப்பட்ட வாகனங்களையும், டிரைவர்களையும் மீண்டும் பிடிக்க மணப்பாறை டி.எஸ்.பி., பிருந்தாவுக்கு உத்தரவு வந்தது.அவர், மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒன்றிய பொறுப்பாளர் ஆரோக்கியசாமியிடம் பேசினார். அவரோ, 'வாகனங்களையும், டிரைவர்களையும் ஒப்படைக்க முடியாது; உங்களால் முடிந்ததைப் பாருங்கள்' என அடாவடியாக கூறிவிட்டார்.


பழனியாண்டி 'பஞ்சாயத்து'



அதிர்ச்சி அடைந்த டி.எஸ்.பி., பிருந்தா, இன்ஸ்பெக்டர் அன்பழகனுடன், முத்தபுடையான்பட்டியில் உள்ள ஆரோக்கிய சாமி வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை, டிரைவர்களையும், வாகனங்களையும் ஒப்படைக்கும்படி, ஆரோக்கிய சாமியிடம் கெஞ்சினார்.ஆரோக்கிய சாமி, 'எதையும் ஒப்படைக்க முடியாது; உங்களால் முடிந்ததைப் பாருங்கள்' என மீண்டும் கறாராக பேசி உள்ளார். மேலும், அமைச்சர் நேருவின் பெயரையும் பயன்படுத்தி மிரட்டியுள்ளார்.டி.ஜி.பி., உத்தரவு என்பதால், தொடர்ந்து ஒன்றிய பொறுப்பாளரிடம் கெஞ்சி கூத்தாடி, வாகனங்களையும், டிரைவர்களையும் ஒப்படைக்குமாறு டி.எஸ்.பி., பிருந்தா கதறி உள்ளார். விடாப்பிடியாக இருந்த ஆரோக்கியசாமி, 'வேண்டுமானால் வேறு இரு வாகனங்களை மட்டும் ஒப்படைக்கிறேன்' எனக் கூறி உள்ளார்.

ஆனால் வெளியுலகுக்கு தெரிந்து விட்டதால், அதே வாகனங்கள் மற்றும் டிரைவர்களை ஒப்படைக்க டி.எஸ்.பி., கேட்டுள்ளார். இந்த பேச்சு ஆரோக்கிய சாமி வீட்டில், நான்கு மணி நேரம் நடந்துள்ளது; மணப்பாறை டி.எஸ்.பி., அலுவலகத்திலும் தொடர்ந்தது.அப்போது அங்கு ஸ்ரீரங்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனியாண்டி வந்து, இருதரப்புக்கும், 'பஞ்சாயத்து' செய்துள்ளார். இதில், இரு பழைய வாகனங்களை மட்டும் ஒப்படைக்க ஆரோக்கிய சாமி ஒப்புக் கொண்டுள்ளார். வேறு வழியின்றி போலீசாரும் சம்மதித்தனர்.ஆயினும், 'டிரைவர்களை ஒப்படைக்க முடியாது' என, ஒரே அடியாக மறுத்து விட்டார்.

இதையடுத்து மணல் கடத்தியதாக ஒரு ஜே.சி.பி., மற்றும் டிப்பர் லாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, மனோகர், பவுன் சேகர் ஆகிய இரு டிரைவர்கள் தலைமறைவு எனவும், உரிமையாளர்கள் தலைமறைவு என்றும் வழக்கு பதிவு செய்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மணல் கடத்திய வாகனங்களை ஒப்படைக்குமாறு கேட்ட டி.எஸ்.பி., பிருந்தா மற்றும் இன்ஸ்பெக்டர் அன்பழகனை கதற வைத்த சம்பவம், போலீசார் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின், 'அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் அடக்க வாசிக்க வேண்டும். மக்கள் நலன் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும்' என கண்டிப்பான அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.அதை கண்டுகொள்ளாத ஆரோக்கிய சாமி, தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதுடன், தி.மு.க., ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில், போலீசாரையும் அவமதித்துள்ளது, தி.மு.க., நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதுடன், அரசு அதிகாரிகளை மிரட்டும் பாணியில் செயல்படும் தி.மு.க.,வினர் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.இதற்கிடையில், பிடிபட்ட லாரிகள் படங்களுடன், 'ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப் போறாரு' என்ற பாடல், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


யார் இந்த ஆரோக்கிய சாமி?



மணப்பாறை பகுதியில் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு, கோடிகளில் சம்பாதித்து விட்ட ஆரோக்கிய சாமி, ஓராண்டுக்கு முன்தான் அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வில் சேர்ந்தார். அவரிடம் பணம் அதிகம் இருந்ததால், தி.மு.க.,வின் விதிமுறைகள் எல்லாம் மீறப்பட்டு, சீனியர்கள், விசுவாசிகள் ஓரம் கட்டப்பட்டு, தனியாக மணப்பாறை கிழக்கு ஒன்றியம் உருவாக்கப்பட்டு, அதன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.மணப்பாறை பகுதியில் அனைத்து கட்சியினர், போலீஸ், வருவாய்த் துறையினரை கையில் வைத்துக் கொண்டு, 10 ஆண்டுகளில் மணல் கடத்தியே பல கோடிகளை சம்பாதித்து விட்டார்.தன் மனைவியை, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வைத்து, 1 கோடி ரூபாய் வரை செலவு செய்து, ஒன்றிய கவுன்சிலர் ஆக்கி உள்ளார். ஒரு மாதத்துக்கு முன், பக்கத்து வீட்டு பெண்ணையும், அவரது வக்கீல் மகனையும் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்தவர் இவர்.


வி.ஏ.ஓ., மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றவர் கைது



புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே கீழத்தானியம் பகுதி வி.ஏ.ஓ.,வாக முருகராஜ், 43, கிராம உதவியாளராக சுரேஷ், 40, உள்ளனர். இருவரும் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மணல் கடத்தி வந்த ஒரு லாரியை மறித்தனர்.ஆனால், இருவர் மீதும் லாரியை ஏற்றி கொல்ல முயற்சி நடந்தது; இருவரும் விலகி சென்றதால் உயிர் தப்பினர். பின், லாரியில் இருந்து இறங்கிய விளாம்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் மூர்த்தி, 36, கார்த்தி, 30, பாலாஜி, 23, ஆகிய மூவரும், வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளரை தாக்கி தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து காரையூர் போலீசில் வி.ஏ.ஓ., முருகராஜ் புகார் அளித்தார். போலீசார் பாலாஜியை கைது செய்தனர். தலைமறைவான மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...