Saturday, September 11, 2021

சென்னை இந்தியாவில் டெட்ராய்ட் என்ற பேரை தக்கவைத்துக்கொள்ளுமா?

 ஃபோர்ட் கார் உற்பத்தி நிறுவனம் தன் சென்னை தொழிற்சாலையை அடுத்த வருடம் மத்தியில் முழுவதுமாக மூட உள்ளது. மிகவும் வருந்தத்தக்க ஒரு முடிவு, ஆனால் லாப நஷ்ட கணக்கில் அந்த நிறுவனம் எடுத்த முடிவு. அதன் நேரடியான முடிவில் யாரும் தலையிட முடியாது. இதன் விளைவுகள் தமிழக தொழிற் வளர்ச்சியில் ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.

சென்னையில் உள்ள நேரடி பணியாளர்கள் 2600க்கும் மேல். அவர்களில் பெரும்பாலோர் புறநகர் பகுதியில் வசிப்பவர்கள். வண்டலூர், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில், காட்டாங்கொளத்தூர் பகுதிகள் மற்றும் செங்கல் பட்டு போன்ற பகுதிகளில் பொருளாதார மேம்பாட்டுக்கு இந்த தொழிற்சாலை ஒரு முக்கிய காரணம். மறைமலை நகர் ஒரு புறநகர் தொழிற்பேட்டையாக ஒருவானபோது அவ்வளவு பெரும் வரவேற்பு இல்லை. ஒரு விதமாக, மந்தமாகத்தான் இருந்தது. ஃபோர்ட் நிறுவனம் வந்த பின் தான் சூடு பிடித்தது. இதனால் சந்தை மதிப்பிழப்பு, பணப்பழக்கம் குறைதல், நிலங்கள் விலை குறைதல் போன்றவை ஏற்படும். ஒரு ஆறுதல் செய்தி என்னவென்றால் புதியதாக வரும் புறநகர் பேருந்து நிலையம் ஓரளவு சந்தையை தூக்கி நிறுத்தும்.
இந்த தொழிற்சாலையை நம்பி தமிழகத்தில் சுமார் 4000 சிறு மற்றும் மத்திய நிலை உற்பத்தியாளர்கள் ஃபோர்ட் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் செய்து கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இது ஒரு பேரிடி. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களுக்கு தேவையான அளவுக்கு, ஓரளவு இந்த உதிரி பாகங்கள் தயாரிப்பு தொடரும், ஆனால் அது லாபகரமாக இருக்காது. எனவே தற்போது ஃபோர்ட் வாகனங்கள் வைத்திருப்பவர்களின் நிலையும் சற்று கவலைக்கிடமானதுதான். விற்றால் தகுந்த விலை கிடைக்காது, நாளைடவில் பழுது பார்க்கும் வசதிகளும் குறையும், உதிரி பாகங்களும் அரிதாகப் போகும்.
இதைத்தவிர சர்வீஸ் ஸ்டேஷன்கள், மெக்கானிக்குகள் வேலை இழக்கும் அபாயம்.
1996 தொடங்கி இதுவரை ₹ 5,000 கோடிக்கும் அதிகமாக ஃபோர்ட் நிறுவனம் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் டெட்ராய்ட் என்று சொல்லப்படும் சென்னையில் இரு பெரும் (ஃபோர்ட், யூண்டாய்) கார் தயாரிப்பாளர்கள் இருந்த நிலையில் ஒருவர் மூடிச் செல்வது, கார் உற்பத்தியில் சென்னையின் பங்கை வெகுவாக குறைக்கும். ரெனால்ட் இருந்தாலும் அது அவ்வளவு பெரிய பங்கு வகிக்க இல்லை, என்பது என் எண்ணம்.
மொத்தத்தில், கிட்டத்தட்ட 8000 குடும்பங்கள், 25000-35000 மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
வேறு எவரேனும் இந்தக் கட்டமைப்பை வாங்கி உபயோகப்படுத்துவார்களை எனத் தெரியவில்லை. பெரும்பாலான சாதனங்கள் மற்ற தயாரிப்புகளுக்கு உகந்ததாக இருக்காது.
தமிழக அரசாங்கம், இதை எப்படிப் பார்க்க போகின்றது எனத் தெரியவில்லை. வேறு எவரேனும் கார் உற்பத்தியை தொடங்கினால் சலுகைகள் அளிக்கலாம். அல்லது முன்பு ஜெயலலிதா அரசாங்கம் நெய்வேலி தனியார் மயமாக்கம் போது அந்தப் பங்குகளை அரசாங்கமே வாங்கின மாதிரி, இதில் புதிய முதலீடு செய்து முதலீட்டார்களை வரவேற்கலாம். ஆனால், ஏற்கனவே கடனில் தத்தளிக்கும் அரசு எவ்வளவு முதலீடு செய்ய முடியும் என்பது மிகப்பெரிய கேள்வி.
அசோக் லேலண்ட் ஒரு தொய்வு நிலையிலிருந்து மீண்டு அரசு பேருந்து கொள்முதலினால் ஓரளவு செயல்படுகிறது. ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள் நிறுவனம் மூடப்பட்டது. ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் மூடப்பட்டது. அது இப்போது ஒரு மென்பொருள் வளாகமாகவும், குடியிருப்பு வளாகமாகவும் மாறியுள்ளது.
சென்னை ஆசியாவின் டெட்ராய்ட் என்று ஒரு காலத்தில் போற்றப்பட்டு, பின்னர் தாய்லாந்து அந்தப் பெருமையை தட்டி சென்றதாக செய்தில் கூறுகின்றன. இந்தியாவின் டெட்ராய்ட் என, பெருவாரியான தயாரிப்புகள் சென்னையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. அந்தப்பெருமையையாவது நிலை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...