முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய் செலவில் நினைவு மண்டபம் கட்டப் போவதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.இதை மனதார பாராட்டி, வரவேற்று பேசி இருக்கிறார் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம்.
மேலும், 'என் தந்தை, தலைவர் கருணாநிதியின் பரம பக்தர்' என்று வேறு புகழாரம் சூட்டி இருக்கிறார், இந்த மகானுபாவர்!அ.தி.மு.க.,வை தோற்றுவித்த எம்.ஜி.ஆருக்கு தீயசக்தியாக தெரிந்தவர், கருணாநிதி.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன் இறுதி காலம் வரை பரம எதிரியாக கருதிய நபரும் கருணாநிதி தான்.ஜெயலலிதாவால் முதல்வர் பதவி பெற்ற பன்னீர்செல்வத்திற்கு, இன்று கருணாநிதி ஒப்பற்ற தலைவராகத் தெரிகிறார்.'சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்பர்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல்கள் எல்லாம் வரிசையாக வலம் வர ஆரம்பித்து விட்டன.பன்னீர்செல்வம், வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த போது கட்டிய அடுக்கு மாடி குடியிருப்புகள் எல்லாம் தரமற்றவை என்பது, வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டன.இதில் சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் தாமோதரன் உறுதி அளித்திருப்பது, அவருக்கு பீதியை கிளப்பி விட்டது.
அதனால் தான் தி.மு.க.,விடம் சரணாகதி அடைய தயாராகி விட்டார் போலும்!கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை விவகாரம், முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு தலைவலியை உண்டாக்கி விட்டது.முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் தங்கமணி, 2.38 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போன விஷயத்தில் வகையாக சிக்கி உள்ளார்.'பயிர் கடன் ரத்து செய்த விவகாரத்தில், 515 கோடி ருபாய் மோசடி நடந்துள்ளது' என்கிறார், அமைச்சர் பெரியசாமி.கிணறு வெட்ட பூதம் கிளம்பி வந்தது போல, அ.தி.மு.க., அமைச்சர்கள் எல்லாம் கொள்ளை அடித்த விஷயம், இப்போது அம்பலமாகி வருகிறது.

அதனால் தான் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் எல்லாம், இன்று தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு, 'ஜால்ரா' அடிக்க துவங்கி விட்டனர்.'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அ.தி.மு.க., அமைச்சர்களின் ஊழலை அம்பலப்படுத்தி சிறைக்கு அனுப்புவோம்' என்று அடித்து சொன்னார், ஸ்டாலின்.இந்த விஷயத்திலாவது, முதல்வர் ஸ்டாலின் சொன்னபடி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment