Sunday, October 31, 2021

``அதிமுக என்ற யானை மீது அமர்ந்திருந்த கொசு சசிகலா!" - போட்டுத்தாக்கும் ஜெயக்குமார்.

 'சசிகலாவை அதிமுக-வில் இணைக்க வேண்டுமா, இணைக்கக்கூடாதா' என பட்டிமன்றத் தலைப்பிட்டு சூடு பறக்க விவாதம் நடத்திவருகிறார்கள் அந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள். கட்சியின் அதிகாரபூர்வ முடிவுகளை எடுக்கக்கூடிய இரட்டைத் தலைமைகளும்கூட இந்த விஷயத்தில் இரண்டுபட்டு நிற்பதுதான் கூடுதல் சிக்கலுக்கு வழி வகுத்துள்ளது.

இந்த நிலையில், 'சசிகலாவை எக்காரணம் கொண்டும் அதிமுக-வில் சேர்க்க முடியாது' என்று கட்சியின் நிலைப்பாட்டை முன்வைத்துப் பேசிவருகிற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
''கடந்தகாலத்தில், அதிமுக ஜெ., ஜா என இரு அணிகளாகப் பிரிந்து நின்றபோது, எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சிக்காக பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்து விலகினார் ஜானகி அம்மாள். அதுபோன்று சசிகலாவும் பெருந்தன்மையுடன் தூர இருந்து கட்சியைப் பார்த்து ஆனந்தம் அடைந்து கொள்வதுதான் சிறந்த பண்பு. அதைவிட்டு விட்டு 'அரசியலிலிருந்து விலகிவிட்டேன்' என்று அறிவித்துவிட்டு மறுபடியும் அரசியலுக்குள் வருகிறேன் என்று சொல்வது சரியல்ல. ஏற்கனவே ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதும் 'கட்சியில் என் தலையீடோ என் குடும்பத்தினரது தலையீடோ இருக்காது' என்று எழுதிக்கொடுத்தவர்தான் சசிகலா.
ஆனால், இரும்பு பிடித்தவன் கையும் சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது என்பதுபோல், 'பதவி, பந்தா' சுகம் மீண்டும் கிடைக்கவேண்டும் என பல பகீரத முயற்சிகளை எல்லாம் சசிகலா எடுத்துவருகிறார். ஆனால், எந்த நிலையிலும் அவரின் முயற்சிகள் எடுபடப்போவது கிடையாது.''
''சசிகலா தயவால், முதல்வர் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிதான், 'சசிகலாவை மீண்டும் அதிமுக-வுக்குள் இணைத்தால் தனது தனிப்பட்ட அந்தஸ்தை இழக்க நேரிடும்' என்று பயப்படுவதாகச் சொல்கிறார்கள்...
''இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில், 2017-ம் ஆண்டு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் இன்றைய எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில், சசிகலாதான் 'கிங் மேக்கர்' என்பதுபோன்ற ஒரு மாயையை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள். அன்றைய சூழலில், சசிகலா இல்லையென்றாலும் கூட எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா வழியிலான ஆட்சியை நாங்களே ஏற்படுத்திக்கொண்டிருப்போம்தான்.
எனவே, யானை மீது வந்தமர்ந்துவிட்ட கொசு, 'நான்தான் பலசாலி' என்று எண்ணிக்கொண்டால் அது அந்தக் கொசுவின் அறியாமை என்றுதான் சொல்லவேண்டும்.
மக்கள் மற்றும் அ.தி.மு.க தொண்டர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் சசிகலாவும் அவரின் குடும்பத்தினரும். இப்படிப்பட்ட ஒரு நபரை நாங்கள் மட்டும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?''
''நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என தொடர்ச்சியாக அ.தி.மு.க தோல்வியை சந்தித்துவரும் வேளையில், 'அனைவரும் ஒன்றுபட வேண்டும்' என சசிகலா சொல்லிவருவது நியாயமானதுதானே?'' என சிலர் கருதுகின்றனர்
''அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று சொல்வதற்கு இவர் யார்? அமமுக-விலுள்ள குரூப்களை வேண்டுமானால், இவர் போய் ஒன்று சேர்க்கட்டும் அல்லது அந்தக் கட்சிக்கேகூட பொதுச்செயலாளர் ஆகிக்கொள்ளட்டும்.
மற்றபடி அதிமுக எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஊராட்சித் தேர்தல் எல்லாம் ஒரு தேர்தலா? ஆட்சியில் இல்லாதபோதே அராஜகம் செய்துவருகிற தி.மு.க-வினர் இப்போது ஆட்சிப் பொறுப்பில் வேறு இருக்கிறார்கள். சாம, பேத,தான, தண்டம் என அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தி அராஜகமான முறையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எனவே, இதையெல்லாம் நாங்கள் ஒரு வெற்றியாகவே கருதவில்லை.
சட்டமன்றத் தேர்தலில், வெற்றி பெற்ற தி.மு.க-வுக்கும் தோல்வியடைந்த அ.தி.மு.க-வுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் என்பது 3% மட்டுமே. அதாவது, அ.தி.மு.க-வுக்கு விழுந்த வாக்குகள் 1 கோடியே 40 லட்சம். அதுவே தி.மு.க-வுக்கு ஆதரவான வாக்குகள் என்பது 1 கோடியே 54 லட்சம். வெறும் 14 லட்சம் ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம். அதனால்தான் தி.மு.க-வினரேகூட இதை 'மகத்தான வெற்றி' என்று குறிப்பிடுவதில்லை. ஆக தப்பித்தோம் பிழைத்தோம் என்று முதல்வராகியிருப்பதால்தான், மு.க.ஸ்டாலினும்கூட மகிழ்ச்சியாக இல்லை. ஆக, அ.தி.மு.க-வுக்கு 1 கோடியே 40 லட்சம் பேர் நம்பி வாக்களித்திருக்கிறார்கள் என்றால், கட்சி பலமாகத்தானே இருக்கிறது.''
''சசிகலா, அ.தி.மு.க பொதுச்செயலாளர் இல்லை என்பதற்கான ஆதாரத்தை அ.தி.மு.க-வினர் யாரும் தன்னிடம் காட்டவில்லை என எம்.ஜி.ஆர் நினைவு இல்ல நிர்வாகியும் எம்.ஜி.ஆரின் பேரனுமாகிய குமார் ராஜேந்திரன் சொல்கிறார் என சிலர் கூறுகின்றனர்
''இதுபோன்று அவர் சொல்லியிருந்தால், உண்மையிலேயே அவர் நீதிமன்ற அவமதிப்புக்குத்தான் உள்ளாவார். ஏனெனில், அ.தி.மு.க என்பது நாங்கள்தான் என்பதை கட்சியின் பொதுக்குழுவில் ஆரம்பித்து டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என எல்லா அமைப்புகளுமே அங்கீகாரம் செய்துள்ளது.
அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தை மதிக்கிறேன். ஆனால்...
எடப்பாடி பழனிசாமி
சசிகலா அன்றைக்கு அ.தி.மு.க கொடியை ஏற்றியபோது, 'எந்த உரிமையில் நீங்கள் அ.தி.மு.க கொடி ஏற்றலாம்...' என்று கூறி நாங்கள் வாக்குவாதம் செய்திருக்க முடியும். ஆனால், இதன் தொடர்ச்சியாக அங்கே ஒரு சண்டை எழத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது. எனவேதான் நாங்கள் அவ்வாறு செயல்படவில்லை. எங்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது. எனவேதான், சசிகலா எந்தெந்த பிரிவிகளின் கீழ் எல்லாம் தவறிழைத்திருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி முதற்கட்டமாக காவல்துறையில் புகார் கொடுத்துள்ளோம்!''
''சசிகலாவை அ.தி.மு.க-வில் சேர்ப்பது இல்லை என்ற முடிவுக்கு முக்குலத்தோர் எதிர்ப்பு தெரிவிப்பர். எனவேதான் முத்துராமலிங்கனார் குருபூஜைக்கு முன்பாக சசிகலா ஆதரவு என்ற நாடகத்தை அரங்கேற்றுகிறார் ஓ.பி.எஸ் என அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி சொல்கிறார்...
''ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கனார். அதனால்தான் எந்தக் கட்சியின் ஆட்சிக் காலத்திலும் செய்யாத அளவுக்கு 13 கிலோ தங்கத்திலான கவசத்தை ஜெயலலிதா ஆட்சிக்காலத்தின்போது செய்துகொடுத்து சிறப்பு செய்தோம். எனவே, முத்துராமலிங்கனார் மீது எங்களுக்கு அதிக பற்றும் பாசமும் உள்ளது. தொன்றுதொட்டு நாங்கள் குருபூஜை நிகழ்வில் கலந்துகொண்டும் வருகிறோம் எனவே, இதை முன்வைத்து வீண் விமர்சனங்கள் செய்வது தேவையற்றது.''
ஓ.பன்னீர்செல்வம்
''முதல்வர், முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் என ஓ.பன்னீர்செல்வத்தின் தொடர்ச்சியான கோரிக்கைகள் அனைத்தும் அ.தி.மு.க-வில் நிராகரிக்கப்பட்டே வருகிறது என்பதால்தான் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க நிலைப்பாட்டுக்கு மாறாக செயல்பட்டு வருகிறார் என சிலர் கருத்து சொல்கிறார்கள்...
''அ.தி.மு.க-வில் ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது மிகவும் பிரதான பதவி!
கட்சியிலுள்ள நானே அந்த ஒருங்கிணைப்பாளர் குறித்து விமர்சனம் செய்வதென்பது ஆரோக்கியமான நடைமுறை அல்ல. எனவே, இந்தக் கேள்விக்கெல்லாம் என்னால் விலாவாரியாக பதில் சொல்ல முடியாது. எனவே, இந்தக் கேள்வியை நீங்கள் அவரிடம்தான் கேட்கவேண்டும்.'
இவ்வாறு ஜெயக்குமார் அவர்கள் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...