Sunday, October 31, 2021

அப்பாவுக்கு தப்பாத மகன் Dr .விஜய் ஜெய்சங்கர் !

 #ஜெய்சங்கர்

அப்பாவுக்கு தப்பாத மகன் Dr .விஜய் ஜெய்சங்கர் !
மக்கள் கலைஞருடன் 30 + வருடங்கள் பழக்கமிருந்தாலும் கூட ,Dr விஜய் அறிமுகமான சம்பவம் எனக்கு மறக்க முடியாதது.
2000 ம் வருடம் மே மாதம் குவைத்தின் சிவரஞ்சனி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க வேண்டி நடிகர் ஜெய்சங்கரை ஏற்பாடு செய்துக் கொடுத்திருந்தேன்.
என்ன மாதிரி மனிதர் அவர்!
கடல் கடந்தும் சேவை செய்து வரும் தமிழர்களின் லிஸ்ட் கொடுங்கள் .அங்கு வரும் போது அவர்களை நான் கவுரவப்படுத்த வேண்டும் என்று என்னிடம் கேட்டு வாங்கி பரிசு பொருட்களும் வாங்கி வந்திருந்தார்.
ஆனால் என்ன கொடுமை பாருங்கள்..
விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போதே அவர் மயங்கி விழ, உடனே மருத்துவமனை ! நேராக ஐ.சி.யூ ! அவருக்கு நினைவு பிசகி.. கோமா !
நிகழ்ச்சி ரத்து என்பது ஒரு புறமிருக்க அவரது உடல் நிலையை சரிபண்ணி எப்படி பத்திரமாய் ஊருக்குத் திருப்பி அனுப்புவது என்கிற கவலையும் சேர்ந்துக்கொண்டது.
நண்பர்கள் BN ராஜன் முதல் பலரும் அவரை கூட இருந்து கவனித்துக்கொண்டனர்.
ஒரு வார தீவிர சிகிச்சைக்கு பிறகும் கூட அவருக்கு நினைவு திரும்பாமல் போகவே Dr. விஜய்க்கு விசா அனுப்பி அவரை வரவழைத்தோம்.
விஜய், மன கஷ்டம் தாங்காமல் "எங்க அப்பாவை மேற்கொண்டு இங்கே வைத்திருக்க வேண்டாம். அனுமதி தாருங்கள். தனி விமானம் ஏற்பாடு செய்தாவது அழைத்துப் போகிறேன்!" என்று டாக்டர்களிடம் மன்றாடினார்.
அந்த சமயத்தில் ஒரு ஆச்சரியம்!
ஜெய்சங்கருக்கு திடீரென உணர்வு திரும்பிற்று. மெல்ல கண் திறந்து அவர் பேச ஆரம்பித்ததுமே, நிகழ்ச்சி எப்போது என்று அவர் கேட்டுக் கொண்டேயிருந்தார். பிறகு கொஞ்சம் உடல் தேறி, அழைத்துச் செல்ல டாக்டர்கள் அனுமதியளித்தனர்.
ஆனால், ஜெய், " நிகழ்ச்சி வையுங்கள். எனக்காக இங்கே உதவினவர்களுக்கும் உழைத்தவர்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும்!" என்று பிடிவாதம் பிடித்தார்.
சரி, அவரது திருப்தி... சந்தோஷத்திற்காக நிகழ்ச்சி வைத்துவிடலாம் என்று ஏற்பாடு செய்ய , அதிர்ச்சியாக மறுபடியும் அவருக்கு நினைவு போயிற்று. அந்த 15 நாட்களும் விஜய் அனுபவித்த வேதனைகள் கொஞ்சமில்லை.
பிறகு அனைவரது பிரார்த்தனையின் பலனாய் ஜெய்க்கு நினைவு திரும்பவே மறுநாளே அவரை பத்திரமாய் ஊருக்கு அனுப்பிவிட முயற்சித்தோம்‌.
ஊரில் முழு ஓய்வு வேண்டும்--- வெளிநாடு போகக் கூடாது என்று மருத்துவர்கள் சொல்லியிருந்தும் கூட ஒப்புக்கொண்ட தேதியில் போயாக வேண்டும் என்று வீட்டில் சண்டை பிடித்து, கிளம்பி வந்திருக்கிறார் ஜெய்.
இதில் விஷேஷம் பாருங்கள் ...அத்தனை மோசமான உடல்நிலையிலும் கூட குவைத்தில் அனாதை ஆசிரமத்திற்கு நிதி திரட்டிட வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. அவருக்கு அப்படி ஒரு விசால-பரந்த சிந்தனை!
ஆனால் ...
அவரை சென்னைக்கு அனுப்பி வைத்த அடுத்த ஒரு மாதத்திலேயே( ஜூன் 3-2000 ல் ) ஒரு நல்ல - தூய்மையான - நட்புக்கு இலக்கணமான மனிதரை நாம் இழக்க வேண்டி வந்தது.
அந்த இழப்பில் துவண்டு விடாமல் , விஜய் ,மருத்துவ மனைவியுடன் இணைந்து வேகமாய் வளர்ந்திருக்கிறார். ஜெய்யின் பெயரிலேயே கிளினிக்குகள்!. அங்கு ஜெய் மட்டுமல்லாது பிரபலங்களுடனா அவரது Blow upகள்! விஜய்,வருபவர்களிடம்,இனிமையாய் பேசி, அவர்களுக்கு தெம்பளித்து பம்பரமாய் சுழன்று வருகிறார்.
விஜய்யிடம் எப்போதும் உற்சாகம். ஜெய் பேரில் உள்ள மதிப்பில் பிரபலங்கள் பலரும் இவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
"நான் கண் டாக்டராகி ஆயிரம் பேருக்கு ‘ஆபரேஷன்’ செய்ய வேண்டும் என்பதுதான் அப்பாவின் ஆசையாக இருந்தது. அவரது விருப்பப்படியே நானும் இதுவரை 90K + நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து அவருடைய ஆசையை நிறைவேற்றி இருக்கிறேன்."
பூரிப்போடு சொல்கிறார்--அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த பிரபல கண் மருத்துவருமான விஜய் சங்கர்.
ஜெய் போலவே அதே பண்பும் ..நட்பும்..கனிவும்...மனிதாபிமானமும் மிக்கவர். இலவச கண் சிகிச்சை முகாம்களும் உற்சாகம் குறையாமல் நடத்திக்கொண்டிருப்பவர்.
அப்பாவின் லட்சியத்தை நிறைவேற்றியதால் அவரது ஆன்மா எங்களை என்றும் ஆசீர்வதித்து கொண்டுள்ளது. அதனாலேயே எங்களால் வெற்றிகரமாய் செயல்பட முடிகிறது என்று உருகுகிறார் விஜய்.
உண்மை!
--------------------------------------------------

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...