Thursday, October 28, 2021

தெரியுமா-இவரை#.

 ஆல் இண்டியா ரேடியோ .. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி ..

TV காலத்துக்கு முந்தையவர், எங்களை போல.
இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இவரின் இன்முகம் காண்போமே .. !
வயது 85
இந்த உலகில் அழகால் அறியப்படுபவர்களுக்கு இணையாக குரலால் அறியப்பட்டு, அழியாப் புகழ் பெற்றவர்களும் இருக்கிறார்கள்.
இப்படி தமது குரலால் புகழ் பெற்றவர்களில் முக்கியமான ஒருவரைத் தேடி கண்டடைந்தோம்.
அவர்தான் அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளரான “கலைமாமணி’ சரோஜ் நாராயண சுவாமி.
சென்ற தலைமுறை தமிழர்கள், தில்லியிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ்ச் செய்திகளை இவரது கம்பீரமான குரலுக்காகவும், உச்சரிப்புக்காகவும் விரும்பிக் கேட்டிருக்கிறார்கள்.
இப்போது மும்பையில் வசிக்கும் சரோஜ் நாராயணசுவாமி இந்த 82 வயதிலும் முதுமையின் சுவடுகள் எதுவும் முகத்தில் தெரியாமலும், அதே கம்பீரமான குரலுடனும் பேசுகிறார்.
அவர் நம்மிடம் பகிர்ந்ததை கேளுங்கள்
“என்னுடைய முன்னோர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
ஆனால் நான் பிறந்து வளர்ந்து பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தது எல்லாம் மும்பையில்தான்.
எனக்கு மும்பை ஜென்மபூமி.
தில்லி கர்மபூமி.
அதாவது நான் பிறந்தது மும்பை என்றாலும் சம்பாதித்து புகழ் பெற்றது எல்லாம் தில்லியில்.
நான் அகில இந்திய வானொலிக்கு வருவதற்கு முன்பு யூகோ வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.
இந்த வங்கியும் அகில இந்திய வானொலிக்கு அருகிலேயே இருந்தது.
பின்னர் அகில இந்திய வானொலியில் தேர்வுகள் எழுதி பணிக்குச் சேர்ந்தேன்.
பல்வேறு மாநில மொழிகளில் வரும் செய்தி அறிக்கைகளில், நான் தமிழ்ச் செய்தி வாசிப்பாளரானேன்.
படிப்படியாக முன்னேறி, செய்திப் பிரிவில் உயர்ந்த பதவிகளை அடைந்தேன்.
செய்தி வாசிப்பில் உச்சரிப்பு என்பது ஆத்மாவைப் போன்றது.
எனக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் உச்சரிப்பை உற்றுக் கவனித்து தவறு இருந்தால் திருத்துவேன்.
செய்தி வாசிப்பாளருக்கு ஒரு மொழியியல் அறிஞரைப் போல மொழியைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும்.
செய்தி வாசிப்பில் பிறநாட்டு வார்த்தைகள் வந்தால், அந்தநாட்டு தூதரகத்தையோ, கலாசார மையத்தையோ தொடர்பு கொண்டு அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்த பின்னர்தான் செய்தியில் பயன்படுத்துவேன். உச்சரிப்பில் தவறு வந்துவிடக்கூடாதே என்பதற்காகத் தான் இந்த முயற்சி.
செய்தி வாசிப்பாளர்க்கு ஆங்கிலம், ஹிந்தியிலிருந்து பிராந்திய மொழியில் மொழி பெயர்க்க வேண்டும்.
அதிகாலை 5.30க்கு செய்தி என்றால் 3.30க்கே மொழி பெயர்ப்பு செய்வதற்காக வந்துவிடுவேன்.
கடும் குளிரும், கடும் வெப்பமும் நிலவும் தில்லியில் எனது குரல் எந்தவிதத்திலும் பாதிக்காதது எனது அதிர்ஷ்டமே.
வானொலி நிலையத்திலுள்ள திரைப்பிரிவிலும் நான் வாய்ஸ் தந்துள்ளேன்.
மொரார்ஜிதேசாய், இந்திராகாந்தி, பி.வி.நரசிம்மராவ் போன்ற பாரத பிரதமர்கள், முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமனையும் நேர்காணல் செய்திருக்கிறேன்.
இந்திரா காந்தி என்னைக் கவர்ந்த பெண்மணி.
ஒரு பிரதம மந்திரியாக மட்டும் இல்லாமல் இந்திராவை ஒரு சகோதரி போல நினைத்தேன்.
அன்னை இந்திரா சுட்டுக் கொல்லப்பட்ட நாளன்று மாலை தகன நிகழ்ச்சிகளை, நான் மனதைக் கல்லாக்கிக் கொண்டு படித்தேன்.
அந்தக் காலத்தில் கேபினட்டில் இருந்த ஒரே “ஆண்மகன்’ அன்னை இந்திராகாந்தி என்பேன்.
முப்பத்தைந்து ஆண்டுகள் பணி நிறைவுக்குப் பின் செய்திப் பிரிவில் பணியாற்றினேன்.
எனது பிள்ளைகளின் அனைவரது அரவணைப்பிலும் அன்பிலும் மனநிம்மதியாக இருக்கிறேன்.
ஓய்வு நேரங்களில் டி.வி. பார்க்கிறேன். குறிப்பாக செய்தியைக் கவனிக்கிறேன்.
சில பேர் உச்சரிப்பில் தவறு செய்கிறார்கள். ழ, ல, ள, வித்தியாசம் பலருக்குத் தெரியாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.
தமிழ் தனியார் பண்பலைகளைக் கேட்டதில்லை.
பேசத் தெரிந்தால் போதும், எதைவேண்டுமானாலும் பேசலாம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
நம் நாட்டில் ரேடியோ ஒலிபரப்புக்கென்று ஒரு பாரம்பரியம் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனக்கு கடந்த 2008ம் ஆண்டு கலைமாமணி விருது, கலைஞர் கையால் கிடைத்தது.
நான் ஷீரடி சாய்பாபாவின் தீவிர பக்தை.
நான் வாழ்வதும், உங்களுடன் பேசிக் கொண்டிருப்பதும் பாபா தந்த அருள்தான்.’
பேட்டி எடுத்தவர் - ராகவ்குமார்
முகமறியா அன்பர்களுக்காக
இப்புகைப் படம் பதிவு.
May be an image of 1 person and outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...