ம.தி.மு.க., தலைமை நிலைய செயலர் துரைக்கு ஆதரவு கடிதம் தராத நிர்வாகிகளின் கட்சி பதவிகளை பறிக்கும் படலம், அக்கட்சியில் தொடர்கிறது.

முதல் கட்டமாக, நாமக்கல் மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ மகன் துரைக்கு, சமீபத்தில், தலைமை நிலைய செயலர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு ஆதரவு தெரிவித்து, மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்களிடம் கடிதம் கேட்கப்படுகிறது.கடந்த 20ம் தேதி நடந்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தை, 18 நிர்வாகிகள் புறக்கணித்தனர். அவர்களிடமும் துரைக்கு ஆதரவு கடிதம் கேட்டு, நெருக்கடி அளிக்கப்படுகிறது.
ம.தி.மு.க., உயர்நிலை குழு உறுப்பினரும், நாமக்கல் மாவட்டச் செயலருமான டி.என்.குருசாமி, 20ம் தேதி கூட்டத்திற்கு வரவில்லை.இதனால், நேற்று அவரிடமிருந்த மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரிடம் உயர்நிலை குழு உறுப்பினர் பதவி மட்டும் உள்ளது.இது குறித்து, வைகோ வெளியிட்ட அறிக்கையில், 'நாமக்கல் மாவட்டம், கட்சி நிர்வாக வசதிக்காக, நாமக்கல் கிழக்கு, மேற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.'கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக எஸ்.சேகர், மேற்கு மாவட்ட பொறுப்பாளராக கே.கே.கணேசன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்' என தெரிவித்துள்ளார்.குருசாமியின் பதவி பறிக்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதால், அம்மாவட்ட ம.தி.மு.க.,வினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரிடம், துரைக்கு ஆதரவாக கடிதம் கேட்டு நெருக்கடி தரப்பட்டுள்ளது. ஆனால், அவர் தரப்பில் ஆதரவு கடிதம் தர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் ராஜினாமா கடிதம் கொடுக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, விரைவில் அவரது பதவியும் பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது.துரைக்கு ஆதரவு கடிதம் தராமல் இழுத்தடிக்கும் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் பதவி பறிப்பு தொடரும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment